“ஊகச் சுதந்திரம்”
Thanks for Sathiyakkadathaasi
- ராகவன்
கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை மலின ‘விலை’க்கு விற்று வேறு இணையங்களில் பதிவுக்குள்ளாக்கி, பின்னர் தமிழாக்கி அதனைச் செய்தியாக்கி, வதந்தி பரப்பும் ‘தேசம் நெற்’றின் இழி நடத்தையை ‘ஊடகச் சுதந்திரமெ’ன்று பெயரிட்டு அதற்கான விளக்க உரை கொடுப்பதாகச் சொல்லி கடந்த 16.11.08 அன்று ‘தேசம்நெற்’ ஏற்பாட்டில் லண்டனில் கூட்டமொன்று நிகழ்ந்தது.
‘தேச’பிதாக்கள் சேனன், ஜெயபாலன், கொன்ஸ்ரன்ரைன், சோதிலிங்கம் வீற்றிருக்க, புதியவன் தலைமை தாங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போகாமலேயே கூட்டத்தில் நடந்தவையென்று வதந்திகளைக் கசியவிடும் ‘தேசம்’ பாணி ஊத்தைவேலை செய்து எனக்குப் பழக்கமில்லை. அதனை ‘ஊக’ சுதந்திரமாக தேசம் வரித்து ‘ஊடக’ சுதந்திரமாக வசைகளை வாரி இறைக்கும் பாணியும் எனக்கு பழக்கமில்லை.
இந்த விசர் கூத்துப் பார்ப்பதற்கு எனக்கு முதலில் விருப்பம் இருக்கவில்லை. முதல்நாள் குறும்பட விழாவில் கலந்து கொண்டபோது சபேசன், கெங்கா ஆகியோர் ‘நீங்கள் வர வேண்டும்’ என கேட்டபோது எனக்குள் ‘போய் பார்த்து நாலு கேள்வியை கேட்டால் என்ன’ என்று ஒரு சலனம். நண்பர் கீரன் ‘தூங்குகிறவனை எழுப்பலாம் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது’ என்ற முதுமொழியில் அபாரநம்பிக்கை வைத்திருந்ததால் அவர் இந்த மலின நாடகத்தை பார்ப்பது வீணே பொழுதைப் பாழடிக்கும் செயல் எனச் சொல்லியிருந்தார்.
எனது சகோதரர்கள் இருவர் என்மீது தேசம்நெற்றால் சுமத்தப்பட்ட பழிகளால் மன அழுத்தங்களுடனிருந்தார்கள். அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து தங்களது கண்டனங்களைத் தெரிவிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் அங்கிருந்தபடியே என்னையும் கூட்டத்திற்கு வருமாறு தொலைபேசியில் வற்புறுத்தினார்கள். முதல் நாளில் தோன்றிய சலனம் இப்போது முற்றி அது என்னையும் அந்தக் கூட்டத்திற்கு அழைத்துப் போயிற்று.
அப்போது ஆறு மணிக்கு மேலாகியிருக்கும். நான் போயிருந்தபோது நாவலன் தனது உரையை முடித்திருந்தார். அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. விவாதக்களம் திறக்கப்பட்டது. பலர் தேசத்தின் பின்னூட்டப் பகுதி மோசமானது என்றனர். “தேசம் தனக்கு ஒரு ‘அஜென்டாவை’ வைத்துக்கொண்டு மற்றவர்களை அதனை அங்கீகரிக்க கேடகிறது” என்றார் சந்திரகுமார். “ஒரு ஊடகத்திற்கு அறம், பொறுப்புணர்வு செய்திகளின் நமபகத்தன்மையை உறுதிசெய்தல் ஆகியன அவசியம், அது தேசத்திடம் இல்லை” என்றார் தவராஜா. ஜென்னி “புனை பெயரில் எழுதுவதன் காரணம் மரண ஆபத்தை தடுக்கவே, தேசம் ஒருவருடம் காலடி வைப்பதற்கு வாழ்த்துகள், இணையத்தளம் வீதிநாடகம் நடத்துமளவுக்கு தன்னை விரித்துக்கொண்டது ஆரோக்கியமான நிகழ்வு” என தேசத்தை பற்றிய புகழாரத்தை சூட்டினார்.
ஜென்னி, நாவலன், மற்றும் தேசம் ஆசிரியர்கள் தவிர வந்தவர்களில் பெரும்பாலோர் தேசம் நாசம் செய்வதாகவே அபிப்பிராயப்பட்டனர். 20 -25 பேர்வரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். “தேசம் பிழை விட்டு வருகிறது, அது திருந்தவேண்டும்” என்ற பழைய பல்லவியே எனது கருத்துகளையும் கேள்விகளையும் நான் முன் வைக்கும் வரை அந்த நாடகத்தின் ‘மெயின் ஸ்கிரிப்டாக’ இருந்தது.
சில மாதங்களிற்கு முன் ‘கலைச்செல்வன் நினைவு ‘ நிகழ்வில் தேசத்தைத் திருத்தலாமென கனவு கண்டவர்கள் சில காத்திரமான விடயங்களை முன்வைக்க, ‘தேசத்திற்கு தடை! தேசத்தை படியாதே! பார்க்க்காதே! எனப் பாரிஸ் கூட்டத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆப்பு’ எனத் திரித்து வெளியிட்ட தேசத்தின் பொறுப்பின்மையும் கயமையும் எனக்கு நினைவுக்கு வந்தது.
நாடக இயக்குனர்கள் பல தயாரிப்புகள், அறிக்கைகள் சகிதமாக வந்திருந்தனர். ‘அவதூறுகளுக்கு பதில்’ என்ற கூட்டறிக்கைக்கு மார்க்கட்டிங் சர்வே பாணியில் புள்ளி விபரங்கள் திரட்டி வந்திருந்தனர். எனக்கு தயாரிப்புகள் தேவையாக இருக்கவில்லை. ஏனெனில் அந்த மலின நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் தேவை எனக்கு இருக்கவில்லை. அங்கு தத்துவ உசாவலோ, அரசியல் கலந்துரையாடலோ சமூக கரிசனை கொண்ட பிரச்சனையோ விவாதிக்கப்படயிருந்தால் அதற்கு நிச்சயம் தயாரிப்பு அவசியம். அந்த தேவை அங்கு இருக்கவில்லை. நான் அங்கு சென்ற பின்பாகக் கூட்டத்தில் நிகழ்ந்தவற்றில் எனது நினைவுகளில் இருப்பதை மட்டும் இங்கு தருகிறேன். விடுபடல்கள், தவறுகள் கூட இருக்கலாம். நாடகத்தின் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.
தேசத்தின் புனைவுகளுக்கு உறுதுணையாக நின்று உழைத்தவர்களில் நாவலன் குறிப்பிடத்தக்கவர். “இன்டர்நெட் ரவுடி எனத் தன்னைச் சொல்லிப் பெருமை படுபவர் நாவலன்” என ஜெயபாலன் என்னிடம் ஒருமுறை கூறி இருக்கிறார். பெண்கள் பற்றி, தலித்தியல் பற்றி SLDF பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் அதன் பின் தொடர்ந்த மோசமான் பின்னூட்டங்கள் பற்றி அறிவதற்கு கம்ப சூத்திரம் தேவையில்லை. இவர் எழுதிய பின்னூட்டங்களை எந்தப் பெயர்களில் எழுதியிருக்கிறார் என்பதைத் தேசத்தின் ‘தல’ ஜெயபாலன் என்னிடம் முன்னரொரு காலத்தில் தெரிவித்திருக்கிறார்.
அடுத்தவரோடு பேசுவதையெல்லாம் ‘ரெக்கோர்ட்’ செய்து வைக்கும் கில்லாடிப் பழக்கமெல்லாம் என்னிடம் கிடையாததால் ஜெயபாலன் சொன்னவற்றுக்கு என்னிடம் இப்போது ஆதாரங்களில்லை. அவை காற்றிலே கலந்த சொற்கள். எனினும் “யாரைநோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்” என்ற கட்டுரையை எழுதிய ‘புகழை’ நாவலன் தனக்கு எடுத்திருந்தது அனைவருக்கும் தெரியும்.
நாவலனை முகத்துக்கு நேரே அயோக்கியன் என விளித்துத்தான் நான் எனது கேள்விகளையும் கருத்துகளையும் சொல்லத் தொடங்கினேன். ‘அயோக்கியன்’ என்ற சொல் சபைக்கு பொருத்தமில்லை என்பதால் மலின நாடகமாக இருந்தாலும் சபைக்கு கட்டுப்பட வேண்டுமென்ற ஜனநாயக மரபின்படி அவ்வார்த்தையை நான் மீளப் பெற வேண்டியிருந்தது .
“‘ரமிழ் அபையர்’ என்ற இன்னொரு மலின ஊடகத்தில் ஆங்கிலத்தில் வந்த பொய்ச் செய்தியொன்றை SLDFபினர் தமிழில் அறிக்கை விடுவதில்லை என முதலைக்கண்ணீர் வடிக்கும் கூட்டத்தினர் அவசர அவசரமாக தமிழாக்கம் செய்து ‘இனியொரு.com’ என்ற இன்னொரு வெள்ளை வேட்டி இணையத்தளத்தில் பிரசுரித்து, அதனை மேற்கோள்காட்டி நாவலன் என்ற அயோகியன் ‘யாரைநோவது யார்க்கெடுத்துரைப்பது’ என்ற தலைப்பில் SLDF அமைப்பில் இருந்தவர்கள் மாற்றுக் கருத்தின் சொத்தான TBCயை உடைத்தார்கள் என்ற செய்தி வந்ததற்கு மெளனம் காக்கிறார்கள் எனறும், ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வன்முறைக் கும்பல் என்றும் நெடுங்குருதி வழிகிறதென்றும் பல்வேறு விடயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாணியில் செய்து பின்னர் பின்னூட்ட சாக்கடையை திறந்து விட்டு என்னையும் எனது நண்பர்கள் கீரனையும், நீதியையும் திருடர்கள் என்றும் நட்டஈடு கொடு! என்றும் அவதூறு கிளப்பியதற்கு காரணகர்த்தா நாவலன். அதற்குச் சந்தோசமாகச் சாமரம் வீசியது தேசம். இது நிகழ்ந்த காலகட்டம் முக்கியமானது: கீரனின் தாயாரின் மரணச்சடங்கில் இதற்கான அடித்தளம் இடப்பட்டு, ஜெயதேவனுக்கு தகவல் சொல்லப்பட்டு ‘ரமிழ் அபையரில்’ வரப்பண்ணி, பின்னர் மொழி பெயர்த்து தமிழாக்கி ‘யாரைநோவோம்’ என அழகு படுத்தி அரங்குக்கு விடப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட செயல். தேசம் தவறுதலாக செய்த விடயமில்லை” என்றேன் நான்.
கூட்டத்தில் அமர்ந்திருந்த TBC வானொலியின் பணப்பாளர் ராம்ராஜிடம் நான் பகிரங்கமாக இவ்வாறு கேட்டேன்: “TBC” உடைக்கப்பட்டபோது TBC க்கு கீரன் உட்பட நாங்கள் பண உதவி செய்திருக்கிறோம். சுவிற்சர்லாண்டில் TBC பணிப்பாளர் சிறைவைக்கப்பட்டபோது ‘தல’ ஜெயபாலன், உதயன் பத்திரிகையில் ‘கிறிமினல் குற்றச்சாட்டில் ராம்ராஜ் பிடிபட்டிருப்பதாக செய்திவிடும் தருணம், பிடிபட்டது எதற்கு என ஆய்வை மேற்கொள்ளாமல் முதலில் உங்களுக்காக ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்ய நானும் நிர்மலாவும் முயற்சித்தோம். நீங்கள் நம்புகிறீர்களா TBC உடைப்பில் எங்களுக்குத் தொடர்பு உள்ளதென?”.
எனது நேரடியான பகிரங்கமான கேள்விக்குப் பணிப்பாளர் பதில் எதுவும் சொன்னாரில்லை. அவர் எதுவும் பேசவில்லை. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய புதியவன் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தபோதும் ராம்ராஜ் மெளனத்தை கலைக்கவில்லை.
அடுத்ததாக நான் “மாற்றுக்கருத்தளர்கள் மேல் அவதூறு செய்பவர் எனக் கூறப்படும் சேதுவின் ஆதாரத்தை வைத்து நீங்கள் புனைந்த கதை அவதூறு இல்லாமல் வேறு என்ன? என் று கேட்டேன். பலருக்கு எனது நேரடியான கருத்துக்கள் அதிர்ச்சியைத் தந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சபையில் ‘நோகாமல்’ பேசவேண்டும் என்ற உணர்வு பார்வையாளர்களிடம் இருந்தது. அவர்கள் தேசத்தின் அவதூறுக் கலாச்சாரத்தை கண்டித்தாலும் சமரசமாகப் பிரச்சனையைத் தீர்க்கவே அவர்கள் யோசித்தார்கள். தேசம் அறியாமல் தவறு விட்டிருந்தால் இம்முயற்சி வெற்றியளித்திருக்கக் கூடும். ஆனால் திட்டமிட்டு அவதூறுகளைப் புனைந்து சேது போன்ற நம்பகமற்றவர்களின் சம்பாசணையை எடுத்து ஆதாரமாக வைக்கும் கயமைத்தனத்திற்கு சமரசம் தீர்வாகாது. நாங்கள் வெறும் யுத்த நிறுத்தத்தைக் கேட்கவில்லை. தீர்வுப் பொதியுடன் கொண்ட யுத்த நிறுத்தத்தை தான் கேட்டுப் பழக்கம். எனவே இதற்கு அதிர்ச்சி வைத்தியமும் அவசியம்.
ராஜன் என்பவரை ஆதாரமாக வைத்து ‘ஈஸ்ட் காமி’ல் உரையாடல் செய்ததை தேசம் உறுதிப்படுத்தாவிட்டாலும் இந்த விடயங்களை வாசித்து வருபவர்களுக்கு ஊகம் செய்வது அப்படிப் பெரும் கடினமல்ல. இந்த உரையாடலின் போது துணை மேயர் போல் சத்தியநேசனும் உடனிருந்தார் என்று தேசம் குறிப்பிட்டிருந்தது. அவருக்கு நான் ஒரு ஈ மெயில் அனுப்பி இந்த விடயத்தை வெளிக்கொண்டு வருமாறு கேட்டிருந்தேன். பதில் இன்னும் வரவில்லை. ஆனால் கீரனிடம் அவர் சொன்னது ஏற்கெனவே பதிவாகி இருக்கிறது. TBCயை உடைத்ததாகத் தேசம் ஜெயபாலனிடம் ஒப்புக்கொள்ளும் இந்த ராஜனைத்தான் நீங்கள் அகதிகளுக்கு உதவுபவர், சமூக சேவையாளர் என்று தேசத்தில் எழுதுகிறீர்கள். அவர் உண்மை பேச மறுப்பவர் என்பது வெள்ளிடைமலை. அவரது ஆதாரம் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?” என்றேன். யாருக்கும் பதில் சொல்ல திராணியில்லை. “ராகவன் ஆணித்தரமாக விடயங்களை வைத்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்” எனப் புதியவன் சொன்னபோதும் ‘சமூக அசைவியக்கம்’ தேசம் அசையவில்லை.
அதிகாரத்திற்கெதிராக குரல் எழுப்புவதாக ‘பாவலா’ செய்யும் தேசம் அதிகாரங்கள் இல்லாதவர் மேலேயே துணிந்து அவதூறை செய்தது. சபையில் நேரடியாக எழுப்பிய கேள்விகளுக்கு விடையின்றி தவித்தது. இது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏனெனில் திட்டமிட்டு கதைகளை புனைந்து மாற்றுக் கருத்தாளர்களை அவதூறுசெய்பவர்களையே சாட்சியாக்கி தயாரித்த கயமைத்தனத்திற்கு விடை கொடுப்பது சாத்தியமல்ல. இவ்வாறு எனது விமர்சனங்களும் கேள்விகளும் தொடரத் தொடர தேசத்தின் கண்டறியாத ‘ஜெர்னலினஸ’த்தின் மீது பார்வையாளர்களின் தார்மீகக் கோபமும் தொடர்ந்தது. கெங்கா, சபேசன், சந்திரகுமார், பெளசர், யமுனா ராஜேந்திரன் அனைவரும் தேசத்தின் ஊத்தைப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தனர். “நீங்கள் தான் கட்டுரையை போட்டு பின்னூட்டமும் இடுபவர்கள்” என நான் குற்றம் சாட்டினேன். தங்களுக்கு பின்னூட்டங்கள் நிறைய வருவதாகவும் தாங்கள் அதனை கட்டுப்படுத்டுவதாகவும் சோதி சொன்னார். “நீங்கள் பின்னூடங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் கட்டுப்படுத்துகிறீர்கள் என்பது உண்மை, ஏனெனில் ‘அந்த ராத்திரிக்கு என்ன சாட்சியம்?’ என்ற அவதூறுக்கு பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட்டன. அதில் ராகவன், கீரன் TBC திருடர்கள் என்று வந்தவற்றைப் பின்னூட்டமாக போட்டுவிட்டு மற்றவற்றைக் கட்டுப்படுத்தல் தான் உங்களின் தணிக்கை தார்மீகம்” என்றேன் நான்.
” ராகவன் நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்” என்று உணர்ச்சி வசப்படடு வார்த்தைகளை சிந்தினார் சேனன். வெள்ளைக்காரன் மாதிரி எனக்குச் சொல்லவேண்டாம் என நான் கேட்டுக்கொண்டதை கலந்து கொண்டவர்கள் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டனர். நான் கேட்ட கேள்விகள் பதிலற்றே போயின.
சேனன் ‘அவதூறுக்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல’ என்ற கூட்டறிக்கை பற்றிய மார்க்கட்டிங் சர்வே பற்றி பிரஸ்தாபித்தார். ஒரு கூட்டறிக்கையை ஏதோ ஆராச்சிக்கட்டுரையில் தத்துவ பிழைபிடிக்கும் பாணியில் அவரது நாடக அரங்கேற்றம் அமைந்தது. 74 பேர் ஒப்புதல் இட்டு ( ரவியின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்) வந்த ஒரு கூட்டறிக்கை இரண்டு அடிப்படை விடயங்களை கேட்டிருந்தபோதும் அதற்குக்குப் பதில் சொல்லும் அடிப்படை அறமேயற்று கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்களை தொந்தரவு செய்து, இரவு பகலாக தொலைபேசி அடித்து, சொன்னவற்றை அரைகுறையாக விளங்கி, முட்டாள்தனமான விளக்கம் ஒன்று விடப்பட்டது.
சேனனின் விளக்கத்தை கேட்ட பெளசர் “நீங்கள் இன்னும் திருந்தவில்லை என்றார். கூட்டறிக்கைக்கான பதிலை நீங்கள் நிதானமாக வும் பொறுப்புணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றார். ஆனால் முதலையும் மூர்க்கனும் கொண்டதை விடுமா! நீங்கள் எல்லோரும் தவறு என்று சொன்னாலும் நாங்கள் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பெயரைப் பாவித்து அரைவேக்காடு பதிலறிக்கையை விட்டுத்தான் தீருவோமென்று வெளியிட்டது தேசம்.
முடிவாக, என்னை NGO எனத் தேசம் அவதூறு பரப்பியதைக் கடுமையாக எனது சகோதரர் ஒருவர் கண்டிக்க, தேசம் ஆசிரியர் ஜெயபாலன் தனது நாடகத்தைத் தொடங்கினார்.இங்கு தான் கிளைமாக்ஸ்! சோதியின் கமரா குளொசப்பில் “ராகவன் அண்ணனுக்கு தம்பிகள் ஆதரவு கொடுத்தார்கள். எனது அண்ணனை சுட்டு விட்டார்கள்” என ஜெயபாலன் கண்ணீர் உகுக்க இருநிமிட மவுனம். ஜெயபாலனின் சகோதரரின் கொலையை கண்டிப்பதும் அவரது சகோதரர்கள் அதற்காக அழுவதும் பரிகசிக்கப்படக் கூடாதது. துரதிஸ்டவசமாக வடகிழக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதோ காணாமல் போயிருப்பதோ ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. எவர் வீட்டில்தான் இழவு விழவில்லை. கீரன் வீட்டில் விழுந்தது. நீதியின் வீட்டில் விழுந்தது. நிர்மலாவின் வீட்டில் விழுந்தது.கீரனின் குடும்பத்தில் 10 பேர். இன்று மூவரைத் தவிர மீதிப்பேர் உயிருடன் இல்லை. அவரது தாயார் இறந்த வீட்டில் தான் அவதூறுக்கான மேடை அமைக்கப்பட்டது என்பதை நான் நம்புகிறேன். நிர்மலாவின் தங்கையும் சுடப்பட்டவர். நீதியின் தகப்பன் உட்பட 6 பேருக்கு மேல் அவரது குடும்ப அங்கத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கீரன் அய்ந்து வருடங்கள் தடுப்புக் காவலில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர். இவர்களை பார்த்து எவ்வித பொறுப்புமிலாமல் திருடர் என்று சொன்னது ஏன்?
ஜெயபாலனின் துயரில் நான் மட்டுமல்ல அனைவரும் பங்கு கொள்கிறோம். என்றாலும், ஜெயபாலன் கலங்கியது அவ்விடத்தில் பொருத்தமில்லாமல் இருந்தது என்பதே எனது அபிப்பிராயம். இதன் பின் “நானும் கொன்ஸ்டன்டனும் பொது நிறுவனங்கள் பற்றிய விடயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறோம். அப் லிங்க்ஸ் டீ ஆர் டெக்” என அடுக்கிச் சென்றார் ஜெயபாலன். ‘அப் லிங்ஸ்’ வியாபார நிறுவனம். சிலவேளை SLDF ஒரு வியாபார நிறுவனமென அவர் நினைத்தாரோ தெரியாது.
நிற்க, அவதூறு பற்றியோ ஆதாரங்களின் நமபகத்தன்மை பற்றியோ எவ்வித பதில்களும் அளிக்கப்படவில்லை. தாங்கள் பார்வையாளர்கள் வைத்த விமர்சனங்களை கருத்தில் எடுப்பதாகக் கூற நாடகம் ஒத்திவைக்கப்பட்டது. போல் சத்தியநேசன் ‘கருத்தில் எடுப்போம்’ என்று சொன்னதை ஒரு ஒளிக்கீற்றாக பார்த்து, இது ஒரு ‘பொசிட்டிவ் ஸ்டெப்’ என்றார். ஆனால் நாடகத்தை பார்த்த பலர் நாய் வாலை நிமிர்த்த முடியாதென்றனர். அதனை உறுதி செய்ய அவர்களது அறிக்கையும் பின்னூட்டங்களும் பல்லிகளும் தொடர்கின்றன.ஊடக சுதந்திரம் என்ற பதத்தை தவறாக விளங்கியே இவ்வாறான செயலில் தேசம் ஈடுபடுவதாக யாரும் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
‘எதையும் தேவையான போது எழுதுவேன், அதனை தட்டிக்கேட்டால் உடனே ஊடக சுதந்திரம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பேன், அவதூறு செய்வது எனது உரிமை, பொய் செய்தி போடுவது எனது கடமை. உனக்கு வரும அழுத்தங்களுக்கோ பாதிப்புகளுக்கோ நான் பொறுப்பல்ல என்ற திமிர்த்தனமான பதிலே தேசம் ஆசிரியர் குழுவினரிடமிருந்து எமக்குக் கிடைத்திருக்கிறது.
3 Responses to “ஊகச் சுதந்திரம்”
இன்னொரு முக்கிய விடயம் தமிழ் அபையர் பொய் செய்தி பின்னர் தேசம் இனியொரு அவதூறுகள் வெளிவிடப்படும் போது நான் கனடாவில் இருந்தேன். எஸ் அல் டீ எப் கூட்டத்திற்காகவும் பெண்கள் சந்திப்புக்காகவும்நானும்நிர்மலாவும் கனடா சென்றோம். அங்குநான்நின்ற வீட்டுநண்பருக்கும் மற்றும் பலருக்குமீமெயில் வழியாக இப்பொய் வதந்தி அனுப்பபட்டது. ஜெயதேவன் ஜெயபாலன்நாவலன் அசோக் அனைவருக்கும் இந்த கயமைத்தனத்தில் பெரும் பங்குண்டு. நான் கனடாவில் இருக்க கீரனின் தாய் மரணவீட்டிலிருக்க கன்னக்கோல் கொண்ட திருடர்போல் இவர்கள் பொய் செய்தி புனைந்து அவதூறை உருவாக்கினார்கள். எஸ் எல் டீ எப் ஐ குறிவைத்தவர்கள் குறைந்த பட்சம் மற்றய எஸ் எல் டீ எப் காரரிடமாவது ஒரு வார்த்தை கேட்டு இப்படி செய்தி ஒன்று வந்திருக்கிறது உங்களது கருத்தென்ன என்று ஒரு வார்த்தையாவது கேட்டிருந்தால் குறைந்த பட்சம் இவர்களிடம்நேர்மையை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் பொறுக்கித்தனமாகவே இவர்கள்நடந்து கொண்டார்கள்.
ragavan said this on November 20th, 2008 at 4:37 pm
கொம்புளதற்கு ஐந்து முழம்,குதிரைக்குப் பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, வம்புசெறி
தீங்கினர் தம் கண்ணிர் தெரியாத தூரத்தில்
நீங்குவதே நன்னெறி_
தீய மனிதர்களிடமிருந்து கண்ணுக்குத்தெரியாத தொலைவில் இருப்பதே நல்லது.
sugan said this on November 20th, 2008 at 5:15 pm
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்.
தீயவர்களை இனம் கண்டுகொள்ளலாம் ஆனால் கயவர்களை இனம் காணல் கடினம்.
ஏனெனில் அவர்கள் மக்களை போலவே இருப்பர்.
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment