ஷோபா சக்தி) படங்காட்டுபவர் அல்லது தலித் நகல் போலி : யமுனா ராஜேந்திரன்
யமுனா ராஜேந்திரன்,
அமைப்பியல்வாதம் பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனை முறைமைகளும் அவை சார்ந்த கலை இலக்கிய வெளிப்பாடுகளும் விமர்சன மரபுகளும் ஒரு பேரலையெனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து அதுவரையிருந்த இலக்கிய பீடங்களையும் ரசிகமணி விமர்சகர்களையும் கவிழ்த்துப் போட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
‘கண்டதையும் தின்றுவிட்ட வாலைத் தூக்கிக் கழிக்கும் மிருகங்கள்’ என்றார் சுந்தர ராமசாமி. ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என்றார் யமுனா ராஜேந்திரன். கொஞ்சம் புத்திசாலிகளான ஆதிக்கசாதி விமர்சகர்கள் ‘இவர்களுடைய எழுத்துக்கள் புரிவதேயில்லை’ என்றார்கள். இப்படி இவர்களால் அழுக்காறு கொள்ள முடிந்ததே தவிர இவர்களால் இந்தப் புதிய சிந்தனைகளைக் கோட்பாட்டுத் தளத்திலோ புனைவுத் தளத்திலோ எதிர்கொள்ள முடியவில்லை.
ஷோபா சக்தி
புதுவிசை : தமிழகம் : ஏப்ரல் 2007
-
மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப் போக்குகளான இருத்தலியல் அமைப்பியல்வாதம் பின்நவீனத்துவம் போன்ற நுண் அரசியல் சிந்தனைகள் யாரும் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ் அறிவுச் சூழலில் முக்கிய சிந்தனை முறைமைகளாக நிலைபெற்றுவிட்டன.
இந்தப் புதிய சிந்தனைமுறைகளை எதிர்கொண்டு எழுதிய தமிழ் எழுத்தாளர்களை ஒரு ‘மதிப்பீட்டு’ வசதிக்காக மூன்று பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்ள முடியும். இச்சிந்தனை முறைகளை அக்கறையோடு உள்வாங்கி இவற்றிற்கும் நமது அரசியல் பண்பாட்டுச் சூழல்களுக்குமான பொருத்தங்களையும் பொருத்தப்பாடின்மைகளையும் சீர்தூக்கி இச்சிந்தனைகளை தமிழ் அறிவுப்புலத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களை முதல் பிரிவினர் எனக்கொண்டால் தமிழவன், எஸ்.வி. ராஜதுரை, அ.மார்க்ஸ், ரவிக்குமார், பிரேம் போன்றவர்கள் இந்தப் பிரிவினரில் முதன்மையானவர்கள்.
அறிவுத் துறையில் நிரம்பத் தேர்ச்சிகளைப் பெற்றிருந்தபோதிலும் வரட்டுத்தனமான மார்க்ஸிய நிலைப்பாட்டிலிருந்து இப்புதிய சிந்தனைமுறைகளை ஒருவித காழ்ப்புணர்வுடன் நிராகரித்தவர்கள் இரண்டாம் பிரிவினர். இந்த இரண்டாவது பிரிவில் ந. முத்துமோகன், கா.சிவத்தம்பி, பூரணச்சந்திரன், பெர்லின் தமிழரசன் ஆகியோரை முக்கியமானவர்களாகக் குறிப்பிடலாம்.
ஒரு மண்ணும் விளங்காமல் வெறும் மலிவான அரசியல் சொற்தொடர்களை அள்ளிவீசிப் பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்றவற்றை மட்டுமல்லாமல் மார்க்ஸியத்தையும் கொச்சைப்படுத்தி இலக்கியச் சூழலில் தகிடுதத்தம் செய்து வருபவர்கள் மூன்றாவது பிரிவினர். இந்த மூன்றாவது பிரிவில் எம்.ஜி.சுரேஷ், யமுனா ராஜேந்திரன், ரியாஸ் குரானா போன்றவர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தியோ என்கிற ஷோபா சக்தி.
சத்தியக்கடதாசி இணையதளம் : 2007
2
‘ஷோ’வை கோட்பாட்டுத் தளத்தில் பொறுட்படுத்தக் கூடிய ஒரு நபராகவோ அல்லது அரசியல் அறிந்தவராகவோ என்றுமே நான் கருதியதில்லை. ‘குமிஞ்சான்’ ஆன அவரை நான் இரு முறை சந்தித்திருக்கிறேன். எங்கள் ஊரில் ‘குமிஞ்சானை எப்போதுமே நம்ப வேண்டாம்’ என்று ஒரு வழக்கு உண்டு. ‘குமிஞ்சான்’ எனும் அவர் நாம் சொல்வதை குனிந்து கொண்டே கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால், அவர் மனசு எப்படிக் குழிபறிப்பது என்று சதித்திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் என்பது இதன் அர்த்தம். ‘ஷோ’ மிக மோசமான தந்திரோபாயக்காரர் மற்றும் அவதூறுக்காரர் மற்றும் பொறாமை கொண்டவர் என்பதை நான் போகப் போகவே தெரிந்து கொண்டேன். ‘உமது புனைவின் மீது கொஞ்ச நஞ்சம் இருக்கிற மறியாதை கூட உமது புனைவல்லா எழுத்துக்களின் மீது எனக்கு இல்லை’ என்பதை அவரது முகத்துக்கு நேரிலேயே நான் சொல்லியிருக்கிறேன்.
பொதுவாக என்னைப் பற்றிய அபிப்பிராய எழுத்துக்களுக்கெல்லாம் அதே வேகத்தில், எழுதிய ‘ஷோ’ மாதிரியான ‘அயோக்கியப் பயல்களை’ (ஆச்சர்யப்படாதீர்கள் எல்லாம் ‘ஷோ’வின் வார்த்தைப் பிரயோகங்கள்தான்) நோக்கி அவ்வப்போது நான் உடனடி எதிர்விணை செய்வதில்லை. அதனாலேயே ‘ஷோ’வை இதுவரையிலும் பொருட்படுத்தி நான் பதில் சொன்னதில்லை. இந்த ‘ஷோ’ எனும் ‘படங்காட்டுபவர்’ அதனையே பலவீனமாகக் கருதி, திட்டமிட்ட வகையில் பொய்களையும் அவதூறுகளையும் விசமத்தனமாகப் பரப்புகிறபோது, எதிர்விணை செய்யாதவிடத்து காலநீட்சியில் அதுவே நிஜமாகிவிடுகிற ஆபத்து இந்த ‘நகல்போலி’ யுகத்தில் இருப்பதால், ‘ஷோ’வையும் அவரது ‘சகபாடிகளையும்’ நோக்கி ‘உமது திருவிளையாடல்களை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்கிற விதமாகவே இந்தப் பதிவை நான் எழுத வேண்டியிருக்கிறது.
3
முதலில் மேலே கண்ட ‘படங்காட்டுபவரின்’ மேற்கோள்கள் தொடர்பாகவே சொல்ல விரும்புகிறேன். அடிப்படையில் அமைப்பியல்வாத மற்றும் பின்நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவத்தால் ஆதர்ஷம் பெற்ற தலித்திய எழுத்துக்கள் என்பதனை, ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என எங்குமே நான் சொன்னதில்லை. இது விசமத்தனமான, பெரியாரின் பாசையில் சொல்வதானால் ‘அயோக்கியத்தனமான’ குற்றச்சாட்டு.
ஏன் ‘ஷோ’ ‘சமூக விரோத எழுத்துக்கள் என்றார் யமுனா ராஜேந்திரன்’ என்கிற இந்தச் சொற்றொடரை, இதுவரை நடந்துவந்திருக்கும் புகலிட இலக்கிய விவாதங்கள் தொடர்பான பிண்ணனி அறியாத தமிழகச் சூழலில் போய், மார்க்சியரும் தலித்தியரும் ஆன ஆதவன் தீட்சண்யா ஆசியராக இருக்கிற ‘புதுவிசை’ இதழின் நேர்முகத்தில் சொல்ல வேண்டும்? நான் மரியாதையும் சமவேளையில் விமர்சனமும் கொண்டிருக்கிற சுந்தர ராமசாமி மற்றும் மேல்சாதி எழுத்தாளர்களோடு என்னையும் ஏன் இவர் சேர்க்க வேண்டும்? இதைத் தான் நான் ‘ஷோ’வின் ‘விசமத்தனமான’ நோக்கம் என்கிறேன்.
முன்னதாக, ‘ஷோ’ விடம் என் மீதான தீராத பொறாமையை உருவாக்கியவை மறைந்த நண்பர் கஜனின் வேண்டுகோளிற்கு ஏற்ப ’ஈழமுரசு’ இதழில் நான் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வந்த உலகத் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகள்தான். அநேகமாக எனது கட்டுரைகள் தொடர்பாக வந்த அன்றைய ‘ஷோ’வின் ‘நக்கல்’ கட்டுரைதான் அவருக்கு புகலிடத்தில் முகவரி தந்தது என்றே நினைக்கிறேன்.
‘படங்காட்டுபவரின்’ அந்தக் கட்டுரை ஏன் என் மீதான பொறாமையில் விளைந்தது என்கிறேன்?
நான் திரைப்படங்கள் பார்ப்பது தொடர்பான சந்தேகத்தையும், உலக சினிமா குறித்த எனது அறிவின் மீதான சந்தேகத்தையும் உருவாக்குவதுதான் ‘ஷோ’வின் அந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாக இருந்தது. தமிழ் மட்டும் தெரிந்த அவருக்கு, ஒரு நாளைக்கு ஒரு தமிழ் படம் மட்டுமே பார்க்க முடிந்த அவருக்கு, நான் பன்மொழி படங்கள் குறித்து எழுதுவதும், திரைப்பட விழாக்களில் ஒரு நாளில் ஐந்து படங்கள் பார்த்தது பற்றி எழுதுவதும் குறித்த சந்தேகம் எழுப்புவதுதான் அந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாக இருந்தது. அதாவது, தன்னால் இயலாத ஒன்றைச் செய்கிற பிற ஒருவரின் மீதான அப்பட்டமான ‘பொறாமைதான்’ அக்கட்டுரையில் ‘நக்கலாக’ வழிந்தது. அந்த நக்கலுக்கும் நான் பொறுமையாகவே விளக்கமான பதில் எழுதினேன்.
