அன்ரன் பாலசிங்கம் - இளையதம்பி ரட்ணசபாபதி - மகா உத்தமன் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் லண்டன் தடங்கள் :ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்
Thanks.
http://thesamnet.co.uk/?p=216
காலம்சென்ற அன்ரன் ஸ்ரானிஸ்லஸ் பாலசிங்கத்தின் 30 வருட கால அரசியல் வாழ்க்கை தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையாகாது. ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது முதல் இறக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்வரிசை உறுப்பினர் பாலசிங்கம். அவரின் ஈடுபாடு தனித்துவமானது, ஈடற்றது, அதற்கும் மேலாக விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர் யாராலும் நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகும்.
ஈழமக்களின் ஆயுதப்போராட்டம் எழுபதுக்களில்; பரிணமிக்க ஆரம் பித்தது. அப்போது சர்வதேச அரங்கில் ஏற்பட்ட கம்யூனிஸ அலை இலங்கைத் தீவின் கரைகளிலும் அடித்தது. ஜேவிபி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து தோல்வி கண்டபோதும் ஆயுதப் போராட்டம் தொடர்பான சிந்தனை ஆழமாக விதைக்கப்பட்டது.
இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராக இளைஞர்கள் குழுக்களாக இயங்க ஆரம்பித்தனர். இக்குழுக்கள் மாணவர் பேரவை, இளைஞர் பேரவை என அமைப்பு வடிவம் பெற ஆரம்பித்தது. இவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அரசாகச் செயற்பட்ட ஆளும்கட்சி அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் அரசின் பாதுகாவலர்களாக இருந்த பொலிசாருக்கு எதிராகவும் திரும்பியது. உரும்பிராய் பொன்னுத்துரை சிவகுமாரனின் வீரமரணத்தை (யூன் 05, 1974) தொடர்ந்து ஏற்பட்ட உணர்வு, உத்வேகம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்ட விரக்தி என்பன இளைஞர்களை ஆயுதங்களை நோக்கித் திசை திருப்பியது.
கூட்டணியினரின் ஆவேச பேச்சுக்கள் இளைஞர்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைத்ததே தவிர, அவை இளைஞர்களை வழி நடத்த தவறின. ஒருபுறத்தில் உண்ணாவிரதம், எதிர்ப்பு போராட்டம் என்ற காந்திய அகிம்சை போராட்ட அணுகுமுறைகள். அதேவேளை மறுபுறத்தில் பல அரசியல் கொலைகளுக்கு கூட்டணியினரின் முக்கிய தலைவர்கள் அளித்த பங்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒரு சாத்வீக அமைப்பாகவோ அன்றி ஒரு தீவிர போராட்ட அமைப்பாகவோ அல்லாமல் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கட்சியாக அடையாளப்படுத்த காரணமாயிற்று.
யூன் 14 1975ல் வேகமாக மாறி வந்த அரசியல் சூழலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TLO) அங்குரார்ப்பணக் கூட்டம் யாழ் ஆனைப் பந்தியில் இடம்பெற்றது. இந்த காலகட்டத்தில் யூலை 27 1975ல் பிரபாகரன் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில் முன்பாக அப்போதைய யாழ் மேயர் அல்பேட் துரையப்பாவை சுட்டுக் கொன்று விட்டு, TNT (Tamil New Tigers) புதிய தமிழ் புலிகள் என எழுதிப்போட்டு விட்டுத் தப்பிச் சென்றார்.
இது தமிழீழ போராட்டத்தில் ஆயுதத்தின் பங்களிப்பை பிரபல்யப்படுத்த தொடங்கியது. ரிஎன்ரி யின் ஆரம்ப உறுப்பினர்களாக பிரபாகரன், குட்டிமணி, நாகராஜா, செட்டி ஆகியோர் முன்னணியில் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் விடுதலைக் கூட்டணித் தலைவர்களின் நேரடித் தொடர்பு இருந்தது. ரிஎன்ரி இயக்கம் எவ்வித அரசியல் சித்தாந்த கோட்பாடுகளும் இல்லாத ஒரு நேரடி நடவடிக்கை குழுவாகவே பரிணாமம் பெற்று பிரபல்யம் அடைந்தது. மே 5, 1976ல் புதிய தமிழ் புலிகள் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இந்த கால கட்டத்தில் இலங்கையில் இருந்து பல்லாயிரம் மைல்கள் தொலைவில் உள்ள லண்டன் சீமைக்கு வந்து கல்வி கற்பது யாழ்ப்பாண நடுத்தர வர்க்க இளைஞர்களின் உயர் கனவாக இருந்தது. இதன் அடிப்படையில் வசதிபடைத்த நடுத்தர குடும்பத்தினர் பலர் தமது பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி படிப்பித்தனர். இவ்வாறு லண்டனுக்கு வந்தவர்களில் சிலர் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்திருந்தனர். சிறிலங்கா பொலிசாரினால் பாதிக்கப்பட்டவர்களும் இதில் அடங்கினர். இவ்வாறு லண்டனில் பரிணமித்த தமிழ் தீவிர அரசியலின் ஆரம்ப முக்கிய உறுப்பினர்களாக நாராயணதாஸ், அன்ரன் பாலசிங்கம் (டிசம்பர் 14, 2006ல் காலமானார்), ரட்ணசபாபதி (டிசம்பர் 12, 2006ல் காலமானார்), மகா உத்தமன் (ஒக்ரோபர் 29, 2006ல் காலமானார்), மஹரசிங்கம், டொக்டர் ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.
இதில் நாராயணதாஸ் (கனகேந்திரன் - |வீடு| படத்தின் தயாரிப்பாளர்) இளைஞர் பேரவையின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து சிறிலங்கா பொலிசாரின் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகி பின்னர் மாணவனாக லண்டன் வந்து கல்வி கற்றார். இவர் 1977ம் ஆண்டில் லண்டனில் தமிழர் விடுதலை இயக்கத்தை (TLO) இயக்கினார். இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
மகா உத்தமன் முதலில் இலங்கையில் இருந்து புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவில் கல்வி கற்க சென்றவர். பின்னர் சிறிது காலம் கனடாவில் வசித்து 1977ல் லண்டன் வந்து குடியேறியவர்.
பாலசிங்கம் South Bank Polytechnic (தற்போது University) இல் சமூகவியல் ஆய்வு செய்து கொண்டிருந்தார். நாராயணதாஸிற்கும் பாலசிங்கத்துக்கும் இடையிலான தொடர்பு South Bank Polytechnic இல் தான் ஆரம்பமாகியது. நாராயணதாஸ் பாலசிங்கத்தை TLO உறுப்பினர் களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அன்று படிப்பதற்காக Student விசாவில் வந்த இளைஞர்களை விட பாலசிங்கத்தின் லண்டன் வாழ்க்கை வசதியாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. பாலசிங்கம் லண்டனுக்கு வருவதற்கு முன் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றினார். பின் பிரித்தானிய தூதராலயத்தில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றியதால் இங்கிலாந் தில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே ஏனையோரைப் போல் பாடசாலைக்குப் போய் Home Office போய் விசா எடுக்க வேண்டிய அவசியம் பாலசிங்கத்துக்கு இருக்கவில்லை.
மேலும் பாலசிங்கம் மிகவும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் என்பதாலும் நகைச் சுவையாக பேசி இளைஞர்களுடன் இலகுவாக பழகும் சுபாவம் கொண்டவர் என்பதாலும் மதுபானம் உட்கொள்பவர் என்பதாலும் இயற்கையாகவே லண்டன் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான பரிட்சயமான ஒருவராக இருந்தார்.
அன்றைய சர்வதேசச் சூழல், கல்விச் சமூகத்திடம் இடதுசாரிச் சிந்தனைகளை வளர்த்திருந்தது. படிப்பதற்கு லண்டன் வந்த யாழ் நடுத்தர வர்க்க இளைஞர்களும் அதற்கு விதிவிலக்காகவில்லை. ரட்ணசபாபதி, மாகா உத்தமன், பாலசிங்கம் ஆகியோரும் அதற்கு விதிவிலக்காகவில்லை. இவர்கள் தமிழீழ போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே கொம்யூனிஸ்ட் சிந்தனைகளில் மிகவும் கவரப்பட்டனர். மகா உத்தமனுக்கும் பாலசிங்கத் துக்கும் ஆரம்ப காலகட்டத்தில் கொம்யூனிச சிந்தனையில் இருந்த ஈடுபாடு ஈழப்போராட்ட ஈடுபாட்டை விட அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் பாலசிங்கம், மகாஉத்தமன் ஆகியோரின் அரசியல் பார்வை ஏனைய தமிழ் இளைஞர்களின் பார்வையில் இருந்து வேறுபட்டு, ஒரு சித்தாந்த அடிப்படையிலேயே இருந்தது. மகா உத்தமனும் பாலசிங்கமும் இணைந்து NEXES என்ற பத்திரிகையை வெளியிட்டனர்.
விடுதலைப் புலிகளது மிக ஆரம்ப வெளியீடுகளான |சோசலிச தமிழீழம் நோக்கி| போன்றன அப்போது விடுதலைப் புலிகளுடன் இருந்தவர்களின் கொம்யூனிஸ சிந்தனையின் பிரதிபலிப்பே. அந்தச் சிந்தனைமுறையின் ஆயுட்காலம் மிகவும் குறைவானதாகவே இருந்தது. காரணம் கொம்யூனிச சிந்தனை உடையவர்கள் (நிர்மலா, நித்தியானந்தன்) வெளியேறியமையும் பாலசிங்கம் சிந்தனையை மாற்றி கொண்டதுமே.
இளையதம்பி ரட்ணசபாபதிஇரட்ணசபாபதி EROS ஐ ஸ்தாபித்தார். இதற்கு பெரும் உறுதுணையாக சங்கர் ராஜியும் இருந்தார். மகா உத்தமன் ஈரோசுடன் இணைந்து மிகத் தீவிரமாகப் பணியாற்றினார். ரட்ணசபாபதி பலஸ்தீன விடுதலை இயக்கத்தினருடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை பாவித்து முதன் முதலாக தமிழ் இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சியை தொடக்கி வைத்தார்.
நாராயணதாஸ், மகா உத்தமன், ரட்ண சபாபதிக்கு இணையாக அக்காலத்தில் ஈழப் போராட்டத்தில் ஈடுபாட்டு; இருந்தவர் பாலசிங்கம். நாராயணதாஸின் தலைமையில் இயங்கிய வுடுழு அமைப்பு மற்றும் ரட்ணசபாபதி தலைமையில் இயங்கிய EROS அமைப்பின் உறுப்பினர்களுக்கு பாலசிங்கம் லண்டனில் கொம்யூனிச சிந்தனைகளை ஊட்டுவதில் அக்கறை காட்டினார். பாலசிங்கம் TLO உடனோ EROS உடனோ தன்னை முழுமையாக அடையாளப்படுத்தாமல் இருந்தார். ‘Open letter to Mr Amirthalingam’ என்று EROS வெளியிட்ட பிரசுரம் பாலசிங்கத்தினாலேயே எழுதப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் ஜேவிபியினரின் இனவாத கொம்யூனிச சித்தாந்தத்தை அடையாளம் காட்டுவதில் பாலசிங்கம் மிகவும் கவனம் செலுத்தி உள்ளார். பாலசிங்கத்தின் பேச்சு ஆரம்ப காலத்தில் ஜேவிபியினரை அடையாளப்படுத்துவதிலேயே முக்கிய கவனம் செலுத்தியது.
பாலசிங்கம் அன்றைய லண்டன் தமிழர் மத்தியில் பிரபல்யமாவதற்கும் மதிக்கப்படுவதற்கும் பல காரணங்கள் இருந்தன. பாலசிங்கத்தின் முதல் மனைவி வாகரையை சேர்ந்தவர். இவர் இளவயதில் சுகயீனமுற்று லண்டன் மருத்துவ மனையில் மரணம் அடைந்தார். பாலசிங்கம் தனது முதல் மனைவியை வைத்தியசாலையில் வைத்து பராமரித்த விதம் அங்கு தாதியாக பணிபுரிந்த அடேல் இன் கவனத்தை ஈர்த்தது. அடேல், பாலசிங்கத்தினால் மிகவும் கவரப்பட்டு பின்னர் அவரையே மணம் முடித்தார்.
பாலசிங்கத்தைப் போலவே அடேலும் அனைவருடனும் சரளமாக, அந்நியோன்னியமாக பழகும் சுபாவம் கொண்டவர். ஆகவே பாலசிங்கம் அவர்களின் Stockwell flat லண்டன் தமிழர்களின் அரசியல் குகையாக மாறியது. திருமதி அடேல் பாலசிங்கம் இரவில் வேலைக்குப் போக லண்டன் ஈழப்போராளிகள் ஸ்ரொக்வெல் பிளாற்றுக்குப் போய் சமா வைப்பது ஒரு வழமையான நடவடிக்கையாகிப் போனது.
1975ம் ஆண்டில் யசீர் அரபாத் தலைமையில் இயங்கிய (PLO) பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் FATA ஆயுதப்பிரிவின் லண்டன் பிரதிநிதியாக இருந்த செயிட் ஹமானி என்பவருக்கும் ரட்ணசபாபதிக்கும் நேரடி நட்பு ஆரம்பமாகியது. இத்தொடர்பை பயன்படுத்தி முதன்முதலாக ரட்ணசபாபதி லண்டனில் அக்கறையாக செயல்பட்ட சிலரை லெபனானிற்கு ஆயுதப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார். இதில் லண்டனிலிருந்து ராஜ்குமார், ஜெயக்குமார், தம்பையா, அருள், பத்மநாபா (காலம் சென்ற ஈபிஆர்எல்எப் தலைவர்) ஆகியோர் சென்றனர். இவர்கள் லெபனானில் பயிற்சி எடுக்கும் போது ரட்ணசபாபதி கண்ணாதிட்டி என்ற விவசாய பண்ணையை தெரிவு செய்தார். இந்த பண்ணை அருளரின் தகப்பனுக்கு சொந்தமானது. லெபனான் சென்று பயிற்சி முடித்துவிட்டு லண்டன் திரும்பிய அனைவரையும் ரட்ணசபாபதி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு கண்ணாதிட்டி பண்ணைக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாறு முதலில் லெபனான் சென்று பின்னர் கண்ணாதிட்டிக்கு சென்றவர்கள் தான் ஈரோஸ் அமைப்பின் மாணவர் பிரிவான GUES (Genaral Union of Elam Students) இன் முதல் உறுப்பினர்கள் ஆவர். லெபனானில் பயிற்சிகளை ஒழுங்குபடுத்திய ரட்ணசபாபதிக்கு ஈழத்தினுள் ஆயுதங்களை அனுப்ப முடியவில்லை. இதனால் லெபனானில் பயிற்சி பெற்ற அனைவரும் கண்ணாதிட்டியில் விறகுத்தடிகளை தூக்கி ஏதோ தங்களுக்கு முடிந்த பயிற்சிகளில் ஈடுபட்டு ரட்ணசபாபதியின் ஆயுதங்களுக்காக காத்திருந்தனர். இவர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் கொண்ட உள்ளுர்வாசிகள் சிலர் இது பற்றி பொலிசுக்கு அறிவிக்க அனைவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் விடுவிக்கப்பட்டவுடன் அவர்கள் மீண்டும் லண்டன் வந்து சேர்ந்தனர். விரக்தியில் லண்டன் வந்த GUES உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக பிரிந்து இயங்க ஆரம்பித்தனர். பத்மநாபா டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து EPRLF - ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ஸ்தாபித்து EROS இல் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருமுகப்படுத்தினார்.
இதன் பின் ரட்ணசபாபதியால் ஸ்தாபிக்கப்பட்ட EROS அமைப்பு 100 மைல் வேகத்தில் இருந்து 10 மைல் வேகத்துக்கு வந்தது. இவ்வாறு லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட ஈழ அரசியலின் உத்வேகம் ஒரு ஸ்தம்பித நிலைக்கு வந்தது.
மறுபுறத்தில் இலங்கையில் 1977 (ஓகஸ்ட் 16) கலவரமும் அதனைத் தொடர்ந்த விடுதலை எழுச்சியும் மேலோங்கியது. 1979 யூலையில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழ் இளைஞர்களுக்கு எதிரான அரசின் வன்முறை பெருகியது. பிரபாகரன், ஊர்மிலா, இராகவன், சுந்தரம், ஐயர் ஆகிய விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு சென்றனர். இவர்கள் அங்கு ஏற்கனவே தங்கியிருந்த உமாமகேஸ்வரன், நாகராஜா ஆகிய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தங்கினர்.
இச்சமயத்தில் பிரபாகரனுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு பாண்டி பஜாரில் உமாமகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சுடு நிகழ்த்தும் அளவிற்குச் சென்றது. விடுதலைப் புலிகள் உமா குழு, பிரபா குழு எனப் பிரிந்தது. இவர்களை இணைத்து வைக்க பாலசிங்கம் இந்தியா சென்றார். பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சமாதான முயற்சிகளும் பலனளிக்காமல் போனது. உமாமகேஸ்வரன் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்று PLOT (People Liberation Organization for Tamileelam - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பை ஆரம்பித்தார்.
அதே நேரம் மகா உத்தமன் PLO கூட்டில் இருந்த இரண்டாவது பெரிய இயக்கமான PFLP (Popular Front for the Libaral of Palastine) உடன் தொடர்பை ஏற்படுத்தினார். PFLPயின் முக்கிய ஸ்தலமாக சிரியா இருந்தது. அதில் மார்க்சிச சிந்தனை கொண்ட PFLP யின் சிரியாவை சேர்ந்த லண்டன் பிரதிநிதி டாக்டர் ஜோர்ஜ் அபாஸ் உத்தமனுக்கு நெருக்கமானார்.
|எல்லோரையும் இணைக்கிறேன் பார்| என்று சொல்லிவிட்டு இந்தியா சென்ற பாலசிங்கம் பிரபாகரனால் கவரப்படுகிறார். பிரபாகரன் பாலசிங்கம் இணைப்பிற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றது. ஒன்று EROS, EPRLFஇல் இருந்த அனைவரும் மார்க்சிசத்தில் ஊறித் திளைத்தவர்கள். செயற்பாட்டை விட கதையில் உச்சமானவர்கள். இவர்கள் |பாலா அண்ணா|வின் கதையை கைகட்டிக் கேட்கப் போவதில்லை. அது பாலசிங்கம் அவர்களுக்கு நன்கு தெரியும். அதற்கு மாறாக பிரபாகரன் நடைமுறையில் காட்டுபவர். மேலும் அவருடன் இருப்பவர்கள் |பாலா அண்ணா|வின் கதையை கைகட்டியிருந்து கேட்கக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களுடன் மகா உத்தமன், ரட்ணசபாபதி போல் உலக அரசியல் தெரிந்தவர்கள் அத்தருணத்தில் அங்கிருக்கவில்லை. பாலசிங்கத்திற்கு போட்டியும் இருக்கவில்லை. அதனால் பாலசிங்கம் பிரபாவுடன் இணைவதையே விரும்பி இருக்கலாம்.
அல்லது பிரபாகரனின் அதிரடித் தாக்குதல் ஸ்டைல்களினால் கவரப்பட்டிருக்கலாம். பிரபாகரனுக்கும் ஈரோஸைப் போல் அரசியல் பலம் தேவைப்படுவதால் பாலசிங்கத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கலாம். இவை ஆய்வுக்குரியவையே. முடிவானவை அல்ல.
எது எப்படியோ எல்லோரையும் சேர்த்து வைக்கிறேன் என்று புறப்பட்ட பாலசிங்கம் பிரபாகரனின் விடுதலைப் புலிகளின் அதீத விசுவாசியாக திரும்பி வந்தார். இது லண்டனில் இருந்த GUES இயக்கத்திற்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்தது. பாலசிங்கத்தின் மன மாற்றம் பலரை சங்கடத்தில் ஆழ்த்தியது. பாலசிங்கத்தின் மாற்றத்திற்கான காரணத்தை அறிய லண்டனில் இருந்த GUES உறுப்பினர் குலம் என்பவர் வைன் போத்தலுடன் ஸ்ரொக்வெல் பிளாற்றுக்குப் போகும் போது பாலசிங்கம் சிரித்துக்கொண்டு கேட்டாராம். “டேய் தம்பி குலம் சாராயம் கொடுத்து பூராயம் கேட்கவா வந்தனீ” என்று.
இதற்கிடையே மகா உத்தமன் பிரபாகரனுடன் இருந்து பிரிந்த உமாமகேஸ்வரனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் உத்தமன் உமாமகேஸ்வரனுடன் சேர்ந்து சிரியாவிற்கு சென்று ஆயுதப் பயிற்சிகளுக்கான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னைய காலங்களில் டக்ளஸ் தேவானந்தா, சின்னவன், பாலா சிரியா லெபனான் சென்று பயிற்சிகள் பெற்றனர்.
1980க்குப் பின்னர் LTTE, PLOT, EPRLF, EROS, TELO என்ற இயக்கங்கள் உறுதியாகச் செயற்பட ஆரம்பித்தன. பிற்காலங்களில் விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புகளை அழித்து தம்மை தம்மை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அறிவித்ததும் அதன் பின்னான நிகழ்வுகளும் அதில் பாலசிங்கத்தின் பங்களிப்பும் அவர் பற்றிய மதிப்பீடும் தனியாக ஆராயப்பட வேண்டும்.
தமிழீழ அரசியலில் ஆளுமை செலுத்திய இம்மூவருமே இயற்கை மரணத்தைத் தழுவியது அவர்கள் லண்டனில் வாழ்ந்ததாலேயே சாத்தியமானது. தமது குடும்ப நலன்களைக் கவனிக்காமல், இறுதி மூச்சுவரை தமது இலக்கை நோக்கி பயணித்தவர்கள் இவர்கள். இவர்கள் மூவரினதும் பங்களிப்பு மதிப்பிற்குரியது.
(கடந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் காலமான அன்ரன் பாலசிங்கம், ரட்ணசபாபதி, மகா உத்தமன் ஆகியோரின் மறைவையொட்டி தேசம் சஞ்சிகையில் வெளியான இக்கட்டுரை அவர்களின் ஓராண்டு நிறைவையொட்டி தேசம்நெற்றில் மீள் பிரசுரமாகிறது.)
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment