மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 25, 2009

நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்: தேசபக்தன்

நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்
Thanks fot thesamnet


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை சரிவர புரிந்து கொள்வது பலருக்கு மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. பொதுவாக புலிகளின் தலைமைப் பாத்திரம் நிரந்தரமானதல்ல. அதுவும் கூட ஒருநாள் மாற்றமடைந்தே தீர வேண்டும் என்று மிகவும் உறுதியாக நம்பியிருந்த புரட்சியாளர்கள் கூட இப்படியான வேகமானதும், சடுதியானதுமான ஒரு மாற்றத்தை தமது கனவிலுங்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. ஆமாம், வரலாறு எழுதிச் செல்லும் போது அது எந்தவிதமான ஈவிரக்கமும் காட்டாமல்தான் எழுதி முடிக்கிறது. அதனை புரிந்து கொள்வதற்குத்தான் அதற்குள்ளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிகம் சிரமத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்போது நடந்து முடிந்தது ஒரு அரசியல் “சுனாமி” தான். அதிலும் நாம் இப்போத வந்தடைந்திருக்கும் நிலைமையோ இன்னமும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. தமது செயற்பாடுகளுக்கான அத்தனை கதவுகளையும் புலிகள் சாத்திவிட்ட நிலையில், சரி புலிகள் செய்வதை செய்து முடிக்கட்டும்: எமது சந்தர்ப்பங்கள் வரும்போது நாம் அதைப்பற்றி சிந்திக்கலாம் என்ற நினைப்பில் தமது அன்றாட வாழ்வின் போராட்டத்திற்குள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் கூட இப்படிப்பட்ட மிகவும் சடுதியா வீழ்ச்சியை புலிகளிடத்தில் எதிர்பார்க்கவில்லை. சிறீலங்கா இராணுவத்தின் புள்ளி விபரங்களையும், ஏன் புலிகளது இராணுவ, அரசியல் ஆய்வாளர்களதும் புனைவுகளை நம்புவதில் இவர்களுக்கு பல சிரமங்கள் இருந்த போதிலும், புலிகளின் தலைமை பற்றிய “பிரமை” இவர்களிடத்தில் கூட காணப்பட்டது இப்போதுதான் இவர்களுக்கே உறைக்க ஆரம்பித்துள்ளது. புலிகளது தலைமை ஒன்றும் சூரியனது அவதாரம் என்று நம்புமளவிற்கு இவர்கள் முட்டாள்களாக இல்லாவிட்டாலும், அவர்களது அரசியலின் வங்குரோத்துத்தனம் பற்றி விரிவாகவே அறிந்திருந்தாலுங் கூட, புலிகள் அமைப்பின் இராணுவ வல்லமை, அதன் தலைமையின் போர்க்குணாம்சம் பற்றிய பிரமைகளை கொண்டிருந்தது இப்போது அம்பலமாகிறது.

ஏன் இப்படி நேர்ந்தது என்பதை புரிந்து கொள்வதற்கு பல நாட்கள் செல்கின்றன. பல நீண்ட கருத்துப் பரிமாறல்களும் விவாதங்களும் படிப்படியாக இந்த புதிரின் சிற்சில கூறுகளை தெளிவாக்க உதவி செய்கின்றன. இப்படிப்பட்ட விவாதங்கள், கலந்துரையாடல்கள், மற்றும் தேடல்களில் ஒரு தொகுப்புத்தான் இந்த கட்டுரையாகும். இதில் கூறப்பட்ட எடுகோள்கள், அனுகுமுறைகள் யாவும் திருப்தியானவை என்று கூறுவதைவிட முட்டாள்தனமானது வேறொன்றும் இருக்க முடியாது. சமகால பிரச்சனை ஒன்று தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினரது வெளிப்படையற்ற தனமைகளையும் மீறித்தான் இந்த பரிசீலனையை செய்தாக வேண்டியுள்ளது. இன்னமும் நடந்து கொண்டிருக்கும விடயங்கள் தொடர்பாக சில உய்த்துணர்வுகளையும் முன்வைத்தாக வேண்டியுள்ளது. நாளைய வரலாற்று வெளிச்சத்தில் இந்த உய்த்துணர்வுகளில் சில அசட்டுத்தனமானவை என்று நிரூபனமாகவும் கூடும். ஆனால், போராளிகளுக்கு தேவைப்படுவது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான புரிதலே அன்றி வரலாற்று ஆசிரியனின் “மரண பரிசோதனை” (post mortom) அறிக்கையல்ல. மரண பரிசோதனை அறிக்கையானது உயிருள்ள மனிதரில் பெறப்படும் ஆய்வு அறிக்கையைவிட (diagnostic results) மிகவும் அதிகளவு சரியானதாக இருக்கிறது என்பதற்காக, நோயாளியை காப்பாற்ற முனையும் வைத்தியர் எவரும் மரண பரிசோதனைக்காக காத்திருக்க முடியாது. சில தவறுகளுடன் கூடத்தான் என்றாலும் சமகால பரிசீலனை ஒன்று மட்டுமே நோயாளியை காப்பாற்ற உருப்படியான பங்காற்ற முடியும்.

இன்று நடந்து முடிந்துள்ள யுத்தத்தை சரிவர புரிந்த கொள்ள வேண்டுமானால் நாம் இன்றைய நிலைமைக்கு எம்மை இட்டுச் சென்ற சில விடயங்களை எமது தொடங்கு புள்ளியாகக் கொண்டு அடுத்தடுத்து நடந்துவந்த நிகழ்வுகளினூடாக பயணிப்பதன் மூலமாக மட்டுமே நாம் நடந்து முடிந்த, தற்போது நடந்து கொண்டிருக்கும், அண்மை எதிர்காலத்தில் நடக்கப்போகும் விடயங்கள் தொடர்பா ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டத்தைப் பெற முடியும். இப்படிப்பட்ட ஒரு கண்ணோடடமானது, எமது உடனடிப் பணிகளை நிர்ணயித்துக் கொள்ள தீர்க்கமான வகையில் அவசியமானதாகிறது.

இன்றைய பிரச்சனைகளை சரிவர பற்றிக் கொள்வதற்கு நாம் குறைந்த பட்சம் ஆனையிறவு இராணுவ முகாமை விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்கியழிதது வெற்றி கொண்ட நிகழ்வுடன் தொடங்கியாவது எமது பயணத்தை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. இந்த தாக்குதலானது, 2000 ம் ஆண்டின் ஏப்பிரல் மாதம் நடந்தேறியது. இந்த தாக்குதலை அடுத்து ஈழப்போரட்ட சூழலில் மிகவும் அசாதாரண நிலைமைகள் காணப்பட்டன. இந்த தாக்குதல் வெற்றியானது அன்றிருந்து புலிகளது ஆயுத, ஆட்பல நிலைமைகளில் அடைய முடியாத ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாம் கருத முடியாவிட்டாலுங் கூட, இந்த தாக்குதல் ஏற்படுத்திவிட்ட புதிய சூழ்நிலையை புரிந்து கொண்டால் மட்டுமே அதனை அடுத்த வந்த நிகழ்வுகளையும், அவை மூலமாக எட்டப்பட்ட இன்றுள்ள நிலைமைகளையும புரிந்து கொள்வது சாத்தியப்படும்.

ஆனையிறவு முகாம் தாக்குதல்களை அடுத்து புலம் பெயர் தொடர்பு சாதனங்களான வானொலிகளும், தொலைக் காட்சிகளும் தமது வழமையான அனைத்து நிகழ்ச்சிகளையும் இடைநிறுத்திவிட்டு அன்றைய வெற்றி தொடர்பான அறிவித்தலுடன் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை சேகரிப்பதற்கான நிகழ்ச்சியாக மாற்றப்பட்டிருந்தன. மக்கள் தாமகவே முன்வந்து பணமாகவும், நகையாகவும் தாராளமாகவே அள்ளிக் கொடுத்தார்கள். புலிகளது தலைமையை விமர்சித்த பலரது வாயை அடைக்கச் செய்து அவர்களை புலிகளது ஆதரவாளர்களாக மாற்றி விட்டது இந்த வெற்றி. ஒரு புரட்சிகர குழுவிலிருந்த சிலர் தமது அமைப்பை கலைத்துவிட்டு புலிகளுடன் சென்று சங்கமாகும் அளவிற்கு இந்த சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலை அடுத்து பெறப்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும் மன உந்துதல்கள் காரணமாக அடுத்து வரும் ஒரு குறுகிய காலத்தினுள் யாழ் குடாநாட்டிலுள்ள ஏனைய இராணுவ முகாம்களும் தாக்கியழிக்கப்படலாம் எனவும், இதனை தொடர்ந்து கிழக்கிலும் இதே நடவடிக்கைகளை தொடர்ந்தால் தமிழீழம் பிரகடனப்படுத்த வேண்டியதுதான் பாக்கி என்ற வகையில் எதிர்பார்ப்பு எங்கும் நிலவும் வகையில் படைகளின் சமபல தன்மை (Balance of Forces) புலிகளுக்கு மிகவும் சாதகமாக நகர்ந்திருந்தது. ஆனால் அடுத்த வந்த நிகழ்வுகள் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில் நகரவில்லை.

அன்றிருந்த சர்வதேச நிலைமைகளில். விடுதலைப் புலிகள் அமைப்பானது தனியான அரசை பிரகடப்படுத்தினால் அதனை அங்கிகரிப்பதற்கு எந்தவொரு நாடும் அல்லது சர்வதேச அமைப்புகளும் தயாராக இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பானது தன்னை தனியான அரசாக பிரகடனம் செய்வதை, சர்வதேச சமூகம் அங்கிகரிப்பதானது பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கிறது. ஒரு தேச அரசை பிரகடனப்படுத்துவதும் அதனை சர்வதேச சமூகம் அங்கிகரிப்பது என்பதும் வெறுமனே இராணுவ வெற்றிகளினால் மாத்திரம் நடந்தேறுவதன்று. ஒரு தனியான தேசமாகவும், அதற்கு தனியரசை அமைப்பதற்கான உரிமையை அந்த அரசு கொண்டிருப்பதையும் சர்வதேசம் ஏற்றுக் கொள்வது என்பது இன்னும் பல அம்சங்களில தங்கியிருக்கிறது. முறையானதொரு சிவில் சமூகத்தை கொண்டிருப்பது: முறையாக செயற்படும் ஒரு சிவில நிர்வாகத்தை கொண்டிருப்பது: தான் தனித்து ஒரு அரசாக செயற்படும் காலத்தில் தன்னை கொண்டு நடத்தக் கூடியதொரு மாற்று பொருளாதார திட்டங்களை வடிவமைத்து அவற்றை வெற்றிகரமாக செயற்படுத்துவது: பதில் சொல்லும் பொறுப்பைக் கொண்டதொரு சரியான அரசியல் தலைமையை கொண்டிருப்பது: சர்வதேச சூழலில் நற்பெயரைப் பெற்றிருப்பது போன்றவை இதற்கு மிகவும் அவசியமானதாகும். ஆனால் இப்படிப்பட்ட எந்த வொரு அம்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல் வெறுமனே இராணுவ வெற்றிகளால் மாத்திரம் ஒரு தனியான அரசை அமைத்துவிடுவது என்பது மிகவும் குறுகிய புரிதலின்பாட்பட்டதாகும். அதன் விளைவுகளே இங்கு வெளிப்பட்டன.

அத்துடன் இந்திய அரசு நேரடியான இராணுவ தலையீட்டடை தான் மேற்கொள்ளலாம் என்பது போன்ற சமிக்கைகளை வெளிப்படுத்தியது. தனது தரை. கடல் மற்றும் விமானப் படைகளை பெருமளவில் தென்னிந்திய தளங்களுக்கு நகர்த்தியதுடன், தேவைப்படடால் தாம் கப்பல் மூலமாக பலாலி மற்றும காங்கேசன்துறை இராணுவ முகாமகளிலுள்ள சிறீலங்கா படைவீரர்களை மீட்பதற்கு தயாராக இருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்தது.
இப்படிப்பட்ட ஒரு நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பானது தாம் தமிழீழத்தை அடைவது இராணுவரீதியில் சாத்தியமாகிவிட்டதாகவும், ஆனால் ஏனைய தயாரிப்புகள், அதிலும் குறிப்பாக சர்வதேச நிலைமைகளில் போதியளவு தயாரிப்பின்மை அல்லது இதில் இழைத்த தவறுகள் காரணமாகவே மேற்கொண்டு முன்னேற முடியாமல் இருப்பதாக கூறப்பட்டது. இராணுவரீதியில் சாத்தியமான ஒரு அம்சமானது, அரசியல்ரீதியாக சாத்தியமற்றுப் போனதற்கான ஒரு வகை மாதிரியை நாம் இங்கு காண்கிறோம். ஆனால் குறிப்பிட்ட ஒரு குறுகிய காலத்தினுள் நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டது. இது எப்படியாக நடந்தேறியது என்பதையே இங்கு பார்க்க முனைகிறோம்.

மும்மூர்த்திகள்

கடந்த காலத்தில் புலிகளுடான போரில் சிறிலங்கா அரசு முகம் கொடுத்த முக்கிய பிரச்சனை. தனது போர் நடவடிககைகளை ஒரே முனைப்புடன் முன்னெடுக்க முடியாமையாகும். இங்கு நாம் எடுத்துக் கொள்வது அதன் அரசியல் தலைமை பற்றிய விடயத்தை மட்டுமேயாகும். முதலாளித்து அரசியல் அறிஞர்கள் முதலாளித்துவ அரசை. சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை என மூன்று பிரிவுகளாக பிரித்துக் கூறுவார்கள். மார்க்சியவாதிகள் அரசு மற்றும் அரசாங்கம் என்பவற்றை வேறுபடுத்திப் பார்ப்பார்கள். பொதுப்புத்தி மட்டத்தில் கூறுவதானால். அரசியல் கட்சிகள், நிர்வாகம். மற்றும் இராணுவம் என இவற்றை நாம் குறிப்பிடவும் செய்யலாம். இப்படியாக நாம் குறிப்பிடுவதன் நோக்கம் முதலாளித்துவ அரசில் காணப்படும் பிளவுகள் மற்றும் இடைவெளிகளை சுட்;டிக்காட்டுவதற்கேயாகும். இத்தகைய பிளவகள், இடைவெளிகள் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் முனைப்பை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசிற்கு தொடர்ச்சியாக பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளன.

பொதுவாக அரசியல் தலைமையினால் பணிக்கப்படும் போர் நடவடிக்கைகள ஒரு குறிப்பிட்ட இலக்குகளை அடையும்;போது, யுத்தத்தில் ஏற்படும் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக சர்வதேச மட்டத்திலான ஆரவாரங்களை அடுத்து அரசியல் தலைமையானது, இராணுவ நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு இராணுவத்தை கேட்டுக் கொள்ளும். மறுதலையாக, சர்வதேச நெருக்குதல் காரணமாக அரசானது ஒரு சமரச உடன்பாட்டை தமிழ் தரப்புடன் மேற்கொள்ள முனைகையில், இராணுவமும் ஆட்சேபிக்கும்: எதிர் கட்சிகளும் அதனை ஊதிப் பெரக்கவைத்து மக்களை கிளர்ச்சியூட்டி வீதிக்கு இறக்கி விடுவார்கள். இதனால் சிறிலங்காவின் அரசியல் தலைமையினால் முரணற்ற விதத்தில் யுத்தத்தையோ அல்லது சமாதான முயற்சிகளையோ முன்னெடுப்பது நீண்டகாலமாகவே முடியாக ஒரு காரியமாக இருந்த வந்திருக்கிறது. இப்படியாக, ஒரு முரணற்ற அரசியல் தலைமையை படை நடவடிக்கைகளுக்கு வழங்க முடியாத சிறிலங்கா அரசின் பலவீனம் இராணுவத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தன. இந்த பிரச்சனை சிறிவங்கா அரசினுள் காணப்பட்ட பிளவுகள் காரணமாகவே இடம்பெற்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைமையானது சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்து போகவேண்டிய நிலையிலேயே இருந்தது. இராணுவ தலைமையும், பாதுகாப்பு அமைச்சரும் எதிர்திசையில் செயற்படுபவர்களாக இருந்தனர். இதனால் இராணுவம் பல சந்தர்ப்பங்களில் தனது போர்வீரர்களது மன உணர்வுகளை ((morale) உயர்ந்த தரத்தில் பேணுவதில் பாரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது.

ஆனால் சிறீலங்கா அரசின் வரலாற்றில் முதல் தடவையாக அரசின் எல்லாப் பிரிவுகளும் ஒரே குடும்பத்தினுள், ஒரே விதமான சித்தாந்தத்தைக் கொண்ட மூன்று சகோதரர்களின் கைகளில் வந்து சேர்நதது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலதான்; நடைபெற்றது. மகிந்தவின் ஆட்சியியானது ஒரு குடும்ப ஆட்சி எனவும், இவர்கள் இன்னொரு Dynasty அமைக்க முனைவதாகவும் விமர்சனங்கள் பரவலாக எழுந்தன. மகிந்த குடும்பத்தில் குறைந்தபட்சம் ஐந்து பேர்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்படுகிறார்கள். அத்தோடு பெருந்தொகையான உறவினர்கள் அரசாங்க பொறுப்புக்களில் அமர்த்தப்படும் ஒரு தவறான நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், ஊழலும் மோசடிகளும் மிகுந்த அரசாக இது திகழ்வதாகவும் விமர்சிக்கப்படுகிறது. ஒரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ச ஆயுத கொள்வனவு தொடர்பான ஊழல்களில் சம்பந்தப்பட்டதாக பத்திரிகைகளில் பகிரங்கமாகவே குற்றஞ்;சாட்டப்பட்டவராவர். இன்னொரு சகோதரராக பசில் ராஜசக்ச Mr. 10மூ என்று அழைக்கப்படும் அளவிற்கு ஊழல் மிக்கவர் என்பது எதிர்கட்சியினரதும், பத்திரிகையாளர்களதும் குறிறச்சாட்டாகும். இப்படியாக மகிந்தவின் குடும்ப ஆட்சியானது எந்தளவிற்கு ஊழல், மோசடிகளில் சிக்கியிருந்தது என்பது இங்கு நாம் எடுத்துக் கொண்ட ஆய்விற்கு பொருத்தமானதல்ல. எமது அக்கறையெல்லாம் முன்னைய அரசாங்களினால் செய்ய முடியாத ஒரு விடயத்தை இந்த அரசாங்கத்தினால் எவ்வாறு செய்து முடிக்க முடிந்தது என்பது பற்றியதாகவே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

மகிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், அவர் தனது ஒரு சகோதரரான பசில் ராஜபக்ச என்பவரை பிரதான நிர்வாக ஆலோசகராகவும், மற்றொரு சகோதரான கோத்தபாய ராஜபக்ச என்பவரை பாதுகாப்புச் செயலாளராகவும் நியமனம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியானது இந்த யுத்தத்தை நடத்துவதில் சிறீலங்கா அரசிற்கு சாதகமான அம்சங்களையே தோற்றுவித்தது. பசில் ராஜபக்ச ஒரு சிறந்த நிர்வாகி: தொழில் முறையில் ஒரு சட்டத்தரனி: இவர்களது குடும்பமே ஒரு அரசியல் குடும்பமாக இருந்ததால் கட்சி அரசியலில் வழமையாக நடைபெறும் சுத்துமாத்துக்கள், கவிழ்ப்புகள், விலைக்கு வாங்குவது போன்று “சாணாக்கியங்கள்” யாவும் இவருக்கு சரியான அத்துப்படி. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மதிந்தவுடைய Campaign Manager ஆக இருந்து, மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு அவசியமான பொருத்தமான கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அடுத்தவரான கோத்தபாய ராஜபக்ச ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி: வடக்கில் 1987 இல் நடைபெற்ற ‘Operation Liberation’ இராணுவ நடவடிக்கைகளின் போது களத்தில் நேரடியாக நின்று போரிட்ட ‘மேஜர்’ தரத்திலிருந்தார்: அந்த இராணுவ நடவடிக்கையின் பின்பு அவர் ‘கொத்தலாவல படைத்துறை கல்லூரியின்’ பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு ‘லெப்டினன் கேர்ணல்’ தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டிருந்தார். சிறிது காலத்தில் இந்த பொறுப்பிலிருந்து தன்னை விடுவத்துக் கொண்ட இவர் அமெரிக்காவின் பிரசையாக மாறி அங்கு வர்த்தக முயற்சிசளில் ஈடுபட்டிருந்தார். இநத சகோதரர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான தகுதியையும், திறைமையையும் கொண்டவர்களாகவே இருந்தார்கள். இந்த வகையில் இது வெறுமனே குடும்ப ஆட்சியாக மடடும் இருக்கவில்லை. கூடவே தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் தகுதி உடையவர்களாக இருந்ததுடன் ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர்கள்களாகவும் இவர்கள் விளங்கினார்கள்.

சிறீலங்காவின் முன்னைய தலைமைகள் போல இவர்கள் ஒன்றும் வீட்டில் ஆங்கிலம் பேசி தேர்தலுக்காக சிங்களச் சாயம் பூசும் போலிச் சிங்கள தேசியவாதிகள் அல்லர். சிங்கள தேசியவாதத்தின் கோட்டையாக கருதப்படும் (heartland of sinhala chauaniam) தெற்கு இலங்கையில் பிறந்து வளர்ந்த ”சிங்கள பூமி புத்திரர்கள்”. பாரம்பரியமான நிலவுடமைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தன்னகங்காரம் கொண்ட இவர்கள் தமக்கு சரியெனப்பட்டதை சபை நாகரீகம் கருதியோ அல்லது இராஜதந்திர காரணங்களுக்காகவே அமர்த்தி வாசிக்கத் தெரியாதவர்கள். இதனால் இவர்களுக்கு சக அரசியல்வாதிகள். பத்திரிகையாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் மத்தியில் மிகவும் கெட்ட பெயருண்டு. அவர்கள் சர்வதேச அரங்கில் யாரையும் திருப்தி படுத்தும் நோக்கில் முன்னுக்குப் பின் முரணாக பேசவோ அல்லது தாம் முன்வைத்த திட்டத்திலிருந்து பின்வாங்கவோ இல்லை.இந்த யுத்தத்தில் சிறீலங்கா அரசின் வெற்றியை நிர்ணயித்த முதன்மையான காரணி இது என்றால் மிகையாகாது.

இவற்றில் எல்லாவற்றையும் விட வினோதமானதும், மிகவும் முரண்நகை மிக்கதுமான ஒரு விடயம் என்னவென்றால், மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெல்வதற்கு விடுதலைப் புலிகளே துணை நின்றார்கள் என்பதுதான். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது விடுதலைப் புலிகள், தெற்கில் ஒரு மோசமான இனவாத தலைமை தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருவதை விரும்பினார்கள். இப்படியாக ஒரு மோசமான தலைமை சிறீலங்காவில் அமையும் போது அது சிறீலங்கா அரசை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த உதவியாக இருக்கும் என்று நம்பினார்கள். (இங்கு கவனிக்கவும் எல்லா விடய்ஙகளைப் போலவே இங்கும் தமது அரசியலுக்கு எதிரியைத்தான் நம்புகிறார்கள்) இந்த அடிப்படையில் மகிந்தவின் குழுவுடன் புலிகளின் தலைமைக்கு ஓரு உடன்பாடு எட்டப்பட்டது.

வழமையாக தென்னிலங்கையில் இரண்டு பிரதான சிங்கள் கட்சிகளும் கிட்டத்தட்ட சமமான வாக்குகளை பெறுமிடத்தில் தமிழரது வாக்குகள் வெற்றி பெறுபவரை தீர்மானிக்கும் நிலைமை இருந்த வந்தது. மிகவும் மோசமான சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்த மகிந்தவுக்கு தமிழர் வாக்குகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அறவே இல்லாத நிலையில், அந்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்க கிடைக்க விடாமல் தடுப்பது என்பது மகிந்தவின் வெற்றிக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. இந்த நோக்கில் தமிழ் மக்களை ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க செய்ய வேண்டும் எனவும் அதற்கு சன்மானமாக விடுதலைப் புலிகளுக்கு பத்து மில்லியன் டொலர் பணம் உடனடியாக கொடுக்கப்படும் எனவும், மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி தேர்தலின் வெற்றியின் பின்பு தீர்மானிப்பது என்றும் உடன்பாடானது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பகிஷ்கரிக்குமாறு புலிகள் தமிழ் மக்களை நிர்ப்பந்தித்தார்கள். இந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் மகிந்த 50.29% வாக்குகளையும், ரணில் 48.43% வாக்குகளையும் பெற்றார்கள். தமிழ் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் ரணிலே ஜனாதிபதியாக வந்திருப்பார் என்பது இங்கு தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. இப்படியாக புலிகளின் உதவியுடன்தான் மகிந்த ஆட்சிக்கு வந்து சேர்ந்தார். இவரை ஆட்சியில் அமர்த்திய புலிகள், மகிந்தாவுக்கு இப்படிப்பட்ட தொரு பின்புலம் இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கக் கூட இல்லை.. அதற்கான விலைதான் இந்த தோல்வி.

ஒரு அரசியல் அமைப்பானது, சில கணிப்புகளை மேற்கொள்வதும், அந்த கணிப்புகளின் அடிப்படையில் ஆபத்தான (Calculated Risk) ஆன நடவடிக்கைகள் எடுப்பதும், தமது கணிப்பின் தவறான தன்மை காரணமாக தோல்விகளை சில சமயங்களில் அடைவது என்பதும் கூட ஓரளவு மன்னிக்கக் கூடிடதுதான். ஆனால், தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை ஒட்டு மொத்தமாக பறித்தெடுத்து அதனை எதிரிக்கு மொத்தவிலைக்கு பேரம் பேசி விற்பது என்பது அவ்வளவு இலகுவாக மன்னிக்கப்படக் கூடியதன்று. இன்று இந்த முடிவுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகளை விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் தான் கொடுக்க நேரிட்டுள்ளது.


சரியான அரசியல் தலைமை
மகிந்த அரசு பதிவிக்கு வந்ததும் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாயா அவர்கள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுடன் இணைந்து விடுதலைப் புலிகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதில் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து முறையான திட்டமிடலை செய்து கொண்டார்கள். முதலில் இவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறீலங்கா இராணுவத்திடம் இருந்த வியப்பு மற்றும் மலைப்பு என்பவற்றை மாற்றியமைத்தார்கள். முறையான தலைமை வழங்கப்படுமானால் விடுதலைப் புலிகள் ஒன்றும் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் அல்லர் என்ற மன உணர்வை ஏற்படுத்தினார்கள். முன்னால் இராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஷவும் இராணுவ தளபதியான சரத் பொன்சேகாவுடன் இணைந்த முன்வைத்த ‘புரஜெக்ட் பீக்கன்’ (project beacon) என்பது மிகவும் நேர்த்தியாக திட்டமிடலை செய்திருந்தது. இத்திட்டத்தின் படி விடுதலைப் புலிகள் அமைப்பை ஐந்து வருடத்தில் தோற்கடிப்பதற்காகன கால நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. முதல் மூன்று வருடத்தில் விடுதலைப் புலிகளை இராணுவரீதியாக தோற்கடிப்பது என்றும், அடுத்த இரண்டு வருடங்களில் அவர்களில் மிச்ச சொச்சங்களை துடைத்தழிப்பது என்றும் முடிவு செய்யப் பட்டிருந்தது. அதற்கான சம்மதத்தை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டதுடன், இந்த திட்டமானது நிறைவேற்றப்படும் நிலையில் எந்தவிதமான அரசியல் தலையீடும் நடைபெறமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அத்துடன் மாத்திரம் நில்லாது, இதே திட்டத்தை சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இணைத்தலை நாடுகளையும், சற்றுத் தயக்கத்துடன் தான் என்றாலும் ஏற்றுக் கொள்ளவும் செய்திருந்தனர். இணைத்தலைமை நாடுகளின் இந்த ஒப்புதல் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் சர்வதேச சமூகம் அதிகம் தலையீடு செய்யாமல் இருக்கச் செய்வதில் அதிக பங்காற்றியது.

திட்டமிடலில் மாத்திரமன்றி, அதனை அப்படியே அமுல்படுத்துவதிலும் கூட பிசகின்றி நடந்து கொண்டனர். கடந்த காலத்தில் இராணுவத்தில் செயற்பட்டபோது போதியளவு தலைமைத்துவத்தை வெளிப்படுத்தாத இராணுவ அதிகாரிகள், அவர்களது சேவைமூப்பு (siniority) என்பவற்றை பொருட்படுத்தாமல் ஓரங்கட்டப்பட்டார்கள். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் புலிகளுக்கு உளவு சொல்பவர்களாக கருதப்பட்டவர்கள் நீக்கப்பட்டார்கள்: சிலர் தண்டனைக்கும் உள்ளானார்கள். திறமை மிக்கவர்கள் முன்னணிக்கு கொண்டுவரப்பட்டார்கள். அத்தோடு தமது திட்டங்களை செயற்படுத்துவதிலும் தொழில்முறை நேர்த்தியுடன் (professionslism) செயற்பட்டார்கள். இதற்கு நல்லதோர் உதாரணம், அவர்கள் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதற்கு வரையறை செய்திருந்த மூன்று வருடங்கள் நிறைவு பெற்றது 2009 ஆம் ஆண்டின் ஏப்பிரல் மாதம் 30 ஆம் திகதியன்று சிறீலங்கா இராணுவம் தனது கடைசி யுத்தத்தை முள்ளிவாய்க்காலில் நடத்திக் கொண்டிருந்தது.


சர்வதேச உறவுகள்

செப்டம்பர் மாதம் பதினொராம் திகதிக்கு பிந்தைய சர்வதேச சூழல் அரசுகளுக்கு சாதகமாகவும், அரச எதிர்ப்பு போராளிகளுக்கு பாதகமாகவும் அமைந்திருந்தது. இதனை தனது நோக்கங்களுக்கு சாதகமாக சிறீலங்கா அரசு நன்கு பயன்படுத்திக் கொண்டது. சாரம்சத்தில் இரண்டு தேசங்களுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு போரை “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்” என்று புதிதாக பெயரிட்டு தனது யுத்தத்திற்கு எதிராக எழக்கூடிய சர்வதேச ஆட்சேபனைகளை நடுநிலைப்படுத்திக் கொண்டது. சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கும் முன்னணி நாடுகளான மேற்கு நாடுகள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை மட்டுமன்றி, சர்வதேசரீதியில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டிருந்த நாடுகளையும் இவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். மேற்கு நாடுகளும் ஏனைய ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் சிறீலங்காவின் யுத்தத்திற்கு நிதி உதவியும், ஆயுத விற்பனையும் செய்யத் தயங்கிய போது சிறிதும் தயங்காமல், சீனாவையும் பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளை அணுகி ஆயுதங்களை பெற்றதுடன், தேவையான நிதியுதவிகளை லிபியா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்தும் பெற்றக் கொண்டது. இவற்றை விட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயலகத்திற்கு இலங்கையின் பிரதிநிதியாக டயன் ஜயதிலகவை நியமனம் செய்து, அவர் மூலமாக நன்கு திட்டமிட்ட முறையில் சர்வதேச அபிப்பிராயங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக திருப்புவதிலும் கவனமாக செயற்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் நிலைமை இதற்கு தலைகீழாக அமைந்திருந்தது. ஏற்கனவே இந்திய மேலாதிக்கமானது இலங்கையில் தமிழர்களுக்கு தனியான ஒரு அரசு அமைவதை எதிர்ப்பதற்கு கணிசமான உள்ளுர் காரணங்கள் இருந்தன. அதனை விட இந்திய இராணுவத்துடனான விடுதலைப் புலிகளின் மோதலும் அதில் இந்திய இராணுவம் பெற்ற தோல்வியும், அவர்களது பெரிய அகங்காரத்தை மிகவும் காயப்படுத்தியிருந்தது. இவற்றையெல்லாம் கடந்து ராஜிவ் காந்தியை கொலை செய்தது என்பது இந்தியாவுடனான உறவுகளை சீர் செய்ய முடியாத அளவிற்கு சேதப்படுத்தியிருந்தது. இவை நடந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகியும் இந்த உறவுகளை சீர் செய்வதற்கு உருப்படியான முயற்சிகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

மேற்கு நாடுகளிலோ பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வுகளே ஓங்கியிருந்தன. இந்த நிலைமைகளின் கீழ் 2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பதினொராம் திகதிக்கு அடுத்துவந்த உடனடி காலப் பகுதியிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பை அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் தடை செய்யாமல் விட்டதே பெரிய காரியம். ஆனால், நிலைமைகளின் பாரதூரமான தன்மையை விடுதலைப் புலிகள் புரிந்து கொண்டிருக்கவில்லை. கடைசியான போர் நிதியென்ற பெயரில் மேற்கு நாடுகளிலுள்ள தமிழர்களிடம் பலவந்தமான பணத்தை பறிக்க முயன்றதாக இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த அரசாங்கங்களுக்கு கொடுத்த புகார்களின் காரணமாக 2005 இல் புலிகள் அமைப்பு இந்த நாடுகளில்; தடை செய்யப்படுவது என்பது, சர்வதேச உறவுகளை மிகவும் மோசமாக கையால்வதன் வகைமாதிரியான உதாரணமாகும்.

கருணா – கிழக்கு பற்றிய பிரச்சனை

கருணா புலிகள் அமைப்பைவிட்டு வெளியேறும் போது முன்வைத்த காரணங்கள் யாவும் பொதுவில் கிழக்கு மக்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சனைகள்தாம் என்பதை விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் உட்பட அனைவரும் அறிவர். இவற்றை அரசியல்ரீதியாக அணுகாமல், வெறுமனே இராணுவரீதியா அணுகி கருணா குழுவினரை அழித்தொழிக்க முனைந்ததுதான் அவர்களை தமது பாதுகாப்பு கருதி அரசின் பக்கத்திற்கு தள்ளியது என்பதும் இதனால் புலிகள் அமைப்பிற்கு பலவிதமான நட்டங்கள் ஏற்பட்டன என்பதும் ஏற்கனவே பல தடவைகள் பேசப்பட்ட விடயங்கள்தாம். ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டியது இதனுடன் தொடர்புடைய இன்னொரு விடயமாகும்.

கிழக்கில் கருணா குழுவினர் இராணுவரிதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், அந்த இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறீலங்கா படையினரை வைத்திருக்கும் விதத்தில் தொடர்ச்சியான, மிகவும் செயலூக்கமான ஒரு போர் முனையை தொடர்ந்தும் பேணவும், அதன் மூவமாக கணிசமான எண்ணிக்கையிலான படையினரை அந்த பிரதேசத்தில் தொடர்ந்தும் இழுத்து வைப்பதற்குமான ஒரு செய்ற்பாட்டை புலிகள் சரிவர மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக, சிறீலங்கா இராணுவமானது தனது படையின் பெரும் பகுதியை கிழக்கிலிருந்து வடக்கு போர்முனையை நோக்கி நகர்த்துவது சாத்தியமானது. இப்படியாக கிழக்கில் இராணுவத்தின் ஒரு பகுதியை கட்டிப்போட முடியாமற் போனது இந்த யுத்தத்தில் தீர்க்கமான அம்சங்களில் முக்கியமான தொன்றாகியது.
இந்திய – சீன போட்டா போட்டிகள்

தற்போதய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவும், இந்தியாவும் முக்கியமானவையாகும். பிராந்திய வல்லரசு என்ற வகையில் இந்திய அரசு தனது மேலாதிக்கத்தை இலங்கையில் பேண தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சிகள் சில சமயங்களில் வெற்றிகரமான விளைவுகளையும், சில சமயங்களில் சங்கடமாக நிலைமைகளையும தோற்றுவித்து வந்துள்ளன. மிக அண்மைக் காலத்தில்தான் இந்த அரங்கிற்கு வந்து சேர்ந்துள்ள சீன அரசோ, இந்திய மேலாதிக்கம் மற்றும் ஏனைய மேற்கத்திய செல்வாக்குகளையும் மீறித்தான் தனது கால்களை பதித்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒரு பலவீனமான நிலைலயில் தொடங்கும் சீன அரசானது, தனது பலம் மற்றும் பலவீனங்களை சரிவர இனங்கண்டு மிகவும் வித்தியாசமான இந்த விடயத்தை அணுக முற்படுகிறது. தனக்கு மிகவும் அவசியமாக உறவுகளை பலப்படுத்தியாக வேண்டும் என்ற நிலையில் உள்ள பிரதேசங்களில் தனக்கு புதிய நண்பர்களை தேடிக் கொள்வதில் சீன அரசானது மிகவும் தீவிரமான அணுகுமுறைகளை தயவு தாட்சண்யமின்றி மேற்கொள்கிறது. மிகவும் நீண்ட கால கண்ணோட்டத்தில் தனது பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்தும் பேணுவதற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்வதில் எவ்விதமான தயக்கங்களை சீன அரசு காட்டுவதில்லை.

அதிலும் சீனாவிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளின் குறிப்பான தன்மைகள் காரணமாக அந்த நாடானது ஏனைய போட்டி நாடுகளைவிட சிறப்பாக இதனை செய்து முடிப்பது சாத்தியப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சீனா கொங்கோ போன்ற சில நாடுகளில் செய்துவரும் பொருளாதார நடவடிக்ககைளாகும். அவர்கள் கிட்டத்தட்ட அந்த நாட்டையே விலைக்கு வாங்கிவிட்டது போல, அந்த நாட்டிலுள்ள வளங்களை நீண்ட கால கண்ணோட்டத்தில் முழுமையாகவே கொள்வனவு செய்துவிட்டு அதற்கு பதிலாக அந்த நாடுகளின் அடித்தள கட்டுமாணங்களை – புகையிரத, நெடுஞ்சாலை, பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை – அமைத்துக் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளது. அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட விடயத்தை அடைவது என முடிவு செய்துவிட்டால் அதற்கு எந்த விலையும் கொடுத்தாவது அடைந்தே தீருகிறார்கள். இதற்காக பொருள்வகையில் மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் சர்வதேசரிPதியிலும் கூட அவர்கள் எந்த விலையையும் கொடுக்க தயங்குவதில்லை.

மேற்கத்தைய நாடுகளும் இந்தியாவும் இராணுவ சாதனங்களை வழங்க மறுத்தபோது சிறீலங்கா அரசு சீனாவை நாடியது. சீன அரசோ, அம்பாந்தோட்டை துறைமுக வசதிகளை தனக்கென பெற்றுக்கொண்டு, சிறீலங்கா அரசிற்கு தாராளமாகவே இராணுவ உதவிகளை வழங்கியது. தேவையான கருவிகளை விலைக்கு கொடுத்ததுடன் இலவசமாகவும் வழங்கியது. பயிற்சி வசதிகளை நேரடியாகவும், மற்றய நாடுகள் ஊடாகவும் செய்து கொடுத்தது. இப்படியாக சீனா உதவி வழங்க முன்வந்ததனால் பதற்றப்பட்டுப் போன இந்திய அரசானது சிறீலங்கா அரசின் தேவைகளை தானும் கொடுக்க முன்வந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பினரது விமானங்களை கண்காணிக்க அவசியமான ராடர் கருவிகளையும் அவற்றை கையாலும் தொழில் நுட்பவியலாளர்களையும் வழங்கியதுடன் தனது உளவுப் பிரிவான ‘ரோ’ ஊடாகவும உதவிகளை வழங்கியது. இதனால் புலிகள்; அமைப்பிற்கெதிரான யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்திற்கு இராணுவ தளபாட தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. முன்பு புலிகளுடன் நிலவிவந்த இராணுவ சமபல நிலையை முற்றிலும் மாற்றி அமைக்கும் விதத்திலான பல முக்கியமான இராணுவ தளபாடங்களை சிறீலங்கா இராணுவம் பெற்றுக் கொண்டது. இவற்றில் வேகமாக தாக்கும் குண்டுவீச்சு விமானங்களும், ஆளில்லாமல் பறந்து எதிரியை உளவு பார்க்கவல்ல விமானங்களும், பல்குழல் ரொக்கட் செலுத்திகளும், ராடர்களும, துணைகோள் படங்களை பெற்றும் கொள்ளும் வசதிகளும் மிகவும் முக்கியமானவை.

புலிகளைப் பொறுத்தவரையில் நிலைமை தலைகீழானதாக அமைந்தது. ஆனையிறவு முகாம் தாக்குதல் மற்றும் ஜயசிக்குறு தாக்குதல்களுக்கு பின்பு அடிக்கடி பெரிய முகாம்களை தாக்குவது நின்று போனது. இதனால் அரசிடமிருந்து இராணுவ தளபாடங்களை கைப்பற்றுவது நின்று போனது. இத்துடன் மட்டும் நில்லாது இயக்கத்திற்கு நீண்டகாலமாக ஆயுத தளவாடங்களை கொள்வனவு செய்து, அவற்றை நாட்டிற்குள் வெற்றிகரமாக கொண்டு போய்ச் சேர்ந்த்துவந்த கே.பி என்பவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். அவரது இடத்தை நிரப்ப வந்த புதியவர்கள் ஒரு மிகவும் மோசமான சூழலில் தமது கன்னி முயற்சிகளில் ஈடுபடலானார்கள். சிலர் தமது முதல் எத்தனிப்பின் போதே கைதானார்கள். இவற்றை தாண்டி கப்பலில் ஏறிய பொருட்களும் கடலில் வைத்து இந்திய – சிறீலங்கா இராணுவங்களினால் கைப்பற்றப்பட்டன. நடந்து கொண்டிருந்த சமர்களில் பாவிக்கப்படும் வெடி பொருட்களை பெற்றுக் கொள்வதிலேயே சிரமான நிலைமைகள் தோன்றின. அதேவேளை இந்த யதார்த்த நிலைமைகள் பற்றிய சரியான தெளிவில்லாதவர்கள் போல புலிகளது செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம் பெற்று வந்தன. இரண்டு சிறிய விமானங்களை வைத்துக் கொண்டு உலகிலேயே விமானப்படையை வைத்திருக்கும் ஒரே கெரில்லா அமைப்பு என்று மார்தட்டினார்கள். இவற்றை கொண்டு வந்து தம்மால் உள்ளூரில் தயாரிக்ப்பட்ட குண்டுகளை அரச இலக்குகள் மீது தாக்குவதற்கு பயன்படுத்தினார்கள். இதற்கு வழங்கப்பட்ட பிரச்சார முக்கியத்துவம் இருந்த அளவிற்கு இவற்றின் தாக்குதல்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்iலை. (இதற்கு விதிவிலக்காக அநுராதபுரம் விமான நிலையம் மீதான தாக்குதலில் தரை மூலமாக ஊடுறுவித் தாக்கிய கெரில்லாக்களுக்கு துணையாக இந்த விமானங்கள் செயற்பட்டது இருக்கலாம்) ஆனால், இதற்கு மறுதலையாக, இவை ஏற்படுத்திய பாதகமான எதிர்வினைகள் பாரதூரமானதாக அமைந்தன.

இந்தியாவில் அணுஉலைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவை விடுதலைப் புலிகளது விமானங்களின் தாக்குதல் எல்லைக்கு உட்பட்டனவாக இருக்கின்றன. இந்தியாவின் கேந்திர நலன்களை பற்றிய எச்சரிக்கைகளை தேவையற்று கிளப்பிவிட இந்த விமானங்கள் காரணமாக அமைந்துவிட்டன. ஏற்கனவே சீனாவின் இராணுவ உதவிகள் காரணமாக எரிச்சலைடைந்து போயிருந்த இந்திய அரசு, இந்த விடயத்தில் சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை அனுமதிக்க முடியாது. ஏனெனில், சீனாவிலிருந்து பெறப்படும் ராடர்கள், புலிகளின் விமானங்களை மட்டுமன்றி இந்திய இராணுவ நடவடிக்கைகளையும் சீனா கண்காணித்துக் கொள்ள உதவும் என்பதால், இந்திய அரசு தான் விரும்பியோ, விரும்பாமலோ உதவி வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இப்படியாக, புலிகள் ஏற்கனவே இந்தியாவுடன் ஏற்படுத்தியிருந்த முரண்பாடுகள், இந்த விமானப்படை தொடர்பான எச்சரிக்கைகள், சீனாவின் தலையீடு தொடர்பாக இருந்த அவதானங்கள் போன்றவை ஒன்று சேரவே, இந்திய அரசானது, சிறீலங்கா அரசுடன் இந்த போர் நடவடிக்கைகளில் முழுமையாக ஒத்துழைத்து புலிகளை கருவறுப்பது என்பதில் முழு மூச்சாக இறங்க வழிவகுத்தது. இதுவும் இந்த யுத்தத்தின் முடிவுகளை நிர்ணயித்ததில் தீர்க்கமான பங்காற்றியுள்ளது. குறிப்பாக புலிகளின் தலைமை இறுதியில் முழுமையாக அழிக்கப்பட்டதில் இந்திய உளவுப்படையான ‘ரோ’ முக்கிய பாத்திரம் வகித்ததாக நம்பப்படுகிறது. அத்துடன் இலங்கை விவகாரங்களில் நீண்டகாலமாக தலையீடு செய்து வந்த இந்திய அரசின் பாத்திரம், ஏனைய நாடுகள் எதனது பங்களிப்பையும் விட முக்கியமானதாக அமைந்தது.

புலிகளது செயற்பாடுகள்

ஆனையிறவு தாக்குதலை அடுத்து எழுந்த stalemate நிலையை அடுத்து, புலிகள் உடனடியாக அதனை களைவதில் தமது கவனம் அனைத்தையும் குவித்தாக வேண்டியிருந்தது. ஏனெனில், ஒரு அரசுடன் விடுதலை அமைப்பானது மரபார்ந்த படையமைப்புகளுடன் நீண்ட காலாத்திற்கு stalemate நிலையில் இருப்பதானது, பெரும்பாலும் அரசுக்கே சாதகமாக அமையக்கூடியது. ஏனெனில், அரசானது தன்னிடமுள்ள பெருமளவிலான வளங்கள் மற்றும் சட்டபூர்வமான அரசாங்கம் என்ற அந்தஸத்து கொடுக்கக் கூடிய இராஜதந்திர சாதக அம்சங்கள் என்பவை மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசுக்கு சார்பாகவும், விடுதலை அமைப்புகளுக்கு எதிராகவும் அமையக் கூடியது. எனவே இப்படிப்பட்ட வாய்ப்புகள் (window of opportunity) விடுதலை அமைப்புகளுக்கு வரலாற்றில் அரிதாகவே, அதுவும் ஒரு குறுகிய காலத்திற்கே கிடைப்பதுண்டு. இந்த நிலையில் புலிகள் தனது சர்வதேச அங்கிகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளை மிகவும் தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். அத்தோடு தேவையான இராணுவ கொள்வனவுகளை தீவிரமாக செய்து முடித்து யுத்தத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த கட்டத்தில் புலிகள் பாரதூரமாக தவறுகளை இழைத்துவிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

சர்வதேச அங்கிகாரத்தை பெறுவதில் தீவிரம் காட்டுவதற்குப் பதிலாக, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் பணத்தை பலவந்தமாக பெற முனைந்தது, இந்த நாடுகளில் புலிகள் அமைப்பை தடை செய்வதற்கு இட்டுச் சென்றது. 2001 செப்டம்பர் 11 இற்கு அடுத்த உடனடியான காலத்தில் தடை செய்யப்படாமல் தப்பிக் கொண்ட ஒரு அமைப்பானது, 2005 இல் தடை செய்யப்பட நேர்ந்ததென்பதை, புலிகளில் முட்டாள்தனம் தவிர வேறு விதமாக விளங்கிக்கொள்ள முடியாது.

அடுத்ததாக, புலிகள் வேகமாக மிகவும் அத்தியாவசியமாக அவசியப்பட்ட நவீன ஆயுத தளவாடங்களை வாங்கிக் கொள்ள அவசிமான ஒரு கட்டத்தில், அவர்களது நீண்ட கால ஆயுத்கொள்வனவாளரான கே.பி என்பவரை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமித்தது அடுத்த பாரிய தவறாக அமைந்தது. அப்போது தோன்றியிருந்த நெருக்கடிமிக்க சர்வதேச சூழலில், அனுபவம் வாய்ந்த ஒருவரே வெற்றிகரமாக தொடர்ந்தும் செயற்படுவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். இதற்கு தலைகீழாக புதியவர்களது “கத்துக்குட்டித்தனம்” மிகவும் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தியது. அடுத்து அடுத்தாக பன்னிரன்று ஆயுத கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டன. இப்படிப்பட்ட இழப்புகளை எந்தவொரு அமைப்புமே ஈடு கொடுப்பது என்பது மிகவும் கடினமானதே. இத்தனையும் நடந்து கொண்டிருக்கும் போதுதான் இந்த விமானப்படை பற்றிய பரபரப்பும் சேர்ந்துகொண்டது. உண்மையில் இவர்கள் தொழில் நேர்த்தியுடன் (professional) செயற்பட்டிருப்பார்களானால், இந்தவிதமான பரபரப்புகளில் சக்தியை விரயமாக்காமல், மிக முக்கியமான சில ஆயுதங்களையாவது, உதாரணமாக விமான எதிர்ப்பு ஏவகணைகள் (stinger missels) மற்றும் தமது ஆயுதங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான வெடிபொருட்களையாவது விமானங்களின் உதவியுடன் பரசூட் மூலமாக இறக்கியிருக்க முடியும். இன்று கூட பல்வேறு போராளி அமைப்புகளும் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளும் இப்படிப்பட்ட வழிமுறைகளை தாராளமாகவே கையாள்கிறார்கள். ஆனால் இவர்களது கவனங்களோ கோஷ்டி மோதல்களிலும், பண முதலீடுகளிலும் குவிந்திருந்தது.

இதேவேளை புலிகள் பலவந்தமாக புலம் பெயர் தமிழர்களிடம் சேகரித்த பணத்தில் பெரிய பகுதியொன்று அந்தந்த நாடுகளில்; மூலதனமிடப் பயன்படுத்தப்பட்டன. அதுவும் சாதாரணமான வியாபார முயற்சிகளில் இவை ஈடுபடுத்தப்பட்டன. உணவகங்கள், பலசரக்கு கடைகள், புடவைக்கடைகள் மற்றும் நீண்டகால முதலீடாக கருதப்பட்ட நிலையான கட்டிடங்கள் போன்றவற்றிலுமான முதலீட்டை எவ்வாறு புரிந்து கொள்வது. ஒரு குறுகிய காலத்தினுள் இயலுமான அனைத்தையும் செய்து அரசை அமைத்து, சர்வதேச அங்கிகாரத்தை பெற முயல்வதா அல்லது ஒரு வர்த்தக நிறுவனம் போல் நாலு காசு பார்க்க, அதுவும் நீண்டகால நோக்கில் முயல்வதா? நாம் எமக்கென சொந்த அரசை அமைத்த பின்பு இந்த கடைகளும் சொத்துக்களும் என்ன அந்நிய செலவாணியை ஈட்டித்தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்h? இதில் புலிகளுடன் இணைந்து நின்று வியாபாரிகளும், இந்த விவகாரங்களை ஊரிலிருந்து கையாண்டு நபர்களது இயலாமை தவிர வேறொன்றையும் காண முடியவில்லை. இந்த நிகழ்வுகள் புலிகளது தேசியிடுதலையை குறுகிய காலத்தினுள் அமைத்துவிடுவது தொடர்பாக அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
யுத்தம் நடந்து முடிந்தவிதம்

இந்த யுத்தம் தொடங்கியதிலிருந்து புலிகள் அமைப்பானது சிறீலங்கா இராணுவத்தின் மீது முறையான எதிர்த் தாக்குதல்களை நடத்தாமை இங்கு முனைப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விடயாக தெரிகிறது. ஒவ்வொரு களமுனையிலும் புலிகள் முதலில் பெயரளவிலான எதிர்ப்பை காட்டுவதும் பின்பு பின்வாங்கிச் செல்வதுமாகவே இந்த யுத்தத்தின் மிகப்பெரும் பகுதி – மாவிலாறு தொடங்கி புதுக்குடியிருப்பு வரையில் - நடந்து முடிந்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. முதலாவது காரணம், சிறீலங்கா படையினரிடம் காணப்படும் மிக முக்கியமான ஆயுதங்களை எதிர்ப்பதற்கு புலிகளிடத்தில் வேறு வழிமுறைகள் இருக்கவில்லை என்பதாகும். குறிப்பாக Super sonic bombers, multi barrel rocket launcher, satelite reconecence, unmanned spy plane போன்றவை இப்படிப்பட்டனவாக குறிப்பிடப்பட்டன. இதில் ஒரளவு உண்மையிருப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. ஆயினும் இதனையும் எதிர்பார்த்து, அதற்கான தயாரிப்புக்களை செய்வதற்கு தேவையான காலமும் வளங்களும் புலிகளிடத்தில் தாராளமாகவே இருந்தனவே. இவற்றை சரிவர நிர்வகிக்காமல் விட்டுவிட்டு இப்போது இந்த மாதிரியான காரணங்களை கூற முற்படுவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. இங்கு முழுக்க முழுக்க தொழில்முறை நேர்த்தியின்மை (un-professionalism) தான் வெளிப்படுகிறது.

அடுத்த காரணம், தலைவர் உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார், அகலக்கால் வைக்கிறார்கள், வாங்கிக் கட்டப் போகிறார்கள் என்பதாகும். ஆனால் இது கடைசிவரையில் நடைபெறவே இல்லை. இப்படியாக ஒரு அமைப்பு பின்வாங்கி பின்வாங்கியே சென்ற அழித்தொழிக்கப்படுவது என்பது எந்தவிதத்திலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு விடயமாகவே இருக்கிறது. அப்படித்தான் தோற்பது என்றாலும் வீரர்களாக நாம் போராடி தோற்றிருக்கலாம். அப்படியானால் தமிழர்களது அரசியல் மற்றும் மனோபலம் பன்மடங்காக கூடியிருக்கும். ஆனால் நடந்து முடிந்தவிதமோ வரலாறு காணாத விதமாகவே அமைந்து விட்டுள்ளது.

அப்படித்தான் ஒரு மோசமான இராணுவ சமபல நிலையில் யுத்தம் தம்மீது திணிக்கப்பட்டிருந்தாலும் ஒன்றில் அதனை தவிர்க்க முனைந்திருக்க வேண்டும். இல்லையேல் அதனை வீரர்களாக முகம் கொடுத்து முறியடிக்க முயன்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் நேரடியாக, பகல் பொழுதுகளில் மோதுவது சாத்தியப்படாமற் போனாலும், இரவுவேளைகளிலாவது பல ஊடுறுவித் தாக்குதல்களை முயன்றிருக்க வேண்டும். அவற்றில் சில வெற்றிகரமாக அமையவும், அந்த வெற்றிகளில் ஏதாவது ஒன்று தீர்க்கமானதாக அமையவும் நிறையவே வாய்ப்புகள் இருக்கவே செய்தது. அப்படியாக இழப்புகள் ஏற்பட்டு இருந்தாலுங்கூட தற்போதுள்ள நிலைமையுடன் ஒப்பிடும் போது ஒன்றும் மோசமானதாக அமைந்துவிட்டிருக்காது. குறைந்த பட்சம் இயன்றவரையில் போராடித்தான் தோற்றார்கள் என்ற நல்ல பெயரும் கௌரவமும் புலிகள் அமைப்பிற்கு மாத்திரமன்றி மொத்த ஈழத்தமிழருக்கும் கிடைத்;திருக்கும். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

அடுத்ததாக வன்னிக்கு யுத்தகளம் நகர்ந்தபோது புலிகள் நடந்து கொண்ட விதம் பற்றியதாகும். கிளிநொச்சி கைமாறியவுடன் புலிகள் தமது இராணுவ தந்திரோபாயங்களை மீள்பரிசீலனை செய்து, தேவையான மாற்றங்களை கட்டாயமாக ஏற்படுத்தியிருக்க முடியும். அவற்றில் மிக முக்கியமானதாக அமைந்திருக்கக் கூடிய தொன்று, அவர்கள் தமது படையணிகளை சுருக்கிக் கொண்டு முல்லைத்தீவு காடுகளுக்குள் நகர்ந்திருப்பதாகும். எம்மில் பலருக்கு தெரியாத ஒரு விடயம் முல்லைத்தீவு காடுகள் பற்றிய விடயங்களாகும். நெடுங்கேணி தொடங்கி மணலாறு வரையில் நீண்டு செல்லும் இந்த காடுகள் மிகவும் அடர்த்தியானவையாகும். இதற்குள் நுழைந்துவிட்டால் பகல் - இரவு கூட தெரியாது: ஒருவர் தனது உடைகளை தோய்த்து காயப்போட்டால் அவை உலர்வதற்கு நான்கு நாட்கள் எடுக்கும:. என முன்னாள் போராளிகள் கூறுவர். இந்த காடுகள்தாம் புலிகளை இந்திய இராணுவத்தின் கடுமையான தாக்குதல்களிலிருந்து தப்பிழைக்க வைக்க உதவியவையாகும்.

இப்படிப்பட்ட ஒரு காட்டுப் பகுதியில் மரபார்ந்த இராணுவத்தின் கனரக ஆயுதங்களும், குண்டு வீச்சு மற்றும் உளவு விமானங்களும் அதிகம் தாக்கம் நிகழ்த்த முடியாதவையாகிவிடும். இந்த கனரக ஆயுதங்களின் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றும் தன்மை காரணமாகவே சில கெரில்லா அமைப்புக்கள் காட்டை தமது தாய் என்று வர்ணிப்பதுண்டு. இதனால்தான் வழிவழி வந்த பெரும்பாலான கெரில்லா அமைப்புக்கள் தாம் பலவீனமாக இருக்கும் ஆரம்ப கட்டத்திலாயினும் சரி, அல்லது தாம் யுத்தத்தில் தோல்வியுற்று அழித்தொழிக்கப்படும் நிலைமைகள் உருவாகும் சந்தர்ப்பத்திலும் சரி, காடுகளை நோக்கி நகர்வது முக்கியமான தப்பிழைக்கும் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. காட்டுக்குள் பின்வாங்கியிருந்தால், இராணுவ சமபல நிலையை (balance of forces) சிறிலங்கா இராணுவத்திற்கு சாதகமாக மாற்றிய அவர்களது கனரக ஆயுதங்கள், குண்டுவீச்சு விமானங்கள், மற்றும் உளவு விமானங்கள், செயற்கைக் கோள் போன்றவற்றை செயலற்றனவாக மாற்றியிருக்க முடியும்.

இதன் மூலமாக இராணுவ சமபல நிலையில் இந்த ஏற்றத்தாழ்வை புலிகள் தமக்கு சாதகமாக நகர்த்தியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்போ, காட்டுப் பகுதிக்குள் செல்வதற்குப் பதிலாக, போரிடுவதற்கு மிகவும் பாதகமான, இயற்கையான தடைகள் எதனையும் கொண்டிராத முல்லை கடற்கரைகளை நோக்கி நகர்ந்தார்கள். இவர்களது இறுதி நிகழ்வானது நந்திக் கட்லின் கரையில் முடிந்தது. அவர்களிடம் இருந்த பிரதேசங்கள் அனைத்திலுமே எதிர்த்து போரிடுவதற்கு மிகவும் பாதகமான ஒரு தரையமைப்பு இந்த பிரதேசமேயாகும். இந்த இடத்திற்கு, அதுவும் சிறிலங்கா அரசு கைகாட்;டிய இடத்;திற்கு போய்ச் சேர்ந்தார்கள். அதுவே அவர்களது இறுதி முடிவுகள் இவ்வளவு சோகமானதாகவும், சடுதியானதாகவும் நடந்தேற காரணமாக அமைந்தது.

இது ஏன் இப்படி நடைபெற்றது என்பதற்கு எந்தவிதமான வியாக்கினங்களும் தருவதற்கு புலிகளின் இராணுவ தலைமையில் யாருமே மிஞ்சவில்லை. எம்மால் செய்யக் கூடிய தெல்லாம், இது தொடர்பாக புலிகளின் ஆதரவாளர்கள் மூலமாக அவ்வப்போது பெறப்பட்ட தகவல்கள் மற்றும் புலிகளது நடவடி;ககைகளை நீண்ட காலமாக அவதானித்து, ஆக்கபூர்வமான விமர்சித்துவருபவர்களதும் கருத்துக்களை பரிசீலிப்பதுதான்.
இப்படியாக முன்வைக்கப்படும் கருததுக்களில் முக்கியமான ஒன்று புலிகளது “அதிகாரமயமாக்கம்” மற்றும் “மேட்டுக்குடியாக்கம்” பற்றியதாகும். புலிகள் அமைப்பு பெரியளவு நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டில் எடுத்து “மாற்று” அரசாக செயற்பட தொடங்கிய காலம் முதலாக தமது போராட்ட குணாம்சங்களை படிப்படியாக இழந்து ஒரு அதிகாரவர்க்கமாக ஆகிவிட்டார்கள். அதனால்தான் இந்த யுத்தத்தில் போராடி இழப்புக்களை சந்திக்க தயாராக இருக்கவில்லை, என்பதாகும். கிளிநொச்சி மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் காணப்பட்ட புலிகளது தலைவர்களது வீடுகளும் மற்றும் அவர்களது அலுவலகங்கள், அதிகாரிகளது வாழ்க்கை மற்றும் செயற்பாட்டு முறைகள் இதற்கு சான்றாக அமைவதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். 2003 ம் ஆண்டு என்று நினைக்கிறோம், சாமாதான பேச்சுவார்த்தைகள் நோர்வேயிலும் மற்றும் சர்வதேச நாடுகளிலும் நடைபெற்று வந்த காலமது. அந்த காலத்தில முன்னாள் ஈரோஸ் அமைப்பின் தலைவரும், தற்போது விடுதலைப் புலிகளது மூத்த உறுப்பினர் என்று அழைக்கப்படுபவருமான வே. பாலகுமார் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அவரை முன்னாள் ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் பிரான்சில் சந்தித்து பேசியபோது, யுத்த்தின் எதிர்காலம் பற்றிய கேள்வி அவர்களால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலகுமார், இன்னொரு சண்டை வந்து அதில் பின்னடைவு வருமாயின் காட்டுக்குள் சென்று போராட பிரகாகரன் ஒருபோதும் தயாராக இருக்கமாட்டார் என்று கூறினார். அப்போது அது பாலகுமாரின காழ்ப்புணர்வின் வெளிப்பாடு என்று சிலரால் கருதப்பட்டது. ஆனால் அதுவே இப்போது நிதர்சணமாக இருக்கும் போது இந்த நிலைமையை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது பிரச்சனையானதுதான்.

அடுத்ததாக முன்வைக்கப்படும் இன்னொரு நம்பகமான ஒருவாதம் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகிறது. இதன்படி, இராணுவத்தின் முன்னெடுப்புகள் ஒரு கட்டத்திற்கு மேல் தொடரப்பட மாட்டாது என்று சில சர்வதேச தரப்புகளால் புலிகளுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஏ – 9 பாதைக்கு மேல் இராணுவத்தினர் நகரமாட்டார்கள் என்பதால் இராணுவத்தினரை எதிர்த்து போராடி தமது சக்திகளை இழக்கத் தேவையில்லை என்று புலிகள் நம்பியதாக கூறப்படுகிறது. ஆனால் சிறீலங்கா இராணுவமானது ஏ – 9 பெருஞசாலையைத் தாண்டி கிளிநெரச்சியையும் கைப்பற்றி முல்லைத்தீவு நோக்கி முன்னேறத் தொடங்கிய போதுதான் புலிகள் பதறியடித்து செய்வதறியாது தடுமாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலும் இந்த வெளிநாட்டு சக்தியானது புலிகளுக்கு புதிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதன்படி, சர்வதேச சமூகம் இந்த யுத்தத்தில் தலையிட்டு புலிகளை காப்பாற்றுவதானால், சர்வதேச சமூகம் இலங்கை விரகாரங்களில நேரடியாக தலையீடு செய்யும் அளவிற்று ஒரு பலமான காரணம் தேவை. அது ஒரு “பாரிய மனிதப் பேரழிவாக” இருக்கலாம் என கருதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குறுதியை நம்பிய புலியின் தலைமையானது முக்கிய நபர்கள் மற்றும் வளங்களை நாட்டைவிட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவது: அமைப்பின் முக்கிய தாக்குதல் படைப்பிரிவுகளை முல்லைத்தீவு பகுதியின் அடர்ந்த காடுகளினுள் நகர்ந்து கெரில்லா போர் முறைக்கு ஏற்ப தம்மை மீளமைத்துக் கொள்வது: தமது அடிமட்ட அங்கத்தவர்களையும் சாதாரண குடிமக்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அவர்களது சொந்த விருப்பின் படி செயற்பட அனுபதிப்பது: என்பவற்றிற்குப் பதிலாக தொடர்ந்தும் பின்வாங்கிக் கொண்டே சென்றார்கள். மக்களை பலவந்தப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்: சிறுவர்களைக் கூட பலவந்தப்படுத்தி தமது படைகளில் சேர்த்து பீரங்கிக்கு தீனி போட்டார்கள்.

யுத்தம் நடைபெற்று, புலிகள் பின்வாங்கிச் செல்லும் பிரதேசங்களிலுள் மக்கள் சுதந்திரமாக தமது முடிவுகளை எடுத்த தமக்கு பாதுகாப்பு எனக்கருதும் பிரதேசங்களை நோக்கி நகர்வதற்கான சுதந்திரம் அந்த மக்களுக்கு இருக்கவில்;லை. புலிகளின் கட்டாயப்படுத்தலினால் மக்களும் பின்வாங்கிச் செல்லும் புலிகளுடன் இடம் பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசம் சுருங்கச் சுருங்க, இடம் பெயர்ந்த மக்களது அடர்த்தியும் அதிகரித்துச் சென்றது. ஒரு கட்டத்தில் 10 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினுள் சுமார் மூன்று இலட்சம் மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி தொடர்ச்சியான இராணுவ தாக்குதல்களினுள் தங்கியிருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இது தொடர்பாக தமது கரிசனையை வெளிப்படுததிய புலிகளின் புலம்பெயர் ஆதராவாளர்களுக்கு நடேசன் அளித்த பதிலில் சுமார் பத்தாயிரம் வரையில் மக்கள் கொல்லப்படலாம் எனவும், எப்படியிருப்பினும் இறுதியில் புலிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும் கூறியிருக்கிறார். இப்போது பார்க்கும் போது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட சிவிலியன்கள் கொள்ளப்பட்டதற்கான பொறுப்பு யாருடையது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. சிறீலங்கா இராணுவம் கண்மூடித்தனமாக, கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியது உண்மைதான் என்றால், அப்படிப்பட்ட ஒரு யுத்த சூழ்நிலைக்குள் தமிழ் குடிமக்களை நிர்ப்பந்தித்தது எப்படிப்பட்ட தர்மமாகும். இது பொதுமக்களை கவசமாக பாவித்து புலிகள் தப்பிக்க முயன்றதையே காட்டுகிறது.


இப்படியாக நேரும் சிவிலியன்களின் இழப்புக்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டி அனுதாபத்தை தேடும் முகமாகவே புலம்பெயர் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் இவற்றை பொதுப்படையானதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனையாகவும் focus பண்ண முயன்றவர்களது முயற்சிகள் ஊரிலிருந்து வந்த புலிகளது அறிவுறுத்தல்கள் மூலமாக முறியடிக்கப்பட்டன. இளைஞர்களை வீதிகளில் இற்க்கிவிட்டு இந்த போராட்டமானது புலிகளது தலைமையை பாதுகாபபாக மீட்டெடுப்பதற்கான போராட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த வெளிச்சத்தில பார்த்தால், இந்த போராட்டங்களில் புலிக்கொடிகள் காட்டப்பட்டதும், பிரபாகரனது படங்களும், பிரபாகரன் மற்றும் புலிகள் தொடர்பான் கோசங்கள் எழுப்பப்பட்டதும் ஒன்றும் தற்செயலான, ஆர்வக் கோளாறு மிகுதியினால் செய்யப்பட்ட புத்திசாலித்தனமற்ற தவறுகள் அல்ல என்பது தெளிவாகும். இவை புலிகளினால் திட்மிடப்பட்டு, அவர்களது ஆதரவாளர்கள் மூலமாக வழிநடத்தப்பட்ட செய்ற்பாடுகளாகும். குடிமக்களின் இழப்புகள் தொடர்பாக உண்மையிலேயே கரிசனை கொண்ட மக்களது உணர்வுகள் மற்றும் போராட்டங்களின் மீது மீண்டும் ஒருதடவை புலிகள் சவாரி செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

விடயங்கள் இவ்வாறாக ஏன் நகர்ந்தன என்பதற்கு இன்னோர் விதமான வாதங்களும் முன் வைக்கப்படுகின்றன. அதனை இப்போது சற்று நெருக்கமாக பரிசீலிப்போம். சர்வதேச அங்கிகாரம் என்பது வெறுமனே இராணுவ வெற்றிகளால் மாத்திரம் கிடைத்துவிடுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு அங்கிகாரத்தை பெறுவதற்கு ஒரு இயக்கமானது நீண்டகாலமாக போராடி விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், இன்னும் பல அம்சங்களை தன்னிடத்தில் கொண்டிருக்க வேண்டும். இவற்றில் முக்கியமான சில அம்சங்களாக பின்வருவன அமையும்: முறையான ஒரு சிவில் சமூகத்தை கொண்டிருப்பது: நன்கு செயற்படும் ஒரு சிவில் நிர்வாகத்தை கொண்டிருப்பது: சுயமாக நிற்பதற்கு அவசியமான பொருளாதார திட்டங்களை செயற்படுத்துவது: உயிர்த்துடிப்பான அரசியல் தலைமை. இப்படியான அம்சங்கள் புலிகளிடத்தில் அறவே காணப்படவில்லை. பெயரிலவிலான காவல்துறை, நீதிமன்றம் போன்றவை காணப்பட்ட போதிலும் அவை சுதந்திரமானவையாக இயங்கவில்லை. மிகப்பெரும்பாலன அரச ஊழியர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, புலிகள் இட்ட பணிகளை செய்து வந்தார்கள்.

ஆசிரியர்கள், எழுது வினைஞர்கள், மருத்துவதுறை சார்ந்த ஊழியர்கள் மாத்திரமன்றி, சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரத்தின் முக்கிய கூறுகாளன கிராம சேவை அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள் கூட இப்படித்தான் செயற்பட்டு வந்தார்கள். பொருளாதாரரீதியாக தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை சுயசார்புடையனவாக வைத்திருப்பதற்கான எந்த வகையான திட்டங்களும் இருக்கவில்லை. புலிகளது பொருளாதார நடைவடிக்கைகள் பூராவுமே வரி சேகரிப்பது என்பதாக குறுகிக் கிடந்தது. இந்த கடுமையான வரிவிதிப்பு முறைகளால் சமூகத்தில் இயல்பாக நடைபெறும் பொருளாதார முயற்சிகள் கூட தேங்கிப்போனது. நெல்லுற்பத்திக்கும் மற்றும் ஏனைய விவசாய, மீன்பிடி முயற்சிகளுக்கும் உதவிகளை செய்ய முடியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவற்றிற்கு உச்சவிலையை தாமே நிர்ணயிப்பதும், அவற்றின் கொள்வனவிற்கு ஏகபோக உரிமையை தாமே வைத்திருப்பதும் சாதாரண எல்லாவிதமான பொருளாதார முயற்சிகளையுமே நசுக்கிவிடக் கூடியவையாகும். சமூகத்திலுள்ள அல்லது புலம் பெயர்ந்த தனிநபர்கள் சுயமாக மேற்கொண்ட ஓரளவு பெரிய அளவிலான பொருளாதார முயற்சிகள் கூட புலிகளால் பலவந்தமாக பொறுப்பெடுக்கப்பட்டன. சிறீலங்கா அரசின் பொருளாதார தடைகளை தாண்டி நின்று பிடிக்கக்கூடிய வகையிலான சுயசார்பு விவசாய மற்றும் கைத்தொழில் முறைகள் உருவாக்க அல்லது ஊக்குவிக்கப்பட இல்லை. இதனால் உணவுப் பொருட்களை கேட்டும், விவசாய இடுபொருட்களான பசளைகள், கிருமிநாசினிகள், மற்றும் மண்ணென்னைக்காகவும் பினாமியான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் எந்தவிதமான சுதந்திரமான மக்கள் செயற்பாடுகளும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது முழு உலகிற்கே தெரிந்திருந்த நிலையில் இந்த பினாமி ஊர்வலங்கள் புலிகளது பலவீனங்களை பறைசாற்றுவதாக மட்டுமே இருந்தன. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களது ஏகோபித்த தலைமை என்பது கேட்பதற்கு வேண்டுமானால் சந்தோசமான விடயமாக இருக்கலாம். ஆனால் விடுதலைப் போராட்டத்தினுள் நடைபெற்ற சகோதரப் படுகொலைகள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலைமைகள் போன்றவற்றை அறிந்து கொண்டுள்ள சர்வதேச சமூகத்திற்கு இது வெறுமனே ஒருவித பாசிச போக்காகவே தெரியும். சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான ஒரு சர்வஜன வாக்கெடுப்பு முறையன்றி வேறு எந்த முறையினாலும் இந்தவிதமான உரிமைகளை எவரும் பாராட்ட முடியாது. தமிழர் தேசிய கூட்டமைப்பினது தேர்தல் வெற்றி மற்றும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் என்பவை வெறும் கண்துடைப்புகள் என்பதை புரிந்து கொள்வதில் எந்தவொரு இராஜதந்திரிக்கும் அதிகம் சிரமமிருக்காது.

இதற்கு தலைகீழான விதத்தில் சர்வதேச அங்கிகாரத்தை பெறுவதற்கு தடையாக இருக்க்கூடிய பல அம்சங்களை புலிகள் கொண்டிருந்தார்கள். மோசமான மனித உரிமை மீறல்கள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள், சித்திரவதை குற்றச்சாட்டுகள், குழந்தை போராளிகள், போர்க்கால குற்றங்கள் .. என இந்த பட்டியல் மிகவும் நீண்டதாக அமைகிறது. அண்மைக் காலத்தில் யுத்தம் நடைபெற்று , சமாதான தீர்வுகள் முன்வைக்கப்பட்ட பிரதேசங்களில் கூட அவற்றில் பங்குபற்றியவர்கள் தொடர்ந்தும் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளின் பேரில் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தப்படுவது நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் விடுதலைப் புலிகள் மேற்கொண்டு போராட்டத்தை முன்னெடுக்க முனைவது அல்லது ஒரு சமாதான தீர்வை நாடுவது போன்ற இரண்டிலுமே பிரச்சனைகள் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதத் தலைப்பட்டனர். இப்படிப்பட்ட நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக புலிகள் நடப்பு நிலைமையை அப்படியே நீடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கக் கூடும் என்றும் இவர்கள் கருதினர். அதாவது தீவிரமான யுத்தமும் கிடையாது: ஊக்கமான சமாதானமும் கிடையாது. தமது கட்டுப்பாட்டு பிரதேசங்கள் தமது கையை விட்டுப் போகாதவரையில் நிலைமைகள் இப்படியே தொடர்வதில் புலிகளின் நலன்கள் சம்பந்தப்பட்டதாக இந்த ஆய்வாளர்கள் கருதினார்கள்.

இதனை ஒத்த ஒரு சிந்தனையோட்டம் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பகுதியினரிடமும் நிலவியதாக தெரிகிறது. இதன்படி பாலசிங்கம் மற்றும் கே.பி போன்றோர் 2005 ம் ஆண்டில் இந்த பிரச்சனை தொடர்பான தமது கவலைகளை பிரபாகரனுக்கு தெரியப்படுத்தி, புலிகள் அமைப்பானது சமாதானபூர்வமான ஒரு அரசியல் தீர்வுக்கு நகர்வது பற்றி பேசியுள்ளனர். ஆரம்பத்தில் பிரபாகரன் இதற்கு சாதகமான கருத்தை கொண்டிருந்திருக்கிறார். இதனையொட்டி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இணைத்தலைமை நாடுகளை அணுகியபோது சாதகமான சமிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முன்னெடுப்புக்கள் புலிகளின் அமைப்பில் பிரபாகரனுக்கு அன்றாடம் நெருக்கமாக செயற்பட்டுவந்த தமிழ்ச்செல்வன், நடேசன், புலித்தேவன் ஆகியோர் இதற்கு மாறான கருத்துக்களை கொண்டிருந்ததாக தெரிகிறது. இவர்கள் தமிழக அரசியல்வாதிகளான நெடுமாறன், வைகோ போன்றோருடன் அன்றாடம் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்தார்கள். இந்த தமிழக அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி சமாதான முன்னெடுப்புக்களுக்கான வாய்ப்புக்களை நிராகரித்துள்ளனர். இந்த தரப்பின் கை ஓங்கவே ஆரம்ப முயற்சிகள் கைவிடப்பட்டன. கடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியும், மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணியும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையிலேயே கடைசி நேரம் வரையில் காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. தமது நம்பிக்கைகள் பொய்த்துவிட்டதை 16ம் திகதி காலையில் இவர்கள் கண்டு கொண்ட போது, விடயங்கள் கைமீறிப் போய்விட்டிருந்தது.

அப்படித்தான் ஒரு சமாதான தீர்வு அல்லது மூன்றாம் தரப்பு தலையீடு தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருந்திருந்தாலுங்கூட, புலிகள் தமது படைகளை முல்லைக் காடுகளை நோக்கி தற்காலிகமாவது பின்வாங்கியிருந்தால் இந்த மனித பேரவலத்தை தடுத்திருப்பதுடன், தமது எதிர்பார்ப்புகள் கைகூடாமல் போகும் போதுங்கூட ஒரு மோசமான அழிவை அமைப்பு முகம் கொடுக்காமலும் தவிர்த்திருக்கலாம். ஆனால் நந்திக்கடலில் இப்படி முடிந்ததற்கான காரணங்களை இன்னமும் சரிவர பிடிபடாமல்தான் இருக்கின்றன. கடந்த முப்பந்தைந்து வருடத்திற்கு மேலான அனுபவங்கள் இந்த அரிச்சுவடியைக் கூடவா பிரபாகரனுக்கும் அவரது தோழர்களுக்கும் கற்றுக் கொடுக்க தவறியிருந்தது என்பதை புரிந்து கொள்வது சிரமமானதாகவே இருக்கிறது.

மனித அவலம் ஒன்று உருவாகும் போது, அப்படிப்பட்ட நிலைமையில் சர்வதேச தலையீட்டை ஏற்படுத்துவதன் மூலமாக புலிகளின் அமைப்பையும் அதன் தலைமையையும் காப்பற்றுவதாக புலிகளது தலைமைக்கு வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் தாம் கொடுத்த வாக்கினை காப்பாற்றும் விதத்தில் முயற்சி செய்தார்கள் என்பது ஓரளவிற்கு உண்மைதான். பல்வேறு நாடுகளும் பலவிதமான வழிகளினாலும் புலிகளை மீட்டெடுக்க முயன்றதாகவே தெரிகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், நோர்வே, ஜப்பான் மற்றும் பல நாடுகளது முயற்சிகள் இந்த மும்மூhத்திகளின் முன்பு பலனளிக்கவில்லை என்றே படுகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிகவும் சந்தேகத்திற்குரிதாக அமைந்திருக்கிறது. இந்திய அதிகாரிகளான நாராயணன் மற்றும் மேனன் ஆகியோரதும், கூடவே ஐ . நா பிரதிநிதியாக செயற்பட்ட விஜய் நம்பியாரது பாத்திரமும் மிகவும் சந்தேகத்திற்கிடமானதாக அமைந்துள்ளது. இந்திய அதிகாரிகளான மேனன் மற்றும் நாராயணன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதிருந்த தமது பலியை தீர்த்துக் கொண்டதான ஒரு பொதுவான கருத்து இந்திய புலனாய்வு மற்றும் இராஜதந்திரங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. கடைசி நேரத்தில் நடைபெற்ற நெருக்கடிமிக்க பேச்சு வார்த்தைகளில் புலிகள் செங்சிலுவை சங்கத்திடம் சரணடைவதாகவும் அவர்களது பாதுகாப்பிற்கு சர்வதேச சமூகம் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சிறிலங்கா அரசானது தனது வாக்குறுதிகளை காப்பாற்றாமல், இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து புலிகளின் தலைமை அனைத்தையும் அவர்களது குடுப்பங்களுடன் சேர்த்து அழித்தொழித்ததாக தெரிய வருகிறது. இதில் விடயங்கள் நடந்து முடிந்தவிதம் தொடர்பாக பலவிதமான மாறுபட்ட, ஒன்றிற்கொன்று முரண்பட்ட versions வெளிப்பட்டுள்ளன. இவற்றின் சரியான அல்லது தவறான அம்சங்கள் பற்றி தேடித்திரிவது இங்கு எமக்கு முக்கியமானதாக படவில்லை. புலிகள் அமைப்பின் தலைமையானது முற்றிலும், அதன் படையணிகளில் மிகப் பெரும்பாலானவையும் முற்றாக அழித்தொழிக்கப் பட்டார்கள் என்பதை இன்று மிகப்பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமது தலைவர் இறக்க வில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பவர்களும் கூட அவரது மரணத்தை தனிப்பட்ட ரீதியிலும் அந்தரங்கமாகவும் ஒத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் இங்து கவனிக்கப்பட வேண்டியதாகும்.



தற்போதய நிலைமை தொடர்பாக

புலிகளின் தலைமை முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது என்பதும் தலைவர் பிரபாகரன் இதில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது புலம்பெயர்ந்த புலிகளின் தலைமை முழுவதற்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தே இருக்கிறது. இந்த தகவலை தமது முக்கிய அங்கத்தவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்கள். இது கே.பி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவதற்கு முன்பே நடந்தேறி ஒரு விடயமாகும். அடுத்த நாள் கே.பி. யின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து புலிசார்பு தொடர்பு ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டு ஒரு வாரம் துக்க நிகழ்விற்கு அறிவிப்பு விடுத்திருந்தது.

இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே புலம் பெயர் புலிகளின் பொறுப்பாளர்கள் இந்த செய்தியை மறுத்ததுடன், கே.பி. அவர்களை ‘துரோகி’ பட்டம் சூட்டவும் தொடங்கினார்கள். புதிய புதிய பெயர்களில் புலிகளது கட்டமைப்புகளும், நபர்களும் அறிக்கைகள் விட்டார்கள். இவர்களுடன் தமிழகத்திலிருந்து வைகோ, நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன்…. என்று பலரும் சேர்ந்து கேபி யை துரோகி என்றும், ஏதோ ஒரு உளவு நிறுவனத்திற்கு விலைபோனவர் என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனின் மறைவு சிறீலங்கா, இந்திய மற்றும் சர்வதேச அரசுகளுக்கும் மிகவும் விரிவாக தெரிந்திருக்கிறது. சிங்கள மக்கள் நன்கு அறிவார்கள். இப்படியாக அவர்களெல்லாம் திட்டவட்டமாக அறிந்திருக்கும் போது, புலம்பெயர் புலித்தலைமை தொடர்ந்தும் தமது தலைவரின் மறைவை தமிழ் மக்களுக்கு மறைப்பதன் மூலமாக எதைச் சாதிக்க முனைகிறார்கள் என்பது இப்போது பிரச்சனைக்குரிய விடயமாகிறது.

பல்வேறு தவறுகளுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் இயக்க்த் தலைவர் ஒரு போராளி. கடைசிவரையில் களத்திலே நின்று மரணித்;திருக்கிறார். அவருக்கு உரிய மறியாதை செய்வது அவசியம் என்பது அனைத்து புலி அங்கத்தவர்களதும் நெருங்கிய ஆதரவாளர்களதும் ஆதங்கமாகும். இதனைவிட, ஒரு குறிப்பிட்ட போராட்ட வழிமுறை தனது இலக்கை அடையத் தவறியது மட்டுமன்றி மாபெரும் பேரழிவை ஏற்படுத்தி ஓய்ந்திருக்கிறது. அத்தோடு இன்னமும் பெருந்தொகையாக மக்கள் வன்னியில் அகதி முகாம்களில் மிகவும் மோசமான நிலைமைகளில், தொடர்ச்சியான நெருக்குதல்களின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்கள். இன்னுமொரு பகுதி புலிகளின் போராளிகள் ஈழத்தில் தலைமறைவாக செயட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல்வேறு தரப்பினரும் இன்று புலம் பெயர் தமிழர் மற்றும் புலம் பெயர் அரசியல் தலைமை போன்றவர்களிடம் இருந்து முக்கியமான திட்டவட்டமான செயற்பாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சிறீலங்கா அரசோ விடுதலைப் புலிகளை தோற்கடித்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் என்ன காரணங்களுக்காக போராட நேர்ந்தது போன்ற விடயங்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்;சம் கௌரவத்துடன் கூடிய ஒரு சமாதானம் பற்றி பேசுவதற்கு கூட யாருமே தயாராக இல்லை. இப்போதுள்ள விழிப்புணர்வு பெற்றுள்ள சர்வதேச சூழலை பயன்படுத்திக் கொண்டு ஏதாவது உருப்படியாக செய்தால் அன்றி, நிலைமைகள் இன்னமும் மோசமாக கட்டத்தை அடைந்து தமிழ் மக்களது பிரச்சனைகள் இன்னமும் பல பத்தாண்டுகள் பின்தள்ளப்படும். அப்போது சிறீலங்கா அரசின் தொடர்ச்சியான திட்டமிட்ட இன சுத்திகரிப்பு மற்றும் இன ஒழிப்பு செயற்பாடுகளினால் ஒருவேளை மகிந்த சொல்வது போல :”சிறுபான்மை பிரச்சனை என்பது நாட்டில் இல்லாமற் செய்யப்பட்டு” விடவும் கூடும். ஆகவே இப்போது மயிர் பிளக்கும் விவாதங்களுக்கும் வியாக்கீனங்களுக்கும் கால அவகாசம் கிடையாது. ஆனால் இந்த இந்த அவசரமான பனிகளை சரிவர தொடங்குவது என்பது, முன்னைய அத்தியாயத்தை மூடி அதனுடன் ஒரு திட்டவட்டமான கோட்டைக் கீறிக்கொள்வதால் மட்டுமே சாத்தியப்படும். அதனைச் செய்யாமல் கடந்த கால மாயைகளில் மக்களை வைத்திருப்பதும் சர்வதேச சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்று கற்பனை செய்வதும் முட்டாள்தனம். இதற்கு மேல் இப்படியான செயற்பாடுகளை செய்பவர்கள் தமிழர்களது அரசியல் தீர்வுகளுக்கான முன்னெடுப்புகளுக்கு தடையாக இருப்பவர்களாகவே கருதப்பட வேண்டியவர்களாவர். அப்படியானால், புலம் பெயர் புலித்தலைமை ஏன்; இப்படி செய்கிறது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்பின் தலைமையைப் பொருத்தவரையில் நாம் இரண்டுவிதமான போக்குகளை அவதானிக்க முடிகிறது. முதலாவது போக்கு, கே.பி மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வெளிப்படுத்தப்படுகிறது. இவர்களது நிலைப்பாட்டின்படி, தலைவரது மரணத்தை பகிரங்கமாக ஒத்துக் கொள்வது: அவருக்கு உரிய கௌரவத்தையும் மறியாதையையும் செலுத்துவது: அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் புலிகளது தோல்விக்கு காரணமாக அமைந்த தவறான போக்குகளை களைந்து கொண்டு போராட்டத்தை இன்னமும் வுPரியமாக முன்னெடுப்பதற்கு அவசியமன நிலைமைகளை தாம் தோற்றுவிப்பது. புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய கோரிக்கையை கைவிட்டு பன்முக அரசியலை ஊக்குவிப்பது: ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பது: வெளிப்படையான தன்மையையும், மக்களுக்கு பதில் செல்லவேண்டிய பொறுப்பையும் போராளிகள் கொண்டிருப்பது: போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும். இரண்டாவது போக்கினர், தம்மை, தமது கடந்தகால் நடவடிக்கைகளை பரிசீலனை செய்வதையே தவிர்க்க முனைகிறார்கள். தமது இயக்க தலைவரது மறைவை கூட தமது அங்கத்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரியப்படுத்தாமல், தமது செயற்பாடுகளை அப்படியே தொடர்ந்து செல்லலாம் என்று கருதுகிறார்கள் போலத் தெரிகிறது.

இந்த இரண்டாவது தரப்பினர் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தாக வேண்டியுள்ளது. இப்படியாக செயற்படுபவர்களுள் பலதரப்பட்ட ஒன்றிற் கொன்று முரண்பட்ட நலன்களையும், அக்கறைகளையும் கொண்ட குழுக்களையும் நாம் வேறு படுத்தியாக வேண்டியுள்ளது. இவற்றில் ஒரு தரப்பினர் கடந்த காலத்தில் புலிகளது புலம் பெயர் அங்கங்களில் பொறுப்புக்களில் அங்கம் வகித்தவர்கள். கடந்த காலத்தில் இந்த தலைமையானது தமிழ் மக்களை ஒரு மாயையில் வைத்திருந்தனர். பிரபாகரனை கடவுளாக்கி, அவருக்கு மறு கேள்வி கேட்காத கீழ்ப்படிவை “தேசபக்தி” என்று கற்பிதம் செய்தார்கள். அவர்களது மிகவும் நெருங்கிய, விசுவாசம் மிக்க அங்கத்தவர்கள், ஆதவாளர்களது அக்கறையான கேள்விகள் மற்றும அவதானிப்புக்களையெல்லாம் ‘தலை’க்கு இது தெரியாது என்று நினைக்கிறீர்களா என்று வாயை அடைக்கச் செய்தார்கள். இப்போது உண்மை நிலைமையை தெரிந்து கொண்டு கோபப்பட்டுப் போயுள்ள அங்கத்தவர்களை, ஆதரவாளர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதில் பிரச்சனை இருக்கலாம். கே.பி யின் அறிக்கையில் தலைவரது மரணம் பற்றிய செய்தி மட்டும் அல்ல, தமது கடந்த கால செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விடயமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. இதனை செய்வதானால், தற்போது புலம்பெயர் புலி அமைப்புக்களில் பொறுப்புக்களில் இருப்பவர்கள் தம்மிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் மற்றும் கணக்கு வழக்குகள் பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கும். இந்த பிரச்சனைகள் காரணமாகவே இவர்கள் பிரச்சனைகளை மூடிமறைத்து ஓட முனைவதாக தெரிகிறது. தவைவர் உயிருடன் இருக்கும் வரையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக்கி துதி பாடியவர்கள், அவர் மறைந்ததும் அவருக்கு அஞ்சலி செய்ய மறுப்பதுடன், அவரால் நியமிக்கப்பட்டவரையும் துரோகி என்று கூறுவதில் கபடத்தனம் தெரிகிறது.

இரண்டாவது காரணம், பினாமி சொத்துக்கள் பற்றிய பிரச்சனையாகும். புலிகள் அமைப்பானது மிகவும் கஸ்டமான நிலைமைகளின் கீழ், அமைப்பின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது எமது சமூகத்தின் ஆதிக்க சக்திகள் அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மறுத்தார்கள். ஆனால், புலிகள் ஒரு பலமான சக்தியாக தம்மை நிலைநாட்டிக் கொண்ட பின்போ, பல்வேறு தரப்பட்ட வஞ்சகப் புகழ்ச்சியாளர்களும், பிழைப்புவாதிகளும், மோசடியாளர்களும் புலிகளைச் சூழ்ந்து கொண்டுள்ளார்கள். புலிகள் அமைப்பினுள்ளும, அதற்கு வெளியிலும் புலி அங்கத்தவர்களும் ஏனைய உண்மையான தேசபக்தர்களும், விடுதலைப் போராட்டத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் தொடர்பான அக்கறையில் பலவிதமான போராட்டங்களை புலிகளின் தலைமைக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கையில், அந்த வெப்பத்தில் குளிர்காய புகுந்தவர்கள் இவர்கள். புலிகளது தலைமையும் கூட தமது செந்த அமைப்பினுள் நீண்டகாலமாக போரடிவந்த, போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய உண்மையான அக்கறைகளை எழுப்பிய போராளிகளை புறம் தள்ளிவிட்டு, இநத மாதிரியான வஞ்சகப் புகழ்ச்சி செய்யும், கொத்தடிமைக் கூட்டத்தை அரவணைத்துக் கொண்டது: உண்மையான புரட்சியாளர்களை, தேச பக்தர்களை கொன்று குவித்தது.

இப்படியாயக உள்நுழைந்தவர்களது நோக்கமெல்லாம் எப்படி சுருட்டுவது என்பதாகவே இருந்தது. இவர்களது ஆலோசனையின் பேரிலேயே பல கோடி டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் பல்வேறு நபர்களது பெயர்களில் பினாமியாக வாங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களால் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. இத்துடன் கூடவே இன்னொரு பிரச்சனையும் இதில் இருக்கிறது. புலிகளது தலைமையினால் இந்த திட்டங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டடதாகவும் ஒரு மையமான திட்டமிடலின் பேரிலும் இந்த முயற்சிகள் நடைபெறாமல், பல்வேறு நபர்களால், தத்தமது விசுவாசிகளுக்கூடாக இவை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கான கணக்கு வழக்குகள் அந்தந்த புலம் பெயர் நாட்டு கிளைகளில் கூட சரிவர கிடையாது. தளத்தில் இருந்த கணக்கு வழக்கெல்லாம் அழிந்து போயுள்ளன. இபபோது இந்த பெருந்தொகையான பணம் பேசுகிறது. இந்த சொத்து பத்து பற்றிய கணக்கு வழக்கு பற்றிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கு தலைவரை உயிருடன் வைத்திருப்பது அவசியமானது.
காரணங்கள் எப்படிப்பட்டனவாக இருப்பினும், எப்படிப்பட்ட எண்ணங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் செய்ற்படடாலும், எவ்வளவு தூரம் ஒவ்வொருவரும் நிலைமைகளின் பாரதூரமான தன்மைகள் தெரிந்தோ தெரியாமலோ செயற்பட்டாலும், இவற்றின் விளைவுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கப் போகின்றன. அதாவது, நமது தேசம் முன்னெப்பொழுதும் கண்டிராத ஒரு மோசமான இடரில் சிக்கியிருக்கிறது: காலம் தாழ்த்தாது உடனடியாகவே செயற்பட்டாக வேண்டியுள்ளது. இந்த நிலையில் எப்படிப்பட்ட காரணத்தினாலாலும், பிரச்சனைகளின் தீர்க்கமான தன்மைகளை உணராது, சொந்த நலன்களுக்காக மக்களது எதிர்காலத்துடன் விளையாடிக்கொண்டிருப்பது மாபெரும் வரலாற்றுத் துரோகமாகவே கருதப்பட வேணடியுள்ளது.

புலிகள் அமைப்பினுள் தோன்றியுள்ள இந்த இரண்டு போக்குகளில், கே.பி அவர்கள் சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்படும் போக்கானது ஆரோக்கியமானதாகும். இன்று தோன்றியுள்ள இடர்பாடுகளில் இருந்து மிஞ்சியுள்ள புலம் பெயர் அமைப்பையும் ஏனைய கூறுகளையும் அவர்களது வளங்களையும் உருப்படியான வேலைத்திட்டங்களை நோக்கி நகர்த்த இது முக்கிய பங்களிப்பாக அமையும். இரண்டாவது போக்கானது கஸ்ரோ மற்றும் பொட்டு ஆகியோரது விசுவாசிகளால் முன்னெடுக்கப்படுவதாகும். இதற்கு அரசியலில் எதிர்காலமே கிடையாது. அந்த வகையில் இதுவோர் Non Starter ஆகும். அமைப்பானது வெளிப்படையாகவும், முற்று முழுமையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்த தோல்விக்கு இட்டுச் சென்ற காரணங்களை கண்டறிந்து, அவற்றை களைவது, எதிர் காலத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய எந்தவிதமான ஆரோக்கியமான முன்னெடுப்புகளுக்கும் முன்னிபந்தனையானது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் மக்களை உண்மைகளினால் அறிவொளி ஊட்டுவதற்குப் பதிலாக மாயைகளிலும், கனவுகளிலும் லயிக்க செய்வது இவர்களது நோக்கங்களையே கேள்விக்குள்ளாக்குகிறது.

பொறுப்பிலுள்ளவர்களுக்கு நிலைமைகளை சரிவர கையாள முடியாமல் இருக்கலாம். அது அவர்களது தவறு மாத்திரம் கிடையாது. ஏனெனில் கடந்த காலத்;தில் “சொன்னதைச செய்யும சுப்பர்களாக” இருந்த ஒரே காரணத்திற்காகவே இவர்கள் இந்த பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டவர்களாவர். ஆதலால், இப்படியாக நேர்ந்து முடிந்ததற்கு இவர்களை மாத்திரம் யாரும் குறை கூறிவிட முடியாது. ஆனால் இப்போது நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டுள்ளதை அப்பட்டமாக ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதற்கு குறுக்கு வழிகள் எதுவுமே கிடையாது. இவர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணத்திலும் பல மோசடியாளர்கள் விடயங்களை தமது கைகளில் ஏந்திக் கொண்டு தத்தமது சொந்த நோக்கங்களுக்காக, தத்தமது சொந்த வேலைத் திட்டங்களுக்காக ஓடித்திரிகிறார்கள். இவற்றின் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானதாக அமையும என்பதை அனைவரும் தெட்டத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மாற்று தீர்வுகளுக்கான முயற்சிகளை செய்வதற்கான கால அவகாசமும் என்றென்றைக்கும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஏற்கனவே தனியான அரசை அமைப்பதற்கு கிடைத்த சர்ந்தர்ப்பங்களை தமது கடந்த கால் தவறுகள் காரணமாக விடுதலைப் புலிகள் தவறவிட்டதை நாம் வெளிப்படையாகவே அறிவோம். இப்போது சமாதான முயற்சிகளுக்கான சந்தர்ப்பங்களை தமது சுயநலம் காரணமாகவோ அல்லது இயலாமை காரணமாகவோ மீண்டும் தவற விடுவதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களால் அனைத்து தேசபக்த் சக்திகளையும் ஒன்றிணைத்து இந்த இலக்குகளை நோக்கி நகர முடியவில்லையானால், உண்மையான தேச பக்தர்கள் விடயங்களை தமது கைகளில் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் இருப்பதாக தெரியவில்லை.

முடிவாக…

அண்மைய போராட்டத்தில் அழிந்து போனது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமல்ல. தமிழ் மக்களில் போராட்ட தலைமையும் தான். இந்த வாதம் பலருக்கு உடன்பாடற்றதாக, மகிழ்ச்சியளிக்க மாட்டாதததாக இருப்பினும் கூட அதுதான் உண்மையான நிலைமையாகும். சரியாகவோ அல்லது தவறாகவோ, எமது சம்மதத்துடனோ அல்லது எமது அபிப்பிராயங்களை அறவே புறக்கணித்தோ, தமழீழ விடுதலைப் புலிகள் அமைப்புத்தான விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வந்தார்கள். இதனை நாம் மறுத்ததில்லை. புரட்சிகர சத்திகளது அக்கறையெல்லைம், எப்படி ஒரு பன்முக சக்திகளும் செயற்படவல்ல அரசியல் சூழலை உருவாக்குவதும், போராட்டத்திற்கான மாற்றுத்தலைமையை நிலைநாட்டுவதும் என்பதாகத்தான் இருந்து வந்தது. புலிகள் மாற்று சக்கதிகளை அழித்தொழித்தது உட்பட பல்வேறு காரணங்களால் எம்மால் புலிகளது ஏகபோக தலைமை என்ற நிலைப்பாட்டை நடைமுறையில் கேள்விக்குள்ளாக்க முடியவில்லை.

இப்படியாக புலிகள் தம்மை ஏகபிரதிநிதிகாளாக மக்களின் மேல் திணித்திருந்தார்கள். தேசிய விடுதலை என்ற பெயரால் செய்யப்பட்ட செயற்பாடுகளில் பெரும்பாலானவை இவர்களால்தான, பல மோரமான தவறுகளுடன் தானென்றாலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. யுத்தம், சமாதானம், சர்வதேச அங்கிகாரம் பற்றிய பிரச்சனைகள் எல்லாமே விடுதலைப் புலிகளை ஒட்டித்தான் நடைபெற்று வந்தன. இப்படியாக பலவந்தமாக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தலைமை அமைப்பானது இன்று யுத்தத்தில் முற்றாக அழித்தொழிக்;கப்பட்டிருக்கிறது. இவர்கள் இதுவரைகாலமும் கடைப்பிடித்துவந்த ஏகபிரதிநிகள் என்ற நிலைப்பாடு காரணமாக வேறு மாற்று சக்திகள் எதுவுமே தமிழ் மக்களை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லவல்ல பாத்திரத்தை ஆற்றும் நிலையில் இல்லை. இதனால், எமது போராட்டத்தின் ஒரு முக்கிமான கட்டத்தில் அதன் தலைமை என்பது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற சிறிலங்கா அரசிற்கோ, அதன் வெற்றியில் களிப்புற்றிருக்கும் பெரும்பாலான சிங்கள மக்களுக்கோ அடுத்தடுத்ததாக தொடரப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையும் இருப்பதாக தொரியவில்லை. இன்றுள்ள அரசியல், இராணுவ, சித்தாந்த கட்டமைப்புக்களில் கீழ் தமிழ் மக்கள் ஒரு கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது என்பதையே அண்மைக்கால அரசினதும் சிங்கள் மக்கள மற்றும் அவர்களை பிரதிநிதித்துவ முயலும் பல்வேறு அமைப்புகளதும் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு நிலையில், தமிழ் தேசத்தில் உண்மையான அக்கறையுள்ள அனைவரும், வரலாறு நம்முன் வைத்துள்ள முக்கியமான கடமையில் தமது கவனத்தை குவிப்பது அவசியமானது. எம்மிட் பலரிடம் கட்ந்த காலத்தின் இழப்புகள் மற்றும் அவை ஏற்படுத்;திய தழும்புகள் போன்றவை இன்னமும் ஆறாத வடுக்களாக இருப்பது என்னவோ உண்மைதான். இதிலிருந்து ஒருவிதமான புலியெதிர்ப்பு வாதம் வெளிப்படுவதும் புரிந்து கொள்ளப்படப் கூடியதுதான். கடந்த காலத்தில் புலிகள் ஒரு வலுவான சக்தியாக இருந்தபோது அல்லது ஒரு வலுவான சக்தியாக தம்மை காட்டிக் கொண்டபோது நாமும் அவர்களை எதிர்த்து போராடித்தான் ஆக வேண்டியிருந்தது. ஆனால் இன்று புலிகளின் தலைமை மட்டுமல்ல புலம்பெயர் அங்கத்தவர்களது செயற்பாடுகளுக்கு ஆதர்சமாக விளங்கிய ஒன்றும் அழிந்த விட்டது. இப்படியாக புலிகள் அழியும் போது, புலிகளது நடவடிக்கைகளின் எதிர் விளைவாக உருவாகிய புலியெதிர்ப்பு வாதமும் தன்னை மறுபரிசிலனை செய்து, உருவாகிவிட்ட புதிய நிலைமைகளுக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளையும் மீள ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது.

மாற்று அரசியலை கட்டமைக்க விரும்பும் ஒவ்வொரு புரட்சிகர மற்றும் தேசபக்த சக்திகளும் தம்முன்னுள்ள வரலாற்குக் கடமைகளை உணர்ந்து கொண்டு அவற்றை முன்னெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை வடிவமைப்பதில் தீவிரமான முனைப்புடன் செய்ய வேண்டும். இப்படியாக செய்யும் போது எமது கடந்தகால சிந்தனை முறைகளையும் ஒரு தடவை பரிசீலனைக்கு உள்ளாக்கியாக வேண்டியுள்ளது. புலிகள் மக்களையும் அவர்களது போராளிகளையும் கடுமையாக ஒடுக்கிவந்த நிலைமையில் உருவான, தவிர்க்க முடியாததாக இருந்த புலியெதிர்ப்புவாதமும் கூட இந்த நிலைமையில் தன்னை திருத்திக் கொண்ட சரியான இலக்குகளை நோக்கி தமது சக்திகளை ஒழுங்கமைக்கும் விதத்தில், தம்மை நோக்கி முன்னாள் புலிகள் உட்பட அனைத்து போராட்டத்தில் அக்கறையுள்ள சக்திகளுமே நாடிவருவதற்கு இடையூராக தம்மிடம் இருக்கும் அம்சங்களை களைந்துவிடுவது தொடர்பாகவும் தீவிரமான கரிசனையை வெளிப்படுத்தியாக வேண்டியுள்ளது. இதற்கு மேலும் புலியெதிர்ப்பு காய்ச்சலை வெளிப்படுத்துவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமமானதாக இருக்கும்.

இன்று எம்முன்னுள்ள வரலாற்று கடமைகளை நாம் சரிவர செய்வதற்கு முதலில் நாம் அந்த வரலாற்றும் கடமைகளை சரிவர இனம் கண்டு கொள்வது அவசியமாகிறது. இலக்குகளை இனம் கண்ட பின்னர் அந்த இலக்லை நோக்கி பயணிக்க தயாராக இருக்கும் அனைவரையும் எம்மோடு இணைத்துக் கொள்வதில் அதிகம் கவனத்தை செலுத்தியாக வேண்டியுள்ளது. இவர்களும் மாற்று அமைப்புக்களை கடந்த காலத்தில் கட்ட முனைந்து தோல்வியில் முடிவடைந்தவர்கள், மற்றும இப்போதும் கூட இப்படிப்பட்ட முயற்சிகளை சிறிய அளவிலாவது முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்கள் இதில் முக்கியமான பங்காளிகளாகிறார்கள். இவர்கள் அனைவரையும் விட ஒரு மிகவும் முக்கியமான பிரிவு புலிகளது சர்வதேச வலைப்பின்னலாகும்.

புலிகளின் சர்வதேச வலைப்பின்னலைப் பொருத்தவரையில் அவர்களுள் இரண்டுவிதமான அரசியல் போக்குகளை நாம் அவதானிக்க முடிகிறது. முதலாவது பிரிவானது கடந்தகால வேலை முறைகளுடன் கணிசமான அளவு முறித்துக் கொண்டு, தமது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளும் விதத்தில் சில கடினமான, மகிழ்ச்சியளிக்காத முடிவுகளை துணிச்சலுடன் மேற்கொள்பவர்கள். இவர்கள் அமைப்பு அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் தமக்கு ஏற்படக் கூடிய அவப்பெயர்கள் மற்றும் அந்நியப்படுத்தல் போன்றவற்றையும் பொருட்படுத்தாமல், தாம் ஏற்றுள்ள வரலாற்று கடமைகள் காரணமாக சில தீhக்கமான முடிவுகளை மேற்கொண்டு அவற்றை பகிரங்கமாக தமது அங்கத்தவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் அறிவிக்கத் தயங்காதவர்கள். இவர்களது இந்த நடவடிக்கைகள் போராட்டத்தின் நீண்டகால நம்மை கருதி செய்யப்பட வேண்டியவையாகும். இவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பன்முகதன்மை, ஜனநாயகம், கூட்டுச் செயற்பாடு என்பவை இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் எந்தவிதமான முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதற்கும் மிகவும் அத்தியாவசியமானதாகும்.

அடுத்த போக்கானது, புலிகளது கடந்தகால அரசியல் நடைமுறைகளை அப்படியே தொடர முயலவதாகும். இவர்கள் தலைவரது இறப்பு பற்றிய செய்திகளையே தமது அங்கத்தவர்களுக்கும், நெருங்கிய ஆதரவாளர்களுக்கும் அறிவிப்பதற்கு தயாரில்லாதவர்கள். இவர்களைச் சுற்றியுள்ள அதிகாரம், பணபலம், பிழைப்புவாதிகளது கூட்டம் போன்ற அனைத்துமே தத்தமது குறுகிய நலன்கள் என்ற நிலையிலிருந்து போராட்டத்தை அணுகுகிறார்களே அன்றி தமிழரது அரசியல் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமாக அவசியப்படும் அம்சங்கள் என்ற கோணத்தில் சிந்திக்கத் தலைப்படுகிறார்கள். இங்கு தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது சாதாரண ஒரு தகவல் பற்றிய பிரச்சனை கிடையாது. ஒரு தேசத்தின் போராட்டமானது தனியொரு அமைப்பிலும், அந்த அமைப்பின் விதியானது தனிநபர் ஒருவருடனும் பின்னிப் பினைக்கப்பட்ட பின்பு அந்த தலைவரது மரணம் என்பது போராட்டத்தை தீர்க்கமாக பாதிக்கக்கூடியது. இப்படிப்பட்ட நிலைமையில் இந்த தகவலைக்கூட நேர்மையாக அறிவித்து, வீழ்ந்துவிட்ட அந்த போராளிகளுக்கு ஒரு முறைப்படியான கௌரவத்தை கொடுக்க முடியாதவர்கள் உண்மையான தலைவர்களாக இருக்க முடியும் என்பதே கேள்விக்குறியதுதான். தலைவர் மறைந்த செய்தியானது எமது எதிரிகளுக்கு, சாதாரண மக்களுக்கு மற்றும் சர்வதேச இராய தந்திரிகளுக்கு, அவர்களது உளவு அமைப்புபளுக்கு தெரிந்தே இருக்கிறது. இது மக்கள் தொடர்பாக இன்றும் தொடர்ந்துவரும் அதிகாரவர்க்க கண்னோட்டத்தையே காட்டுகிறது. இதனை நீண்ட காலத்திற்கு யாருமே மறைத்திருக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் இவர்களது நம்பக தன்மையை குறைக்கவே வழிவகுக்கும்.

இப்படிப்பட்ட நிலைமையின் கீழ் மாற்று அரசியல் முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முனைபவர்கள் புலிகள் அமைப்பினுள் இருந்து அதன் கடந்தகால தவறான அரசியல் பாதைகளுடன் முறித்துக் கொண்டு, ஏனைய சக்திகளையும் இணைத்துக் கொண்டு, ஜனநாய பாதையில் போராட்டத்தை தெராட வேண்டுமென நினைப்பவர்கள் எமது இயல்பான நண்பர்களாவர். இந்த போக்கு எதிராக நிற்க முனைபவர்கள் ஒரு வரலாற்று ஓட்டத்தை தடுத்து நிறுத்த முனைபவர்கள் என்பதை வரலாறு விரைவில் நிரூபித்துவிடும். நாம் ஆதரிக்கும் போக்கை வெளிப்படுத்துபவர்கள் பற்றியும் பல் வதந்திகள் உலாவுகின்றன என்பதும் உண்மையே. நாம் இங்கு தனிநபர்களை அல்லாமல் அவர்களால் முன்வைக்கப்படும் அரசியலை கருத்திற்கொண்டுதான்; எமது முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றையும் தாண்டி இன்னமும் பல சந்தேகங்களும், கடந்த காலம் தொடர்பான விமர்சனங்கசளும் கூட எமக்கு இருக்கின்றன என்பது உண்மையே. அவற்றையெல்லாம் பேசி தீர்த்துவிட்டுத்தான் எமது அரசியல் முடிவுகளை மேற்கொள்வோம் என்பது இன்றுள்ள நெருக்கடியான நிலைமைகளில சாத்தியப்படப் போவதில்லை. ஆனால் எமது அடுத்தடுத்த கட்டங்களில் இவை தொடர்பான பல்வேறு விடயங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

Thanks fot thesamnet

http://thesamnet.co.uk/?p=13380

No comments:

Post a Comment