தமிழ் - இந்திய — உலக சினிமா பற்றிய எனது அறிவுக்குச் சான்றாக தமிழகத்தின் திரைப்பட இயக்கமான ‘நிழல்’ மற்றும் ‘உயிர்மை’ பதிப்பகங்களின் சார்பாக எனது நூல்கள் தற்போது பற்பல தொகுப்புக்களாக வந்திருக்கிறது. சினிமா குறித்து மட்டும் என்னுடைய 10 நூல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பாருங்கள், அன்றிலிருந்து இன்று வரை, ‘ஷோ’வின் ‘பொறாமை’ மட்டும் புகலிடத்திலும் தமிழகத்திலும் இன்னும் நீக்கமறக் கரையாது பரவிக் கொண்டிருக்கிறது.
‘ஷோ’ மற்றும் அவரது இலக்கிய நண்பரான ‘சாநி’ என்கிற சாரு நிவேதிதா மற்றும் அவரது கருத்தியல் ஆசானான அ.மார்க்ஸ் போன்றவர்களின் எழுத்துக்களை முன்வைத்து, புகலிடச் சூழலில் ஷோபாசக்தியும் அவரது அத்யந்த நண்பர்களும் ‘பேய்க் காட்டி’க் கொண்டிருந்தபோதுதான், இவர்களது ‘போலித்தனமான சவடால்களுக்கு’ எதிராக நான் எதிர்விணை செய்ய விளைந்தேன். நண்பர் பாரிஸ் மனோ நடத்திய ‘அம்மா’ இதழ்கள் மற்றும் நண்பர்களான கலைச்செல்வன் மற்றும் லக்சுமி நடத்தி வரும் ‘உயிர்நிழல்’ சஞ்சிகை போன்றவற்றில் இது தொடர்பாக எனது இரண்டு கட்டுரைகள் வெளியாகின. முதலாவது கட்டுரை பின்நவீனத்துவம் தொடர்பான எனது புரிதல்கள் பற்றியது. அ.மார்க்சின் ‘கட்டுடைப்பின் அரசியலை’ நான் அதில் விமர்சித்திருந்தேன். இரண்டாவது கட்டுரையில் ‘ஷோ’வும் சுகனும் இணைந்து தொகுத்த ‘சனதரும போதினி’ இலக்கியத் தொகுப்பிலான சாருநிவேதிதாவின் ‘உன்னத சங்கீதம்’ எனும் சிறுகதையைக் கடுமையாக விமர்சித்திருந்தேன்.
இதுவன்றி ‘கொரில்லா’ நாவல் தொடர்பான எனது நீண்ட, விரிவான விமர்சனம் நண்பர் கோ.ராஜாராம் பொறுப்பாகவிருக்கும் வட அமெரிக்க ‘திண்ணை’ இணைய இதழில் வெளியானது. ‘ஷோ’விடம் என் பாலான தீராத குரோதத்தையும் காழ்ப்புணர்வையும் இக்கட்டுரைகளே உருவாக்கின.
மேலாக, உதிரியாகவும் சில விசயங்களை இவர்களது வகை ‘விளிம்புநிலைக் கதையாடல்கள்’ குறித்து நான் எழுதினேன். அவற்றுள் முக்கியமானது, இவர்களது ‘சவடால்தனமான ஜனநாயக விரோத மேடைக் கலாச்சாரம்’ தொடர்பாக கனடாவிலிருந்து வரும் நண்பர் செல்வம் ஆசிரியராவிருக்கும் ‘காலம்’ சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையாகும். இவர்களது புகலிட இலக்கியக் கூட்டங்களில் குடித்துவிட்டுக் கூட்டம் தொடங்குவதையும், செருப்பையும் துடைப்பத்தையும் மேசையின் மீது வைத்துக் கூட்டம் தொடங்குவதையும் ‘பின் நவீனத்துவ விளிம்புநிலை தலித்தியக் கலகம்’ என்றார்கள். இது நகைப்புக்கிடமானது என்றேன். ‘குடிப்பது’ என்பது தங்குதடையற்ற சுதந்திரம் கொண்ட ஒரு மனிதத் தொடர்பாடல் கலாச்சாரமாகவும், அவரவர் கழிப்பறைகளையும் இருப்பிடத்தையும் அவரவரே சுத்தம் செய்து கொண்டும் இருக்கிற மேற்கத்தியச் சூழலில், இந்நடவடிக்கைகள் ‘எந்தக் கலகமும் அற்ற’ ஒரு வெற்றுப் ‘பம்மாத்து’ என்றேன்.
குறிப்பாக ‘ஷோ’வின் நண்பர் சுகனது திருவிளையாடல்கள் குறித்து இங்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். புகலிட தமிழர் வாழ்வில் ‘இல்லாத கூட்டுக் கலவி’ பற்றி இவர் கதை எழுதினார். குடிப்பதற்கு என்ன வேண்டும் எனும் விமானப் பணிப்பெண்ணிடம் ‘முலைப்பால் வேண்டும்’ என அவர் கேட்கிற ஒரு ‘புரட்சிகரமான’ கவிதை எழுதினார்.
அப்புறமாகச் சாருநிவேதிதா. ‘அன்று குடிக்க எவர் வாங்கிக் கொடுக்கிறரோ அவர் பற்றி விதந்தோதி எழுதுவார்’ என்பது ஒரு பிரசித்தமான யாவருமறிந்த விவரம். இதை நான் சொல்லவில்லை. ஒரு காலத்தில் சாருநிவோதிதாவை விதந்தோதிய அ.மார்க்ஸே சொல்லியிருக்கிறார். இப்படியான ‘சாநி’ பாரிசுக்கு வந்தபோது, அவருக்குக் குடிக்க வாங்கிக் கொடுத்த ‘ஷோ’ சுகன் நண்பர்களைக் குஷிப்படுத்த, தமிழக மற்றும் புகலிட எழுத்தாளர்களுக்குப் பட்டப்பெயர்கள் கொடுத்து, இவர்களது ‘எக்ஸில்’ சஞ்சிகையில் ‘கோணல் பக்கங்களில்’ வெளியிடவென ஒரு பட்டியல் எழுதிக் கொடுத்தார். பிற இடங்களிலும் இந்தப் பட்டியலை நீட்டி எழுதினார். பட்டியல் எப்படி இருக்கிறது பாருங்கள் : ஷோபா சக்தி சமம் பாரத்திபன். அ.மார்க்ஸ் சமம் மம்முட்டி. சாருநிவேதிதா சமம் கமல்ஹாஸன். சாநியின் மனைவி அவந்திகா சமம் ஐஸ்வர்யா ராய். நல்லது. பட்டியல் இன்னும் தொடர்கிறது பாருங்கள் : எஸ்.வி.ராஜதுரை சமம் எம்.என். நம்பியார். வ.கீதா சமம் பிந்துகோஷ். அம்பை சமம் ஜோதிலட்சுமி. யமுனா ராஜேந்திரன் சமம் இராம. நாராயணன்!
‘இவன்கள்’ எல்லாம் கதாநாயகன்கள். ‘மற்றவர்கள்’ எல்லாம் வில்லன், கவர்ச்சி நடிகைகள், நகைச்சுவை நடிகைகள் நடிகர்கள். இது ‘பின் நவீனத்துவ, விளிம்பு நிலை, தலித்திய எழத்து’! பின்நவீனத்துவ பகடி எனும் பெயரில் இப்படி எழுதும் ‘வக்கிரம் பிடித்த நாதாரிகளின்’ இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்துத்தான் நான் எழுதினேன்.
நான் அரசியல் அடிப்படையிலும், கோட்பாட்டு அடிப்படையிலும் முன்வைத்த விடயங்கள் குறித்து இவர்கள் என்ன எதிர்விணை செய்தார்கள்?
‘ஷோ’ சுகன், சாநி போன்ற மூவருமே உருப்படியான எந்த எதிர்விணையையும் வைக்கவில்லை. மாறாக எனது சொந்த வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் எனது சாதி தொடர்பான வேர்களைத் தேடினார்கள். பிரித்தானிய அரசுக்கும் இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.க்கும் தூதராக நான் செயல்படுவதாக எழுதினார் சுகன். கொங்கு வேளாளர்களின் சாதித் திமிரை என் மீது இவர்கள் சுமத்தினார்கள். சாநி விசயத்தில், ‘யமுனா மரனதண்டனைக்கு ஆதரவாகச் செயல்டுகிறார், அவர் மீது கண்டனத் தீர்மானம் போட வேண்டும்’ என ‘தமாசு’ பண்ணினார் சுகன்.
‘ஷோ’ பாணி அலவாதியானது, குறைந்த பட்சம் இரண்டு சிறுகதைகளில் என் பெயரைத் ‘திணித்து’ அவமானப்படுத்தி தனது ‘அரிப்பைத்’ தீர்த்துக் கொண்டார்.
நான் இவர்களது எழுத்துக்கள் மற்றும் நடத்தைகள் தொடர்பாக முன்வைத்த எந்த விமர்சனங்களையும் இவர்களில் எவருமே இது நாள் வரை நேர்மையாக எழுத்தில் எதிர்கொண்டவர்கள் இல்லை. ‘குசும்பு’ பேசுவதையும் ‘அவதூறு‘ செய்வதையும் சொந்த வாழ்க்கையை நாறடித்ததுமே இவர்களது ‘பின்நவீனத்துவச்’ செயல்பாடுகளாக இருந்தன.
இதன் பின், தமிழக இதழ்களில் நான் பரவலாக எழுதத் துவங்கிய பின்பு, இவர்கள் பற்றிப் பொருட்படுத்துவதை அறவே விட்டுவிட்டேன். ஆனால் ‘ஷோ’விடம் பொறாமையும் காழ்ப்பும் இயலாமையும் குரோதமும் ‘தகத்தகாயமாக எரிந்து கொண்டிருப்பதை’ நான் பிற்பாடுதான் எதிர்கொண்டேன்.
விவாதங்கள் எழுந்த வேளையில் எந்தவிதமான நேர்மையான எதிர்விணைகளும் செய்யாமல் இருந்துவிட்டு, பல ஆண்டுகள் கழித்து, விவாதச் சூழலில் இருந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர் தனது ‘படங்காட்டுகிற’ வேலையைத் தொடர்ந்து அவதூறுகளில் இறங்கினார். ஆதரங்களான சான்றுகள்தான் கட்டுரையின் முகப்பில் இடம் பெறும் ‘ஷோ’வின் இரு மேற்கோள்கள்.
இதுவன்றி, இவர்கள் பேசுகிற ‘ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம்’ என்பதற்கும் தமது சொந்த வாழ்வு நடத்தைகளில் இவர்கள் கடைபிடிக்கிற ஒழுங்கிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதனையும் நான் புரிந்து கொண்டேன். பிறர் ஏற்பாடு செய்கிற கூட்டங்களில் குடித்துவிட்டு தகராறு செய்வதும், இவர்களுக்கு மாற்றை முன் வைக்கிற எழுத்தாளர்களைப் பேசவிடாது செய்வதும், அவர்களின் மீது வசவுகளை ஏவுவதும், அத்தகையவர்களின் சொந்த வாழ்வை நாறடிப்பதுமே இவர்களது ‘பின்நவீனத்துவ-விளிம்பு நிலை- மற்றும் தலித்திய’ நிலைபாடுகளாக அமைந்தன.
நான் தனிப்பட்ட முறையில் இவர்களது ‘தடைகளை’ எதிர் கொண்டேன். தனக்குக் கருத்துக் கூற முழுமையான வாய்ப்புத் தரப்பட்டும் கூட, பாரிஸில் நடந்த இலக்கியச் சந்திப்பில், நடுவர் குழுவினரையும் மீறிய வகையில், எனது உரையைத் தொடர்வதை முற்றிலும் குழப்பி வந்தார் ‘பின்நவீனத்துவ விளிம்பு நிலையினரான’ சுகன். அவரது பின்நவீனத்துவ நண்பர்களும் அன்று அதே நடைமுறையையே கடைப்பிடித்தனர். அன்றைய எனது உரையில், ‘ஜனநாயகமும் வன்முறை எதிர்ப்பும் ஒரு அரசியல் கலாச்சாரம் சார்ந்த விடயம், அதனைத் தமது சொந்த வாழ்க்கை நடத்தைகளில் கடைபிடிக்க முடியாதவர்கள் அதனைப் பேசுவது அபத்தம்’ என்றே பேசி அமர்ந்தேன்.
4
சமூக விரோத எழுத்துக்கள் பிரச்சினைக்கு இப்போது வருகிறேன். சுகனும் ‘ஷோ’வும் தொகுத்த ‘சனதரும போதினி’ நூலில் வெளியான சாருநிவேதிதாவின் ‘உன்னத சங்கீதம்’ எனும் சிறுகதையை சமூக விரோத எழுத்து எனத்தான் அன்று நான் மதிப்பிட்டேன். அந்த மதிப்பீட்டில் இன்றும் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. அவரது நண்பரின் 13 வயதுப் பெண்குழந்தை ஒன்று, சாருநிவேதிதா எனும் 50 வயது ஆணுக்கு ‘பாலுறவு இன்பம்’ குறித்த ‘விளையாட்டுக்களை’க் கற்றுக் கொடுப்பது தொடர்பான கதை அது. அந்தக் கதையின் நாயகனும், கதையின் ஆசிரியனுமான சாருநிவேதிதாவை நான் ‘பீடபைல்’ ( குழந்தைகள் மீது பாலுறவு மீறல் மேற்கொள்கிற மனநோயாளி) எனவே குறிப்பிட்டேன். அதுவே அக்கதை நாயகன் பற்றிய சரியான மதிப்பீடு. இக்கதை சமூகவிரோதம் என்றேன்.
அதே மாதிரி ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற பெண்குழந்தையை கரப்பமாக்கியதனை, அப் பெண்குழந்தையின் கண்களில் ‘காதல்’ தெரிந்ததை எழதுகிற ‘ஷோ’வின் ‘ம்’ நாவலது சித்திரிப்பும் குழந்தைகளின் மீதான வன்முறை எனும் அளவில், சமூக விரோதமானதுதான். அதைக் ‘காதல்’ எனச் சித்தரிக்கிற ஷோபா சக்தியும் சமூகவிரோதிதான். இவ்வாறு ‘குறிப்பிட்ட’ கதைகள் மற்றும் பெண்குழந்தைகள் மீதான பாலுறவு மீறலைக் ‘கொண்டாடும்’ எழுத்துக்களை சமூகவிரோத எழுத்துத்தான் என்று நான் சொல்கிறேன். சாநியின் கதையை ‘விளிம்புநிலைக் கதையாடல்’ என்றும், ‘சின்னக் கதையாடல்’ என்றும் நீங்கள் சொன்னால், அதில் நான் உடன்பட வேண்டிய அவசியமில்லை. அது போலவே தனது பெற்ற மகளைக் கர்ப்பிணியாக்குகிற ஒருவனது மனப்பிறழ்வு, ஈழத்தின் அறமழிந்த அரசியல் வன்முறைகளின் விளவுதான் என்று நீங்கள் எனக்குக் ‘கதை சொன்னாலும்’ அதை நான் ஒப்ப வேண்டிய அவசியமில்லை.
இவ்வகையில், இந்த இரு படைப்புகளில் வெளிப்படும் இவ்விடயமும், இதனைக் ‘காதல்’ என்றும் ‘உன்னத சங்கீதம்’ என்றும் கொண்டாடும் உமது இந்தக் குறிப்பிட்ட எழுத்துக்களும் என்னளவில் சமூக விரோத எழுத்துக்கள்தான்.
நான் ‘குறிப்பிட்ட’ விதத்தில் இப்படிச் சொல்வதை, நான் அமைப்பியல் பின்நவீனத்துவ எழுத்துக்களை ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என்று சொன்னதாக ஷோபா சக்தி சொன்னால் அது அப்பட்டமான, அயோக்கியத்தனமான, விசமத்தனமான அவதூறு என்றுதான் நான் சொல்கிறேன். அதுவும் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ கதையில், ‘ஆண்குழந்தையை பாலுறவு கொள்ள விழைந்த தலித் பெண்ணொருத்தி’யைச் சித்தரித்த சுந்தர ராமசாமியை, ஆதவன் தீட்சண்யாவுடன் இணைந்து, ‘பதிவுகள்’ இணைய தளத்தில் நான் விமர்சித்த பின்னணியைப் புரிந்து கொண்டும், ‘படங்காட்டுபவர்’ மேல்சாதிய எழுத்தாளர்களோடு என்னைச் சேர்த்துச் சொல்வது அப்பட்டமான அயோக்கித்தியத்தனமன்றி வேறெதுவெனச் சொல்ல இயலும்?
‘கொரில்லா’ நாவலில் வரலாறும் புனைவும் தொடர்பான பிரச்சினையை நான் பேசியிருந்தேன். புனைவில் வரலாறு தொடர்பான எனது நிலைபாடு இதுதான் : வரலாற்றின் வெற்றிடங்களையும், இருண்ட, புதிரான இடங்களையும் புனைவாளன் தனது கற்பனையாற்றலுடன் நாவலில் சித்தரிக்கலாம். அதற்கான அற்புதமான உதாரணங்கள் இத்தாலிய நாவலான வால்ட்டர் பெஞ்ஜமின் பற்றிய ‘த ஆஞ்சல் ஆப் ஹிஸ்டரி’ மற்றும் ரோஸா லக்ஸம்பர்க் வாழ்வு பற்றிய ‘ரோஸா’ எனும் ஆங்கில நாவல். முதல் நாவலில் வால்ட்டர் பெஞ்ஜமனின் ‘காணாமல் போன கையழுத்துப் பிரதி’ எனும் ‘புதிரின்’ அடிப்படையில் நாவலாசிரியர் தனது புனைவை முன்வைக்கிறார். இரண்டாம் நாவலில் ரோஸா லக்ஸம்பர்க் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் வரையிலும் அவரது உடல் ‘காணாமல் போயிருந்த’ காலங்களின் ‘புதிர்’ குறித்து நாவலாசிரியர் தனது புனைவை முன்வைக்கிறார். இந்த நாவல் முற்றிலும் ஒரு துப்பறியும் நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாவல்கள் இரண்டும் ‘இடதுசாரி பின்நவீனத்துவ’ வகையிலான நாவல்கள் என்பதுதான் எனது மதிப்பீடு.
ஆனால், ஓப்புக் கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுச் சம்பவத்தை, ஆத்திரமூட்டும் நோக்கில் ‘திருகி’ எழுதிய பல பகுதிகள் ‘ஷோ’வின் ‘கொரில்லா’ நாவலில் உள்ளது. கன்டெய்னரில் கடத்தி வரப்பட்ட நிலையில் மரணமுற்ற சீனர்களைக் கடத்தியவர்கள் நான்காம் அகிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற ஒரு தகவல் ‘ஷோ’வின் நாவலில் வருகிறது. ஆனால், அந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் தொழில்முறையிலான ஆள் கடத்தல்காரர்கள் என நீருபிக்கப்பட்டிருக்கிறது. ‘ஷோ’ இங்கு செய்திருப்பது பின்நவீனத்துவப் புனைவு அல்ல, அதிர்ச்சி மதிப்புக்காக மார்க்சியர்களைக் கொச்சைப் படுத்தும் ஒரு விவரணை. இதன் வழி ஜெயமோகனைப் போன்ற ‘வலதுசாரிகளின்’ பாராட்டைப் பெறும் ஒரு புனைவு சார்ந்த அயோக்கியத்தனமான ‘யுக்தியே’ அது என்பதுதான் எனது பார்வை.
மேலாக, அந்நாவலில் சுந்தர ராமசாமி (ஜே.ஜே.சில குறிப்புகள்), சாருநிவேதிதா (ஸீரோ டிகிரி மற்றும் ராஸலீலா) போன்றோர் தொடர்ந்து செய்யும் ‘எதிரி’ எழுத்தாளர்கள் மற்றும் ‘எதிரி’ மனிதர்கள் மீதான அவமானத்தையும் கொரில்லாவில் ‘ஷோ’ சுமத்தியிருக்கிறார். சம்பந்தமில்லாமல் எழுத்தாளர் கலா மோகன் மீதான காழ்புபணர்வை அவர் நாவலில் தீர்த்துக் கொண்டிருக்கிறார். நாவலின் கட்டமைப்பு எனும் அளவில் ‘நிரவப்படாத’ பல இடைவெளிகள் கொண்டது அந்த நாவல்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முழுமையான பின்னணியோ அல்லது உலக விடுதலை இயக்கங்கள் குறித்த பின்னணியோ அறியாத தமிழக விமர்சகர்கள், விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்பணர்வு எனும் ‘பிரகாசத்தில்’ உழலும் இந்திய ‘வெகுஜன ஊடகங்களின்’ பாலான கவர்ச்சி கொண்ட தமிழக விமர்சகர்கள், பொதுவாகப் புரட்சிகர இயக்கங்கள் மீது வெறுப்புக் கொண்ட விமர்சகர்கள், ‘கொரில்லா’வையும் ‘ம்’மையும் ‘நாவல்கள்’ என மதிப்பிடலாம். ஆனால், 25 ஆண்டு கால ஈழப் போராட்ட வரலாறு தெரிந்தவன் எனும் அளவில், அதே விதமாக இந்த நாவல்களை மதிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை.
நாவலாசிரியானாக அந்த நாவலுக்குள் தன்னைப் பற்றி ‘ஷோ’ பல்வேறு ‘பில்ட்-அப்’கள் கொடுத்திருக்கிறார் என்பதுதான் கொரில்லா நாவல் குறித்த எனது விமர்சனமாக அமைந்தது. அப்படி நாவலைப் பார்ப்பதற்கான முழு உரிமையும் உலக இலக்கிய வாசகனாக எனக்கு உண்டு.
‘ஷோ’வையும் சுகனையும் தீராத அவஸ்தையிலும் எரிச்சலிலும் ஆழ்த்திய இன்னொரு விடயம், இவர்கள் இருவரும் சேர்ந்து தொகுத்த ‘கறுப்பு’ இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்ற பின்நவீனத்துவ விஞ்ஞானம் பற்றிய கட்டுரை எனக் கோரப்பட்ட, அமெரிக்க மார்க்சியரான அலன் ஸாக்கல் எழுதிய கட்டுரை பற்றிய எனது எதிர்விணை.
நிஜத்தில் பின்நவீனத்துவத்தைப் ‘பகடி’ செய்யும் கட்டுரை அது என்ற வரலாற்றை நான் சுட்டிக் காட்டியதோடு, அலன் ஸாக்கலின் அந்தக் கட்டுரை தொடர்பான அவரது முழுமையான நேர்முகத்தையும் நான் மொழிபெயர்த்து ‘திண்ணை’ இணைய இதழில் வெளியிட்டதுதான் ‘ஷோ’வையும் சுகனையும் அவஸ்தையிலும் எரிச்சலிலும் ஆழ்த்திய விடயம். இவர்களது ‘முட்டாள்தனமான’ திருவிளையாடல்களை நான் அம்பலப்படுத்திய போதெல்லாம், மனதுக்கள் குரூரமாகக் கறுவிக் கொண்டிருந்து விட்டு, முற்றிலும் அந்நியமான ஒரு ‘வெளிக்கு’ சென்று நான் சொல்லவே இல்லாத ஒரு விடயத்தைத் திட்டமிட்டுச் சொல்லி, என்மீது அவதூறு செய்யும் வேலையைத்தான் ‘புதுவிசை’ நேர்முகத்தில் ‘ஷோ’ செய்திருக்கிறார்.
‘ஷோ’வின் வார்த்தைக்கு இப்படியானதொரு அர்த்தம் இருந்தால்தான் தான் நான் சொன்னதாகச் சொல்வது பொறுத்தமாக இருக்கும் : அதாவது, நான் மேலே விவரித்த உங்களது நடத்தைகளும் எழுத்துக்களும் சாநியின் சிறுகதையும்தான் ‘அமைப்பியல் பின்நவீனத்துவ எழுத்துக்கள்’ என நீங்கள் மார்தட்டிக் கொள்வீர்கள் என்றால், நான் தெளிவாகவும் திடமாகவும் சொல்கிறேன். “ஆம். நான் விமர்சித்த ‘குறிப்பிட்ட’ உங்கள் நடத்தைகளும் எழுத்துக்களும் நிச்சயமாகவே சமூகவிரோதிகளின் எழுத்துக்கள் மற்றும் நடத்தைகள் மட்டுமல்ல, அவை நிஜத்தில் ‘போலி தலித்திய’ எழுத்துக்கள் மற்றும் நடத்தைகள் என்று சொல்வதிலும் எனக்குக் கிஞ்சிற்றும் தயக்கம் கிடையாது.”
5
இருத்தலியல், அமைப்பியல், பின்நவீனத்துவம் குறித்த ‘எல்லா மண்ணும் விளங்கிய’ ‘ஷோ’வின் அறிவு விசாலம் தொடர்பாகவும், ‘ஒரு மண்ணும் விளங்காமல்’ எழுதுகிற என்னைப் பற்றிய விடயத்திற்கும் இப்போது வருகிறேன். என்னை மிக ஆச்சர்யத்தில் ஆழத்திய விடயம் என்னவென்றால், குறிப்பிட்ட அக்கட்டுரையை எழுதுகிறபோது ‘ஷோ’வுக்கு இருந்த அறிவு ஆணவம்தான்! என்னே ஒரு மிதப்பு! அ.மார்க்ஸ் புத்தகங்களில் இருந்து மட்டும் இந்த உலகத்தின் ‘சகல மண்ணையும்’ புரிந்துகொண்ட அவருக்கு அந்த ஆணவம் இருப்பதும் ஆச்சரியமில்லைதான்.
நல்லது. ஆனால் துரதிருஷ்டம் பாருங்கள், இருத்தலியலை ‘மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப் போக்கு’ எனப் புரிந்து கொண்டு, அதனை அமைப்பியல் பின்நவீனத்துவ வரிசையில் வைப்பதைக் கேட்டால்தான் எவரும் ‘குண்டிதட்டி’ச் சிரிப்பார்கள்.
ஸார்த்தர் மார்க்சியத்தை ஏற்றவர். அவர் மீது கடுமையான ஸ்டாலினிஸ்ட் என்ற விமர்சனமும் உண்டு. மார்க்சியத்துக்குப் பிந்திய சிந்தனை என்பது அவருக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம். அவரை தமிழகத்தில் விரிவாக அறிமுகம் செய்தவரான தோழர் எஸ்.வி.ராஜதுரை, ‘மார்க்சியத்துக்குப் பிந்திய சிந்தனை முறை’ என்ற சொற்றொடரிலெல்லாம் கொஞ்ச நஞ்சம் கூட உடன்பாடு காட்டாதவர். தமிழவனின் அமைப்பியலோடு கடுமையாக முரண்பட்டு விவாதத்தில் ஈடுபட்டவர் அவர். அவ்விவாதங்கள் தொகுக்கப்பட்டு குறுநூலாகவும் வந்திருக்கிறது. அ.மார்க்ஸின் கலாச்சார சார்புவாதப் பின்நவீனத்துவத்தில் உடன்பாடு காட்டாதவர் அவர். ஒரு பொது மேடையில் அவரது இணை நூலாசிரியரான தோழியர். வ.கீதா பின்நவீனத்துவம் குறித்து நேரடியாகவே அ.மார்க்சுக்குத் தனது மறுப்பைத் தெரிவித்திருக்கிறார். இதனை எல்லாம் முதலில் ‘ஷோ’ தெரிந்து கொள்வது நல்லது.
வறட்டுத்தனமான மார்க்ஸிய நிலைப்பாட்டிலிருந்து இந்தச் சிந்தனைமுறை குறித்து எழுதியவர்கள் என ந. முத்துமோகன், கா.சிவத்தம்பி, பூரணச்சந்திரன், பெர்லின் தமிழரசன் போன்றவர்களை ‘ஷோ’ குறிப்பிடுகிறார். இரண்டாவது முறையும் ‘குண்டிதட்டி’ச் சிரிக்க வேண்டியிருக்கிறது.
பூரணச்சந்திரனின் அமைப்பியல் பற்றிய நூல் மார்க்சியப் பின்புலத்தில் எழுதப்பட்டது அல்ல, மாறாக கல்வித்துறைசார் பின் புலத்தில் எழுதப்பட்ட நூல் அது. பெர்லின் தமிழரசன் நிறைய அரசியல் கட்டுரைகளை எழுதியிருந்தாலும், நண்பர் அசோக் யோகன் தொகுத்த ‘அசை’ கோட்பாட்டு இதழில் அவர் எழுதிய ‘பிரெடரிக் நீட்ஷே’ குறித்த கட்டுரை நீங்கலாக, அவர் பின்நவீனத்துவம் பற்றி விரிவாக எழுதியதாக நான் கேள்விப்பட்டது கூட இல்லை. கா.சிவத்தம்பி பின் நவீனத்துவம் குறித்த விரிவான வாசிப்புகள் கொண்டவர் இல்லை. அவரும் இது பற்றிப் பொதுவாக அல்லாமல், விரிவாக எழுதியவர் இல்லை.
மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தத்துவம் பயின்ற நா. முத்துமோகன் அமைப்பியல் - பின்நவீனத்துவம் - மார்க்சியம் பற்றி விரிவாக எழுதியவர். எனது தமிழகப் பயணத்தின் போது நான் அவரைச் சந்தித்து உரையாடியும் இருக்கிறேன். தனித்த தலித்திய இயக்கங்களை விடவும் கம்யூனிஸ்ட்டுகள் - தலித்தியர்கள் ஒற்றுமையில் அதிகமும் ஈடுபாடு காட்டும் தலித்தியர் அவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படுபவர் அவர். அவரது முழு எழுத்துக்களும் 2000 பக்கங்கள் அளவில் (காவ்யா பதிப்பகம்) முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் ‘அ.மார்க்ஸ் வகை’ பின்நவீனத்துவத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் எனும் ஒரே ஒரு காரணத்திற்காகவே வறட்டு மார்க்சியர்கள் என்கிறார் ‘எல்லா மண்ணும் கரைத்துக் குடித்த’ ‘ஷோ’.
தோழர்கள் நா.முத்துமோகனும் தமிழரசனும் தத்துவ நூல்களை மூலமொழிகளில் படிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அ.மார்க்சின் புத்தகங்கள் வழியில் ‘மட்டுமே’ எல்லா மண்ணும் படித்த ‘ஷோ’ விடம் அவர்கள் வறட்டு மார்க்சியர்கள் எனப் பட்டம் வாங்குவது எவ்வளவு துயரம் பாருங்கள்!
இனி, என் பிரச்சினைக்கு வருவோம். மூன்றாவது முறையாகவும் ‘குண்டிதட்டிச்’சிரிக்க வேண்டியிருக்கிறது.
‘ஒரு மண்ணும் விளங்காமல், வெறும் மலிவான அரசியல் சொற்தொடர்களை அள்ளிவீசிப் பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம் போன்றவற்றை மட்டுமல்லாமல் மார்க்ஸியத்தையும் கொச்சைப்படுத்தி இலக்கியச் சூழலில் தகிடுதித்தம் செய்து வருபவர்கள் மூன்றாவது பிரிவினர். இந்த மூன்றாவது பிரிவில் எம்.ஜி.சுரேஷ், யமுனா ராஜேந்திரன், ரியாஸ் குரானா போன்றவர்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்’ என்கிறார் ‘ஷோ’.
பின்நவீனத்துவம் குறித்து ‘முழு மண்ணும் அறிந்த’ ‘ஷோ’ ‘பின்நவீனத்துவம் குறித்து’ எழுதி அது தொடர்பான ஒரு கட்டுரை கூட நான் வாசித்ததில்லை. அப்படி அவர் ‘பின்நவீனத்துவம்’ பற்றி தன் எழுத்துக்களில் கொஞ்ச நஞ்சம் எங்காவது குறிப்பிட்டாலும், அது அவரது ஆசான் அ.மார்க்சிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘மேற்கோளாகவே’ இருக்கும். என் சிற்றறிவுக்கு எட்டாத தூரத்திலிருந்து ‘ஷோ’ எதுவேனும் கோட்பாட்டு ரீதியில் ‘பின்நவீனத்துவம் குறித்து’ எழுதியிருப்பதாகக் காண்பிப்பாரானால், நான் மிகுந்த தன்யனாவேன்.
நல்லது. ‘ஒரு மண்ணும் விளங்காமல்’ நான் எழுதிய பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகள் பற்றி மிகுந்த பணிவுடன் கொஞ்சமாகக் குறிப்பிடுகிறேன்.
(1). இஸ்லாமிய அடிப்படைவாத சார்பு நிலையிலிருந்தும், மார்க்சியர்களை நக்கல் செய்தும், மிஸேஸ் பூக்கோ எழுதிய ஈரானியப் புரட்சி குறித்த கட்டுரைகள் குறித்து ‘பூக்கோவின் ஆன்மீக அரசியல்’ என ஒரு விரிவான கட்டுரையை நான் எழுதியிருக்கிறேன். (2). ஈராக் மற்றும் குன்டனாமோ அனுபவங்களின் பின்னணியில் ழான் போத்ரிலார் பற்றி ‘விதிவாதியின் பிம்ப அரசியல்’ என மிக விரிவான கட்டுரை ஒன்றை நான் எழுதியிருக்கிறேன். (3). ழாக் தெரிதா மரணமுற்ற வேளையில், அவரைப் பற்றி ‘பின்நவீனத்துவாதிகள் புரிந்துகொண்டிருப்பது போல அவர் அறிவொளி மரபின் எதிர்ப்பாளர் என்பது பொய்’ எனபதனை விளக்கி ஒரு விரிவான கட்டுரையை நான் எழுதியிருக்கிறேன். இக்கட்டுரைகள் அனைத்தும் தமிழகத்திலிருந்து வெளியாகும் ‘உயிர்மை’ இதழில் வெளியாகியிருக்கின்றன.
இதுவன்றி பின்நவீனத்துவத்தை மார்க்சிய வழியில் நின்று எதிர்கொண்ட பிரெடரிக் ஜேம்ஸன், எர்னஸ்ட் லக்லாவ், டெர்ரி ஈகிள்டன், அலன் ஸாக்கல், பியர்ரே போர்தியோ, இஜாஸ் அஹமது மற்றும் ஸ்டூவர்ட் ஹால் போன்றவர்களின் விரிவான உரையாடல்களை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். கிராம்ஸி மற்றும் பின்நவீனத்துவம் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். லியோதார்த் பற்றி வரலாற்றுரீதியான ஒரு மதிப்பீட்டை முன்வைத்திருக்கிறேன். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘நான் பின்நவீனத்துவ நாடோடி இல்லை’ என 280 பக்கத்தில் ‘உயிர்மை’ பதிப்பகத்தின் சார்பில் நூலாகவும் ஆக்கியிருக்கிறேன்.
இதுவெல்லாம் ‘ஒரு மண்ணும் விளங்காமல்’ பின்நவீனத்துவம் குறித்து எனது சொந்த வாசிப்பின் அடிப்படையில் நான் எழுதியவை. மேற்கண்ட என்னுடைய எந்தக் கட்டுரையின் அடிப்படையில், அல்லது எந்த பின்நவீனத்துவ ஆசிரியரின் மீதான எனது அபிப்பிராயங்களின் அடிப்படையில் நான் ‘ஒரு மண்ணும் விளங்காமல்’ எழுதுகிறேன் என்ற முடிவிற்கு வந்தீர்கள் என ‘ஷோ’வே, நான் அறிய ஆவலாயிருக்கிறேன்.
நீங்கள் இந்த முடிவிற்கு வந்ததற்கான காரணங்கள் எனக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.
முதலாவது காரணம், உங்களது புகலிட தகிடுதித்தங்களுக்கு எதிராக நான் முன்வைத்த சவால்களை எதிர்கொள்ள முடியாததன் இயலாமையில் கொண்ட பொறாமையினாலும், காழ்ப்புணர்வினாலும்தான் இந்த முடிவிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
இரண்டாவது காரணம், ‘பின்நவினத்துவத்தின் பெயரில்’ அ.மார்க்சும். ரவிக்குமாரும் முன்வைக்கும் ‘மார்க்சிய எதிர்ப்பு விவாதங்களை’ இன்றைய நிலையில் நான் ‘மட்டுமே’ உடனுக்குடன் எழுத்தில் எதிர்கொண்டு வருகிறேன்.
புகலிட போலி தலித்தியர்களான உங்களது ஆசான் அ.மார்க்ஸ் குறித்து உங்களிடம் ஒரு ‘கற்பிதம்’ இருக்கிறது. ‘அ.மார்க்சுக்கு எதிரானவன் பின்நவீனத்துவத்திற்கு எதிரானவன், அப்புறமாக பின்நவீனத்துவத்திற்கு எதிரானவன் தலித்தியத்திற்கு எதிரானவன்’. இது ஒரு முட்டாள்தமான கற்பிதம்.
உங்களது எல்லாக் குழப்பங்களும் காழ்ப்புணர்வுகளும் அங்கிருந்துதான் கட்டமைக்கப்படுகின்றன.
அ.மார்க்ஸையும், ரவிக்குமாரையும், ராஜ் கௌதமனையும் நான் காழ்ப்புணர்வின் காரணமாகவோ அல்லது தனிநபர் துவேசத்தின் காரணமாகவோ விமர்சிக்கவில்லை. கோட்பாட்டின் அடிப்படையில்தான் விமர்சிக்கிறேன். ழான் போத்ரிலாரை ‘மார்க்சியம் கடந்த மாவீரன்’ என ரவிக்குமார் முன்வைப்பதையும், மார்க்சியம் காலாவதியாகிவிட்டது, வர்க்கம் எனும் கருத்தாக்கம் காலாவதியாகிவிட்டது, உழைப்பு வெறும் ‘குறி’யாகிவிட்டது என்றெல்லாம் அவர் ‘திரிப்பதைத்தான்’ நான் விமர்சிக்கிறேன்.
அரசியல் இஸ்லாமின் பயங்கரவாதத் திட்டத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கும், இஸ்லாமிய வெகுமக்களின் துயர்களுக்கும் இருக்கிற வித்தியாசங்களை இல்லாதொழிக்கிற அ.மார்க்சின் ‘கலாச்சாரச் சார்புவாத’ப் பார்வையைத்தான் நான் விமர்சிக்கிறேன். ‘கட்டுடைப்பின்’ பெயரில் சி.ஐ.ஏ.ஆவணங்களின் அடிப்படையில், பிடல்-சேகுவேரா முரண்பாட்டை விளக்க முனையும் அ.மார்க்சின் பார்வையை நான் விமர்சிக்கிறேன். ‘கட்டுடைக்கிறேன்’ எனும் பெயரில் பகத்சிங்கை சீக்கிய மத ஆளுமையாக அ.மார்க்ஸ் கட்டுவதைத்தான் நான் விமர்சிக்கிறேன். ஆப்ரிக்கரான நெல்சன் மண்டேலாவையும், இஸ்லாமியரான யாசர் அராபத்தையும், மார்க்சியரான சேகுவேராவையும் ‘திருஉருவைக் கலைக்கிறேன்’ எனும் ஹோதாவில் ஒருவருக்கு எதிராக மற்றவரை அ.மார்க்ஸ் நிறுத்துவது ‘விசமத்தனம்’ என்கிறேன் நான்.
‘தலித்துகளில் ஒரு சாரார் முதலாளித்துவ வாழ்க்கையை மேற்கொள்ளலாம், பிறர் குற்றச் செயல்கள் செய்யலாம்’ என ராஜ் கௌதமன் முன்மொழிவதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.
‘பின்நவீனத்துவத்தின்’ பெயரிலும், ‘தலித்தியத்தின்’ பெயரிலும் அப்பட்டமான மார்க்சிய எதிர்ப்பு நிலைபாடுகளை இவர்கள் மேற்கொள்வதை எதிர்கொள்கிற உரிமை எனக்கு உண்டு.
பின்நவீனத்துவம் தன்னளவில் முற்போக்கானதோ, இடதுசாரி நிலைபாடு கொண்டதோ அல்லது புனிதமானதோ அல்ல. அதில் ‘இடதுசாரி’ நிலைபாடுகளும் உண்டு. ‘வலதுசாரி’ நிலைபாடுகளும் உண்டு.
பின்நவீனத்துவ இலக்கிய குணங்களான வரலாற்றைப் புரட்டிப் போடுதல், பிரதியை வெட்டி ஒட்டுதல், பகடி செய்தல் என்பதனை, ‘ஷோ’ மட்டுமல்ல, சாநியும் ஜெயமோகனும் கூடத்தான் செய்கிறார்கள். ஜெயமோகனின் ‘வலதுசாரி’ பின்நவீனத்துவப் ‘பகடி’ யாரை எரிச்சல் மூட்டவேண்டுமோ அவர்களை எரிச்சல் மூட்டித்தான் இருக்கிறது.
சாநியின் ‘பகடி’ வெறும் ‘பிரதி இன்பமாக’ தற்போது எஞ்சி நிற்கிறது. சாய்பாபா பக்தராகவும், ஜோசிய நம்பிக்கையாளராகவும் அவரது பின்நவீனத்துவம் அவரை நிறுத்தியிருக்கிறது. ‘ஷோ’வின் ‘பகடி’களிலும் இவ்வாறான மார்க்சிய விரோத, ‘வலதுசாரி’ நிலைபாடுகளை என்னால் பட்டியலிட முடியும்.
ஜெயமோகனது எழுத்தையும் அவரது பல கட்டுரைகளையும் ‘பின்நவீனத்துவ’ எழுத்து அல்ல என மறுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது நிலைபாட்டுக்குக் காரணம் என்னவென்றால், ஜெயமோகனது எழுத்தைப் பின்நவீனத்துவ எழுத்து என ஒப்புக்கொண்டால் ‘பின்நவீனத்துவம் தன்னளவில் புரட்சிகரமானது’ என்கிற தமது வேசம் தகர்ந்து போய்விடும் என்கிற அவர்களது பயம்தான்.
நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் : காலனிய எதிர்ப்பு இந்துத்துவமும், மேற்கத்திய மற்றும் மார்க்சிய எதிர்ப்பு அரசியல் இஸ்லாமும், நரேந்திர மோடியும் பின்லாடனும் ‘பின்நவீனத்துவ’ உற்பத்திகள்தான்.
ஆகவே பின்நவீனத்துவத்தை ஏதோ மந்திரம்-மாங்காய் மாதிரி எங்களுக்குப் பேய்க் காட்ட வேண்டாம்.
நீங்கள் பின்நவீனத்துவப் ‘பகடி’ எனும் பெயரிலும் ‘அதிகார மையங்களைத் தகர்க்கிறோம்’ எனும் பெயரிலும் எத்தனை பேரைப் புண்படுத்தியிருக்கிறீர்கள் தெரியுமா? தமிழகத்திற்கு உல்லாசப் பயணம் செய்து, தண்ணியும் பாரின் கரன்சியும் ஓடவிட்டு, நீங்கள் குமுதத்திலும் ஆனந்த விகடனிலும், அ.மார்க்சின் பாசையில் ‘பார்ப்பனப் பத்திரிக்கை’யான இந்தியா டுடேயிலும் நேர்முகம் தருகிறீர்கள். இந்தப் பகாசுரப் பத்திரிக்கைளில் இல்லாத எந்த ‘அதிகார மையத்தை’ வா.கீதாவிடமும், அம்பையிடமும், எஸ்.வீ.அரிடமும், யமுனா ராஜேந்திரனிடமும் நீங்கள் கண்டீர்கள்?
ஆனால், உங்கள் மீதான விமர்சனங்களை நீங்கள் அதே ‘பகடிகள்’ என எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் அதனை குரோதத்துடனும், பத்தாண்டுகளின் பின்னும் மறக்காமல் மனித வேட்டைக்கு இரத்த வெறிகொண்டலையும் ஓநாய்கள் போல வெறியுடன் காவித் திரிகிறீர்கள்.
அ.மார்க்சினது சீடர்கள் ரவிக்குமாரை ‘ஏவல் நாய்’ என்றெல்லாம் எழுதீனீர்கள். ஜெயமோகன் 3 பக்கம் எழதிய பகடிக்கு, ‘குய்யோ முறையோ’ எனக் குதித்துக் கொண்டு 45 பக்கத்துக்கு சாரு நிவேதிதா, ஜெயமோகனின் ‘கொலை வெறி’ என எழுதிச் சுற்றுக்கு விடுகிறார்.
தமிழ் இலக்கிய விமர்சனத்தை வசவுகளாலும் அவதூறுகளாலும் நிரப்பியவர்கள் ‘பின்நவீனத்துவ பகடிக்கார்கள்’ ஆகிய நீங்கள்தான். அதுவே இப்போது உங்களுக்கு எதிராகத் திரும்புகிறபோது ‘வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு’ புலம்பித் திரிகிறீர்கள். ஏன் உங்களுக்கு இவைகளை ‘பகடிகள்’ என எடுத்துக் கொண்டு புன்னகை செய்துவிட்டுப் போக முடியவில்லை?
உங்களுக்கு எவ்வளவு ஆத்திரமும், தனிப்பட்டரீதியில் புண்படுத்தி விட்டானே எனக் கோபமும் வருகிறது! நீங்கள் எத்தனை பேரை ‘பகடி’ எனும் பெயரில் இப்படிப் புண்படுத்தியிருக்கிறீர்கள் என என்றேனும் நினைத்துப் பார்த்திருக்கீறீர்களா?
பின்நவீனத்துவம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பால பாடம் இது : ‘பின் நவீனத்துவங்கள்’ தான் உண்டு. பின் நவீனத்துவம் என்று ‘ஒன்றே ஒன்று மட்டும்’ இல்லை. ‘பின்நவீன நிலைகள்’ தான் உண்டு. பின்நவீன நிலை என்று ‘ஒன்றே ஒன்று மட்டும்’ இல்லை. பின்நவீனத்துவம் எனும் ‘செயல்பாட்டை’ வேறு வேறு கோட்பாட்டாளர்கள் வேறு வேறு வகைகளில் விளக்குகிறார்கள். பின்நவீனநிலை எனும் ‘காலத்தை’ வேறு வேறு கோட்பாட்டாளர்கள் வேறு வேறு வகைகளில் விளக்குகிறார்கள். லியோதார்த் குறித்தும், ‘வலதுசாரி’ மற்றும் ‘இடதுசாரி’ பின்நவீனத்துவம் குறித்தும் விரிவாக ஆய்வுகள் செய்திருக்கிற சைமன் மில்பாஸ் மற்றும் ஹால் போஸ்ட்டர் போன்றோரின் எழுத்துக்கள் இவ்வகையில் உங்களுக்கு உதவ முடியும்.
இவ்வகையில் ரியாஸ் குரானோவினதோ அல்லது எம்.ஜி.சுரேஷினதோ எழுத்துக்களை, நீங்கள் ‘அடிப்படைவாதம்’ என்றோ ‘அரசியல் சாராதது’ என்றோ விமர்சிக்கலாம், ஆனால், அவர்களுக்கு ‘ஒரு மண்ணும் விளங்கவில்லை’ என விமர்சிக்க முடியாது.
பின்நவீனத்துவத்திற்கு உங்களுக்கு அ.மார்க்ஸ்தான் அதிகாரபூர்வ விரிவுரையாளர். ஆனால், பிறருக்கு அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
என்னளவில் ரியாஸ் குரானாவினது தர்க்கம், அ.மார்க்சினது ‘விமர்சனமற்ற’ இஸ்லாமின் நீட்சிதான் என்றே நான் சொல்வேன். இதற்கென்ன ஆதாரம் என நீங்கள் கேட்பீர்களானால், பின்நவீனத்துவம் - அரசியல் இஸ்லாம் - மார்க்சியம் தொடர்பான எனது ‘அரசியல் இஸ்லாம்’ (உயிர்மை பதிப்பகம்) எனும் 320 பக்கங்கள் கொண்ட நூலை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
சரி. பின்நவீனத்துவம் குறித்து வாய் கிழிய முழங்குகிற உங்களுக்கு, பின்நவீனத்துவத்தின் அடிப்படைகள் கூட விளங்குவதில்லை என்பதனை நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன். அடிப்படையில் பின்நவீனத்துவம் என்பது ‘பன்முகத்துவத்தையும்’ ‘மற்றதையும்’ அங்கீகரிப்பது என நீங்கள் சதா வாயடிக்கிறீர்கள். பிறகு ஏன் உங்களுக்கு மாற்றதானதை அல்லது விருப்பமில்லாததைப் பேசுகிறவர்களைப் பேசவிட மாட்டேன் என்கிறீர்கள்?
ஏன் அவர்கள் மீது வசவுகளையும் வன்முறைகளையும் ஏவுகிறீர்கள்?
எனக்கு உவப்பில்லாத வகையில் தம் கருத்துக்களை, எழுத்துக்களை முன்வைக்கிறார்கள் எனும் காரணத்திற்காக ஒரு நாளும் நான் உங்களையோ அல்லது அ.மார்க்ஸ், ரவிக்குமார் போன்றவர்களையோ அல்லது ரியாஸ் குரானோவையோ அல்லது எம்.ஜி.சுரேஷையோ ‘ஒரு மண்ணும் விளங்காமல்’ பேசுகிறார்கள் எனச் சொல்லமாட்டேன்.
உங்களிடம் எனக்குப் பிடிக்காத, நான் வெறுக்கிற விடயம் நீங்கள் ‘வேடதாரிகளாக’ இருக்கிறீர்கள் என்பதுதான். ‘தெரியாத’ விசயங்களை நீங்கள் ‘தெரிந்ததாகக்’ காட்டிக் கொள்கிறீர்கள். அதனைச் சுட்டிக் காட்டுபவர்களை காழ்ப்புடனும் வன்மத்துடனும் வசைகளுடனும் நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். அறிவுச் சூழலுக்கு இது உகந்தது இல்லை.
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. அ.மார்க்ஸ் அறிந்த வகையில்தான், இவர்கள் அவரது சீடர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு, ‘தமது காரியங்களை’ச் சாதித்துக் கொள்ளவும், தமது ‘எதிரிகளைச் சரிக்கட்டவும்’ தமது ‘திருவிளையாடல்களின்’ பொருட்டு அவரது பெயரைப் பாவிக்கிறார்களோ என? இதனை அவர் மட்டுமே தெளிவுபடுத்த முடியும். சரி. அது பிறிதொரு விசயம் என்பதால் அதனை இப்போது விட்டு விலகுகிறேன்.
6
நெடுகவும் இந்த விவாதத்தின் தொனி மிகவும் எதிர்மறையாகவே இருக்கிறதை நான் அவதானிக்கிறேன். வசவுகளும் வன்மங்களும், பொய்களும் வேஷங்களும், அவதூறுகளும் நிறைந்த ஒரு சூழலை எதிர்கொள்ள வேறு விதமான மொழி நடை சாத்தியமில்லை.
சுகன், ஷோப சக்தி போன்ற படைப்பாளிகள் தொடர்பாக என்னிடம் பாராட்டுணர்வே இல்லையா? நிச்சயமாக இருக்கிறது. சுகனின் புகலிட வாழ்வின் தனிமை குறித்த பல கவிதைகள், ஷோபா சக்தியின் புனைவு மொழி மற்றும் அவரது பல சிறுகதைகள் அற்புதமானவை என்பதை நான் அவர்களிடம் நேரிலேயே சொல்லியிருக்கிறேன். ‘சனதரும போதினி’யில் வெளியாகின தலித் படைப்புகளை நான் ஆக்கபூர்வமாகப் பதிந்திருக்கிறேன்.
இன்னும் பாலுறவு ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வைக் கவித்துவத்துடன் படைப்பாக்குகிற சாணக்யா, தலித்துகள் மீதான ஒடுக்குமுறையை கலை அழகுடனும் ஆவேசத்துடனும் படைப்பாக்குகிற ஆதவன் தீட்சண்யா மற்றும் அழகிய பெரியவன் போன்ற தலித்தியர்களுடன் ஒப்பிடுகிறபோது ‘ஷோ’ அப்படி ஒன்றும் பெரிய படைப்பாளனும் இல்லை.
பிறப்பில் இஸ்லாமியர் அல்லாத ஒருவர் இஸ்லாமிய விரோதியாக இருக்கத் தேவையில்லை. பிறப்பில் கிறித்தவராக இல்லாத ஒருவர் கிறித்தவ எதிரியாக இருக்கத் தேவையில்லை. பிறப்பில் இந்துவான ஒருவன், பிறப்பில் தலித் அல்லாத ஒருவன், இயல்பிலேயே இந்துவெறியனாகவோ அல்லது தலித் விரோதியாகவோ இருக்கத் தேவையில்லை.
மார்க்சியம் வழங்கிய மிகப்பெரும் கொடையே இந்த அடையாளங்களுக்கு அப்பாலான, விடுதலை பெற்றதொரு அடையாளத்தைத் தேர்வதுதான்.
வெறும் கருத்தியல் மட்டத்தில் அல்லாமல், அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளில் ‘மத-சாதிய-வர்க்க-இன நீக்கம்’ செய்து கொள்வதன் வழி, இதனை நடைமுறையில் அடைய முடியும் என்றவர் மார்க்ஸ். இது ஒரு தரிசனம் போன்றது.
இவ்வகையில் எவரும் புனிதர்களும் இல்லை. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களும் இல்லை. மார்க்சியர்கள், பின்நவீனத்துவாதிகள், தலித்தியர்கள் என எவரும் இதற்கு விதிவிலக்கானவர்கள் இல்லை.
இந்த ‘விமர்சன சுதந்திரம்’ மட்டுமே விடுதலை பெற்ற மனிதனை உருவாக்குவதற்கான ஒரே முன்நிபந்தனையாக இருக்கும்.
இவர்கள் ஒரு விதமான அச்சத்தை ‘தலித் அல்லாத’ இவர்களது ‘கற்பிதமான எதிரி’ மனிதர்களிடம் உருவாக்க வெறிகொண்டலைகிறார்கள். இன்றைய தலித்தியக் கோட்பாட்டாளர்களின் மார்க்சிய விரோதத்தையும், புகலிட ‘போலி’ தலித்தியர்களின் சவடால்களையும் விமர்சித்த காரணங்களுக்காகவே, பார்ப்பனியவாதியாக, தலித் விரோதியாக என்னைச் சித்தரிக்க முயலும் ‘ஷோ’ மற்றும் இவர்களது புதிய சகபாடிகளான ‘தலித்திய நகல் போலி’ தந்திரோபாயக்காரர்களுக்காக இரு தகவல்களைச் சொல்ல விரும்புகிறேன்.
முதலாவதாக, எழுத்திலும் நடைமுறையிலும் நான் எனது அன்றாட வாழ்வில் தலித்தியர்களின் தோழனாகவும் நண்பனாகவுமே வாழ்ந்து வருகிறேன். தலித்தியம் இன்னும் தமிழகத்தில் ஒரு இலக்கிய சக்தியாகவோ அல்லது அரசியல் சக்தியாகவோ வேரூன்றாத காலம் அது. ஆர்ஜன் தாங்க்ளே மற்றும் நீரவ் பட்டேல் (நீரவ் பட்டேலுக்கு நேரடியாக எழுதி அன்று அவரது கவிதைத் தொகுப்பைப் பெற்றேன்) உள்ளிட்ட மராத்திய மாநில தலித் கவிகளின் எட்டுக் கவிதைகளை மொழிபெயர்த்து அன்றைய நாளில் நண்பர் தமிழவன் பெங்களுரிலிருந்து வெளியிட்டு வந்த ‘படிகள்’ இதழில் நானும் எனது நண்பர்களும் வெளியிட்டோம். ராஜசேகர் ஷெட்டி மூலம் கர்னாடகாவிலிருந்து வந்துகொண்டிருந்த ‘தலித் வாய்ஸ்’ எனும் பத்திரிக்கையை வரவழைத்து நண்பர்கள் மத்தியிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மத்தியிலும் நாங்கள் விநியோகித்து வந்தோம்.
இரண்டாவதாக, கோவை மருத்துவக் கல்லூரியில் தலித் மாணவர்களுக்கு எதிரான கொங்குக் கவுண்டர்களின் அப்பட்டமான சாதிய வன்முறை நிலவி வந்த காலம் அது. ‘புதிய தமிழகம்’ கட்சியின் தோற்றத் தலைவரான டாக்டர்.பா.கிருஷ்ணசாமி மாணவர்கள் மத்தியில் தலித்திய நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த காலம் அது. கோவை பீளமேட்டில் இருக்கும் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற, கொழுந்துவிட்டெறிந்த அந்த வன்முறை நாட்களில், நான் பங்கு பெற்றிருந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தோழர்கள் மற்றும் பகத்சிங் இளைஞர் மன்றத் தோழர்கள், தலித் தோழர்களுக்கு ஆதரவாக முழுமையாக அந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு, ஆதிக்க வன்முறையை முறியடித்தோம். தோழர்கள் டாக்டர் மனோகரன், டாக்டர்.மதியழகன் மற்றும் டாக்டர் எம்.எஸ்.மணி போன்ற தலித்தியத் தோழர்களது அன்பான முகங்கள் இன்றும் எனது நினைவில் இருக்கிறது.
நான் ஏன் ‘ஷோ’வை ‘தலித் நகல் போலி’ என்கிறேன் என்பது தொடர்பாக சிறு விளக்கம் : ‘ஷோ’வினதும் சுகனதும் திருவிளையாடல்களின் பின் யார் ‘நிஜமான ‘தலித்’ யார் ‘தலித் அல்ல’ எனவே தெரியாமல் போகிற ஒரு சூழல் புகலிடத்தில் வந்துவிட்டது. தமது சொந்த ஏற்றங்களுக்கும், தமது இலக்கிய நோக்கங்களைச் சாதித்துக் கொள்ளவும், தமது வேஷங்களை மறைத்துக் கொள்ளவும் ‘தலித்’ எனபதனை இவர்கள் இருவரும் ஒரு முகமூடியாகப பாவிக்கிறார்கள் என்பதனால்தான் ‘ஷோ’வை நான் ‘தலித் நகல் போலி’ என்கிறேன்.
‘ஷோ’ நிஜத்தில் ‘தலித் அல்ல’ என்பதும், அவர் ‘தலித் போல நடிப்பவர்’ என்கிறதுமான நிஜத்தையாவது குறைந்த பட்சம் போலித்தனமின்றி அவர் ஒப்புக் கொள்ள வேணடும் என்பதுதான் எனது பணிவான வேண்டுகோள்.
மனிதர்களாக நாம் அனைவருமே எமது பெற்றோருடனும், குடும்ப உறவுகளான மனைவி, மகன், மகள் ஆகியோருடனும், எமது சமூக உறவுகளான நண்பர்களுடனும், எமது அரசியல் உறவுகளான தோழர்களுடனும், நாம் முரண்பாடுகளுடனும் உடன்பாடுகளுடனும் தான் அன்றாட வாழ்வைக் கடந்து போக வேண்டியிருக்கிறது.
‘பிளவுன்ட தன்னிலை’களாக, ‘பற்பல தன்னிலை’களாகத்தான் நாம் இருக்கிறோம். ‘அடுத்த’ மனிதனுடன் முரணும் உடன்படுதலும், கோபமும் சந்தோசமும் கொள்தலும் எனவே நாம் வாழ வேண்டியிருக்கிறது. அவ்வகையில் எமது வாழ்வுக்கும் எமது கோட்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியைக் கடந்து செல்வது என்பது எமது துயர்மிகு வாழ்வின் இருத்தலியல் பிரச்சினையாகவே இருக்கிறது.
கார்ல் மார்க்சுக்கும் ஹெலன் டெமுத்துக்குமான உறவு, பிராமணியத்தைக் கடுமையாக நிராகரித்த அம்பேத்கார் ஒரு பிராமணப் பெண்ணையே மணக்க நேர்நதது, அரசும் வன்முறையும் குறித்து நீக்குப் போக்கான பெரியாரியப் பார்வை, மாயாவதியின் கணக்கில் வராத சொத்துக் குவிப்பு என முரணும் உறவும் கொள்ள எம்மிடையில் பற்பல விடயங்கள் கொட்டிக் கிடக்கிறது.
இச்சூழலில் ‘பிறரை’ விமர்சிப்பதற்கான தகைமையும் உரிமையும் ‘ஒளிவட்டமும்’ கொண்டவர்கள் என எந்தக் கோட்பாட்டாளனும் அல்லது எந்தத் தனிமனிதனும் கோரிக் கொள்ள இயலாது. இது மார்க்சியருக்கும், தலித்தியருக்கும் என அனைவருக்கும் பொருந்தி வரும் நிலைபாடுதான்.
இறுதியாக, இக்கட்டுரையின் பின் தனிமனிதத் தாக்குதல்களும் வசைகளும் வீசப்படும் என்பதனை நான் எதிர்பார்த்தே இருக்கிறேன். இவை எவற்றுக்கும் நான் அஞ்சப் போவதில்லை.
நான் முழுக்கவும் எழுத்து மற்றும் நடத்தை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்துத்தான் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். பொத்தாம் பொதுவாக நான் எதனையும் பேசவில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமலும் எதையும் நான் பேசவில்லை. பொதுவாகச் சில பின்நவீனத்துவவாதிகள், ‘தனிநபர் வாழ்வைப் பற்றிப் பேசுவதென்பது நுண் அரசியல் சார்ந்தது’ எனும் ஒரு நிலைபாட்டை முன் வைக்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில் முடை நாற்றமெடுப்பதாகவே இந்த நிலைபாடு சென்றடையும் என்பதுவே எனது தனிப்பட்ட நிலைபாடு. ஆனால், ‘அவர்களது’ நிலைபாட்டை ‘அவர்களுக்கான’ தர்க்கத்தின் பொருட்டு நான் ஏற்கிறேன்.
ஆனால், ஒரு மிக முக்கியமான நிபந்தனையின் வழிதான் நான் இதில் ஈடுபட முடியும். எனது சொந்த வாழ்வு, எனது பாலுறவுகள், எனது குடும்ப உறவுகள், நண்பர்கள் தோழர்களுடனான எனது கொடுக்கல் வாங்கல்கள், புத்தகங்கள் தொடர்பான எனது கொடுக்கல் வாங்கல்கள், எல்லாவற்றையும் பேச எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை. ஆனால், பிரச்சினையில் ஈடுபடுகிற இரு நபர்களும் தங்கள் குறித்த தரவுகளை முன்வைத்தால் தான், இதிலுள்ள ‘நுண் அரசியல் முழுமையாக வெளிப்படும்’ என நான் நம்புகிறேன்.
ஆகவே, இப்படியான ‘தனிநபர் வாழ்வு சார்ந்த நுண் அரசியல் விவாதத்தை’த் துவங்க நினைப்பவர்கள், முதன்மையாகத் தமது பாலுறவுகள, குடும்ப வாழ்வு, அவர்தம் குடும்ப உறவுகள், அவர்தம் கொடுக்கல் வாங்கல்கள், அவர்களது பூர்வீகச் சாதி, அவர்தம் குடும்பத்தவர் மேற்கொள்ளும் சமயச் சடங்குகள், அவர்கள் பிறர் மீது செலுத்திய வன்முறைகள், புத்தக கொடுக்கல் வாங்கல் விவரங்கள் அனைத்தையும் முன் வைத்து இந்த விவாதங்களைத் தொடங்குவார்களானால், அந்த விவாதத்தில் நான் முழு அளவில் ஒத்துழைப்பேன் என உறுதியளிக்கிறேன்.
புனைபெயரில் எழுதுகிறவர்கள், அநாமதேயமான பெயரில் எழுதுகிறவர்கள் போன்றவர்களோடு எனக்கு எந்தவிதமான விவாதமும் சாத்தியமில்லை.
நான் எனது சொந்தப் பெயரில், எனது சொந்த அடையாளத்துடன், விவாதத்திற்கு உட்பட்டவர்களின் பெயர்கள், அவர்களது எழுத்துக்கள் மற்றும் நடத்தைகள் போன்றவற்றை ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். இதே வகையில் தமது சொந்தப் பெயரில், தமது சொந்த அடையாளங்களுடன், எழுத்து மற்றும் நடத்தை சார்ந்த ஆதாரங்களுடன் வருகிற எவரோடும் திறந்த விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்.
வாசக சவுகரியத்திற்காகவும், ஞாபக மீட்புக்காகவும் ஷோபா சக்தியின் காழ்ப்புணர்வின் தடங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்னால், பின்நவீனத்துவம் குறித்த விவாதங்கள் இன்னும் துவங்காத சூழலில், ஈழமுரசு ‘பகடி’ யின் வழி துவங்கிய என் மீதான ‘தனிப்பட்ட’ வகையிலான ‘ஷோ’ வின் ‘காழ்ப்பும் பொறாமையும்’ இந்தப் பத்தாண்டுகளின் பின்பும், 2007 ஆம் ஆண்டு இறுதியிலும், ‘ஷோ’வின் வலைத்தளமான ‘சத்தியக்கடதாசி’ கட்டுரை வரை தொடர்ந்திருக்கிறது.
ஏனெனில், ‘ஷோ’ வின் எந்த அரசியல் வகையிலான அல்லது கோட்பாட்டு வகையிலான அல்லது வாசிப்பு வகையிலான அல்லது ‘பார்வை அனுபவத்தின் வழியிலான எந்த ‘குறிப்பிட்ட ஆதாரங்களின்’ அடிப்படையிலும் ‘ஷோ’ வின் கட்டுரைகள் எழுதப்படவில்லை என்பதை எந்த வாசகனும் வெளிப்படையாகக் காண முடியும்.
‘ஷோ’வின் காழ்ப்புக்கு இன்னுமொரு மேலதிக ஆதாரம் தர வேண்டுமானால், பாரிஸ் ‘அறிவாலயத்தில்’ என்னை ‘ஷோ’ சந்தித்தபோது, அப்போதுதான் வந்திருந்த எம்.ஏ.நுஹ்மானின் ‘பாலஸ்தீனக் கவிதைகள்’ நூலை எடுத்தக் காட்டி, நானும் நுஹ்மானும் மொழிபெயர்த்த மொஹமத் தார்வீசின் ஒரே கவிதையில் பாடபேதங்கள் வித்தியாசமாக இருப்பதை எடுத்துக் காட்டினார். ‘ஷோ’வின் நோக்கம் என்னவென்றால், நான் ‘தப்பாக’கக் கவிதையை மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதை நிறுவுவதாக இருந்தது. மனதுக்கள் நகைப்புடன் ‘ஷோ’ வுக்கு அன்று எந்த பதிலும் சொல்லாமல் புன்னகையை மட்டுமே தந்தேன்.
இப்போது ‘ஷோ’வுக்கு நான் தெளிவாகப் பதில் சொல்கிறேன் : தர்வீஸின் கவிதைக்கு ஒரேயொரு மொழிபெயர்ப்பு என்பது ஆங்கில மொழியில் இல்லை. குறைந்த பட்சம் 10 மொழிபெயர்ப்புகளும், மொழிபெயர்ப்பாளருக்கு அமைந்த சொல்லாட்சிகளும் தான் உண்டு. தமிழ் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர். சுப்பிரமணியம் தொடர்பான விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் கட்டுரையை ‘திண்ணை’ இணைய இதழில் வாசியுங்கள்.(உடனே வெ.சா ஒரு பாரப்பனன் என்று குதிக்க வேண்டாம். அவது அரசியல் குறித்த விமர்சனம் எனக்கும் உண்டு). குறிப்பிட்ட ஒரேயொரு கவிதையை குறிப்பிட்ட ஒரேயொருவர் மொழியாக்கும்போதும் கூட அவரது ‘காலம்’ மற்றும் ‘மனநிலையைப் பொறுத்து’ பாடபேதம் உள்பட மொழிபெயர்ப்பின் தன்மை மாறுபடும் என்கிறார் டாக்டர். சுப்பிரமணியம். யாராவது ‘எனது மொழிபெயர்ப்புத்தான் முழுமையானது’ என்று சொல்வார்களானால் என்னால் புன்னகையை மட்டமே பதிலாகத் தரமுடியும். அதனைத் தான் அன்று ‘ஷோ’வுக்கு நான் பதிலாகத் தந்தேன்.
மேலதிகமாகவும் ஒரு தகவல் : நுஹ்மான் மொழிபெயர்த்த ‘பாலஸ்தீனக் கவிதைகள்’ நூலுக்கான ஆதாரமான கவிதைப் புத்தகங்களை என்னிடமிருந்துதான் நான் இலண்டனுக்கு வந்திருந்த நுஹ்மானுக்குக் கையளித்தேன் என்பதை இப்போது ‘ஷோ’வுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
7
புகலிடத்தில் மார்க்சியர்களிடையில் ‘தலித் விராதி’களைக் கட்டமைக்கிற ‘ஜனநாயகவாதிகள்’ அல்லது ‘வன்முறை மறுப்பாளர்கள்’ என வேஷம் போடுபவர்கள் அனைவரும் தலித்தியர் அல்லாதவர்கள்தான்.
ஷோபா சக்தியும் சுகனும் இவர்களது ‘சகபாடிகளும்’ தங்கள் ‘தலித்திய முகமூடி’களை மற்றும் ‘ஒப்பனை’களைக் களைந்துவிட்டு திறந்த விவாதத்திற்கு வருமாறு நான் அழைக்கிறேன். அல்லவெனில், இனிமேல் வாயை மூடிக்கொண்டு இருங்கள் எனவும் கோருகிறேன். அவதூறுகளை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இங்கே இப்போது ‘சும்மா’ இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குப் போய் அள்ளித் தெளித்து நேர்முகம் கொடுக்கிற ‘பம்மாத்து’ வேலையையெல்லாம் இத்தோடு மூட்டை கட்டி வைத்து விடுங்கள் என்கிறேன். ‘குசும்பு’ வேலைகளை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறேன்.
‘ஷோ’ அல்லது படம் காட்டுபவரே, ஷோபா சக்தி : போதும், உமதும் உமது ‘சகபாடிகளதும்’ கபடத்தனங்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
Thanks
Thesamnet
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment