மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 27, 2020

வெற்றிச்செல்வனும், உமாமகேசுவரனும்... இந்திய ரோவின் சுண்ணாம்பு தடவல்! : 2

 

பகுதி 45

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்   

-வெற்றிச்செல்வன்


நான்16/07/1986 அன்று ஏற்படுத்தப்பட்ட புதிய பின்தள மா நாட்டில் கலந்து கொள்ளும் தோழர்கள் இருந்த முகாமுக்கு சென்றபோது, என்னை மொட்டை மாடி அலுவலகத்தில் பார்த்த ஒரு சில தோழர்கள் இருந்தார்கள். கிட்டத்தட்ட 85பேர் இருந்த இந்த முகாமில் யாரையும் எனக்கு தெரியாது. அங்கிருந்த யாருக்கும் அனேகமாக டெல்லியில் ஒரு அலுவலகம் இருப்பது கூட தெரியாது. என்னைப் பற்றி விசாரித்த பின்னர் அங்கிருந்த எல்லா தோழர்களுக்கும் மாநாடு நடக்குமா நடக்காதா, மாநாடு நடந்தபின் தங்களை இலங்கை அனுப்புவார்களா இல்லையா கவலையில் தான் இருந்தார்கள்.

தற்சமயம் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு பற்றி எல்லோரும் கவலையுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். அவர்களுக்குசெயலதிபர் உமா மகேஸ்வரன், தோழர் பரந்தன் ராஜன் மேல் அவர்களுக்கு சரியான கோபம் தான் இருந்தது. தங்களை பணையம் வைத்து இவர்கள் விளையாடுவதாக அவர்கள் கருதினார்கள். நானும் சந்தடி சாக்கில் இந்தியா செயலதிபர் உமா மகேஸ்வரனை தான் ஆதரிக்கிறார்கள். இந்த பிளவு ஏற்பட்டு இருக்காவிட்டால் மாநாடு நடந்து கட்டாயம் இந்தியா திரும்பவும் பயிற்சி ஆயுதங்கள் கொடுத்து நீங்கள் எல்லாம் இலங்கைக்கு போயிருக்கலாம் என்று கூறினேன். எந்த தோழர்களும் இதை பெரிய விஷயமாக எடுக்கவில்லை.

எல்லா தோழர்களுக்கும் காலித் மாதிரி ஒரு சிறந்த தோழர் செயலதிபர் உமாமகேஸ்வரன் தலைமையை மறுத்துப் போனது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் காலித் தோடு நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் அங்கிருந்த தோழர்கள் காலித் பற்றி நன்றாக தெரிந்தவர்கள். காலித் போன்ற சிறந்த தளபதிகள் ஒதுங்குவது குறித்து கவலைப்பட்டார்கள். முதன்முறையாக நான் முகாம் வாழ்க்கையை அனுபவித்தேன். உண்மையைக் கூறப்போனால் எனக்கு கஷ்டமாத்தான் இருந்தது. அந்த தோழர்களுடன் பேசி பழகும் போது அவர்களின் மனக்குமுறல்கள் அறியக்கூடியதாக இருந்தது. இரண்டு மூன்று மாதத்தில் பயிற்சியும் ஆயுதங்களுடனும் இலங்கைக்கு திரும்பலாம் தங்கள் குடும்பத்தவர்களுடன் இருந்து போராட்டத்தில் பங்கு கொள்ளலாம், என்ற நினைவிலும்,பல தோழர்கள் தங்கள் படிப்பை தொடரலாம் என்ற கனவில் வந்தவர்கள். இயக்கத்துக்கு போராட வந்த தோழர்களில் யாரும் வீட்டில் சாப்பிட வழியில்லாமல், பொருளாதார கஷ்டத்தால் இங்கு வரவில்லை.

18 வயதுக்கு மேற்பட்ட தோழர்கள் ஓரளவு விஷயம் விளங்கி சிங்கள அரசுக்கு எதிராக, சிங்கள மக்களுக்கு எதிராக போராட புறப்பட்டு வந்தவர்கள். கொஞ்சம் சிறுவயது தோழர்கள் உணர்ச்சி வேகத்தில் வந்தவர்கள் அதில் அனேகமானோர் வீட்டுக்கு தெரியாமல் வந்தவர்கள்.ஒரு ஒரு மாதம் இல்லையென்றால் ரெண்டு மாதத்தில் திரும்ப வந்துவிடலாம் என்ற நினைப்போடு வந்தவர்களே அதிகம். ஆனால் தளத்தில் இலங்கையில் வேலை செய்த எமது அரசியல் பிரிவு தோழர்களின் உணர்ச்சிகரமான பேச்சு, ஏமாற்று வாக்குறுதிகள் போன்றவற்றில் தூண்டப்பட்டு வந்தவர்களே அதிகம். ஆப்பிள் தோட்டத்தில் பயிற்சி, சினிமா நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்றுகூட பலர் வந்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் தளத்தில் சொல்லப்பட்டு, ஏமாந்து பலர் வந்திருக்கிறார்கள்.

எமது இயக்கத்தில் மட்டுமல்ல,பொதுவாக எல்லா இயக்கங்களிலும் முகாம்களிலிருந்து பயிற்சி தோழர்களை தவிர மற்ற நிர்வாகப் பொறுப்புகளில் வேலை செய்த தோழர்களின் நிலை பரவாயில்லை. ஓரளவு வசதியான இருப்பிடம் படுக்கை உணவு வகை பரவாயில்லை. அதோடு வெளிச் செய்திகளை உடனுக்குடன் அறிய கூடியதாகவும் இருந்தது. நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு தலைவர்களின்,குட்டி தலைவர்களின் இரட்டை நிலைப்பாடுகள் அவர்களின் துரோக செய்கைகள் எல்லாம் அறியக்கூடியதாக இருந்தது. முகாமில் இருந்த தோழர்களுக்கு எப்ப ஆயுதம் வரும். எப்ப ஊருக்கு போகலாம் இந்த நினைவுதான். அவர்களுக்கு இயக்கத் தலைவர்கள், குட்டித் தலைவர்கள் தங்கள் முகாம்களுக்கு வந்து போவது ஒரு பெரிய சந்தோசமாக இருந்த காலம் உண்டு.

முகாம்களில் தமிழர்களின் சுதந்திர விடுதலைக்காக வந்த இளைஞர்களை அடிமைகள் போல், மூன்று நான்கு வருடங்கள் விடுதலை என்ற பெயரில் ஒரு அனாதை ஆசிரமம் நடத்துவது போல் இந்தத் தலைவர்கள் நடத்திய விதம் ஒரு பெரிய துரோகம். இந்த தலைவர்கள், மற்றும் குட்டித் தலைவர்கள் முகாம்களில் வந்து பெரும் நல்லவர்கள் போல் நடித்து, சோஷலிசம் கம்யூனிசம் எல்லாம் தோழர்களுக்கு எடுத்துரைத்து சர்வதேச போராட்டங்கள் பற்றிய கதைகள் செய்திகள் எல்லாம் கூறி, தோழர்களை ஒருவித தங்களைப் பற்றிய ஒரு கற்பனை நிலையில் வைத்திருப்பார்கள்.

ஆனால் இந்தத் தலைவர்கள் முகாம்களில் இருந்த தோழர்களுக்கு கூறிய கருத்துகளுக்கு எதிர்மறையாக இவர்களின் செயல்பாடு இருந்தது. வெளியில் இவர்கள் தங்கள் தலைமையை காப்பாற்றிக்கொள்ள போடும் வேடங்கள் அதிகம்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி பெறுவதாக பெருமையடித்துக் கொள்வார்கள். ஆனால் அந்தத் தோழர்கள் 2, 3வருடம் முகாமில் அடைபட்டு கிடைப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் இலங்கைக்கு அனுப்பி போராட்டத்தில் கலந்துகொள்ள செய்வதற்கோ, ஆயுதங்கள் எடுப்பதற்கு மிகப்பெரிய எந்த முயற்சியும் செய்வதில்லை. எமது இயக்கத்துக்கு இந்தியா மூலம் கிடைத்த ஆயுதங்கள் கூட முழுவதும் இலங்கைக்குப் போகவில்லை. இந்தியாவுக்கு எதிரான போராடும் நக்சலைட் இயக்கங்களுக்கு ஒரு தொகுதி ஆயுதங்கள் கொடுக்கப்பட்ட விடயங்கள் உண்மை. teloடெலோ இயக்கம் பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்தன.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் ஒரே நேரத்தில் இந்தியாவில் 300 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்ததாக தெரியவில்லை. பயிற்சி முடிந்த உடன் அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி விடுவார்கள். அதேநேரம் தனித்தமிழ் நாட்டு விடுதலைக்காக என்று கூறி பல தமிழ்நாட்டுதமிழர்களை இலங்கைக்கு அனுப்பி பயிற்சி கொடுத்து திரும்ப அழைத்து தங்களுக்கு தமிழ்நாட்டில் இந்தியாவில் சாதகமாக வேலை செய்ய பயன்படுத்திக் கொண்டார்கள். அதேநேரம் தங்களுக்கு சாதகமான தொடர்புகளைப் பயன்படுத்தி பெருமளவு ஆயுதங்கள் கொள்வனவு செய்து இலங்கையில் தங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த செய்திகளை எல்லாம் பிற்காலத்தில் தமிழ்நாட்டு உளவுத்துறையின் உயரதிகாரிகள் எங்களுடன் கலந்துரையாடும் போது எங்களுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள்.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் முகாம் வந்து எங்களை சந்தித்தபோது திரும்பவும் மாநாடு நடத்துவது தளத்தில் இருந்து வந்தவர்களும், ராஜன் ஆதரவாளர்களாலும் தடைப்படும் போல் உள்ளது என்று கூறினார்கள்.18/19 /07/1986 இரு திகதிகளிலும் மாநாட்டுக்கு வந்திருந்த முகாம் தோழர்களால் கையொப்பம் இடப்பட்டு மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கும், கழக செயற்குழு விக்கும் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதன்பின்பு 21/07/1986 முகம் தோழர்களால் 5 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு முழு அதிகாரமும் கொடுத்து, கழக செயற்குழு, மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, ராஜன் குழுவினரையும் மற்றும் தளத்திலிருந்து வந்தவர்களையும் சந்தித்து கலந்துரையாடி இந்த மாநாட்டை முகாமில் இருக்கும் தோழர்களே நடத்தப் போகிறோம் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இயக்கத்தை திரும்ப நல்லபடி பழைய குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு நல்ல முறையில் இயங்க வும், இங்கு இருக்கு தோழர்களைஇலங்கைக்கு அனுப்பவும் உதவி செய்யும்படி கேட்கவும் தோழர்கள் முடிவு எடுத்து எங்களை அனுப்பினார்கள். தோழர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பேர்.

வெற்றிச்செல்வன்

காந்தன்

வசந்த்

சுகுணன்

பாபு

நாங்கள் பிற்பகலில் முதலில் செயலதிபர் உமா மகேஸ்வரனைசந்தித்த போது, அவரும் அவருடன் கூட இருந்தவர்களும் எங்கள் கோரிக்கைக்கு உடன்பட்டார்கள். முகாமில்இருக்கும் தோழர்கள் பாதுகாப்புப் கொடுப்பதாகவும் முகாமில் வைத்து அனைவரும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கை. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்பு நாங்கள் தோழர் ராஜனே சந்திக்க அவர் இருந்த வீட்டுக்குப் போனபோது, அங்கிருந்த தளத்தில் இருந்து வந்துள்ள தள அரசியல் செயலாளர் ஈஸ்வரன் எங்களைக் கண்டவுடன் தலைமறைவாகிவிட்டார். தோழர் ராஜனோடு நாங்கள் எங்கள் கோரிக்கையை வைத்து பேசிக்கொண்டிருக்கும்போது, ராஜனை எங்களுடன் பேச விடாமல் அவருடன் இருந்தவர்கள் அதிகமாக சத்தம் போட்டு எங்களோடு பேச விடாமல் செய்து விட்டார்கள். அப்படியிருந்தும் ராஜன் கழக மத்திய குழுவைச் சேர்ந்த சீசர் போன்றவர்கள் வந்தால் தானும் வருவதாக கூறி னார்.நாங்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சீசரை சந்திக்கப் போனபோது ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சீசர், பொன்னுத்துரை, செல்வராஜா, சுந்தரலிங்கம் போன்றவர்கள் ரகசியமாக இயக்கத்துக்கு கடிதம் கொடுத்துவிட்டு இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்பதை அறிந்தோம். தளத்தில் இருந்து வந்தவர்களை சந்திக்கப் போனபோது அவர்கள் எல்லோரும் தலைமறைவாகி விட்டார்கள்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நாங்கள் உடனடியாக முகாம் திரும்பி எல்லா தோழர்களுக்கும் நிலைமைகளை விளக்கினோம். பின்பு உடனடியாக திரும்பி ஐந்து பேரும் ஒரத்தநாடு திரும்பி தோழர் ராஜனை சந்திக்க முயன்றோம் முடியவில்லை. இரவு தோழர் வசந்த மட்டும் முகாம் போய் தோழர்களுக்கு நிலைமைகளை விளக்கி, குறிப்பிட்ட முகாம்களில் இருந்து வந்த தோழர்கள் சிலரை மட்டும் அவரவர் முகாம்களில் போய்மாநாட்டில் கலந்து கொள்ளாத மற்ற தோழர்களுக்கும் உண்மை நிலையை விளக்கச் சொல்லி அனுப்பினார்.

21/07/1986 இல் பொறுமை இழந்த மாநாட்டு தோழர்களில் அரைவாசிப் பேர் ஒரத்தநாடு அலுவலகம் வந்து தகராறு செய்ய தொடங்கிவிட்டார்கள். உடனடியாகஎஞ்சியிருந்த மத்திய குழு உறுப்பினர்களும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களும் சமாதானம் செய்ய, தோழர்களும் புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு அறிவித்து மாநாட்டை நடத்தும் முழு பொறுப்பும் அந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழு வுக்கு கொடுத்து,கழகத்தின் சகல நடவடிக்கைகளும் அந்த குழுவிற்கு பொறுப்பு கொடுத்து நடத்தும்படி கேட்டார்கள். செயலதிபர் உமா மகேஸ்வரனும் இதனை ஏற்றுக்கொண்டார்.

21/06/1986இல் தோழர் ராஜனும் ஈஸ்வரனும் கையொப்பமிட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கொடுத்த அறிக்கை 22/06/1986 காலையில் பத்திரிகையில் வந்திருந்தது. அதில் கழகமத்திய குழு உறுப்பினர்கள் 8 பேர் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மேல் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றி வெளியேறி விட்டதாகவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இரண்டாக உடைந்து விட்டதாகவும் பத்திரிகையில் வந்த செய்தி இருந்தது. இந்த செய்தி முகாமில் இருந்த தோழர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.

தொடரும்

Bild könnte enthalten: 1 Person, steht und Nahaufnahme

பகுதி 44

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

43 பதிவிலிருந்து எமது பின் தள மாநாட்டைப் பற்றி எழுதத் தொடங்கியுள்ளேன். என்னிடம் பின்தள மாநாட்டு அறிக்கை முழுமையாக உள்ளதால் அதைப் பார்த்து சில புள்ளி விபரங்களை எழுதினேன். அதை வைத்து நான் எழுதினால் எனக்கும் விளங்காது, இயக்கத்தில் இல்லாத நண்பர்களுக்கும் விளங்காது. முகாம்களிலும், முகாம் பொறுப்புகளிலும இருந்ததோழர்களுக்கு அந்த விபரங்கள் தோழர்களின் பெயர்கள் முழுமையாக விளங்கும். நான் எமது இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தாலும் முகாம் பற்றிய அறிவு, முகாம் பற்றிய வாழ்க்கை, முகாம் பொறுப்பாளர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் பதிவு போடும் போது தோழர்களின் பொறுப்புகள் பதவிகள் நாம் பற்றிய விபரங்கள் யாரும் கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாது அதனால் என்னை மன்னிக்கவும். அதுமட்டுமல்ல இலங்கையில் தளத்தில் அமைப்பு பற்றிய விபரங்கள் பொறுப்பாளர்கள் பற்றிய விபரங்கள் இதுவும் எனக்கு தெரியாது. டெல்லியில் எனக்குத் தேவையான பிரச்சாரங்களுக்கு உதவும் செய்திகள் மட்டுமே தலைமை கழகத்தில் இருந்து வரும். அதைவிட எமது இயக்கத்தின் நல்லது கெட்டது பற்றிய ரகசிய செய்திகள் கழக சென்னை நிர்வாகிகள் மட்டத்தில் நாங்கள் பேசிக் கொள்வோம்.

யாரும் பின்தள மாநாடு பற்றிய விபரங்கள் தீர்மானங்கள் அறிய விரும்பினால் நான் அதை போட்டோ வடிவில் போட்டு விடுகிறேன்.

இனி நான் மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி எனது நேரடி அனுபவத்தை எழுதுகிறேன்.

19/07/1986 நடக்கவிருந்த பின் தள மாநாட்டுக்கு டெல்லி கிளையின் சார்பாக நான் முதன்முறையாக பயிற்சி முகாம் இருந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தேன். டெல்லி கிளையின் சார்பாக சென்னையில் இருந்த பரதனும் அழைக்கப்பட்டிருந்தார். ஒரத்தநாட்டில் மொட்டைமாடி என்றழைக்கப்படும் எமது அலுவலகத்தில் வந்திருந்தேன். அங்கு எழுத்து வேலைகளில் பரபரப்பாக இருந்த மாதவன் அண்ணா ஆனந்தி அண்ணா போன்றவர்களுக்கு மிகவும் சந்தோஷம். குளித்துவிட்டு வந்த பின்பு மாதவன் அண்ணா சாப்பிட அழைத்து போனார். சின்ன சின்ன கடைகள். நான் நினைக்கிறேன் ஒரு ரூபாய்க்கு கிட்டத்தட்ட சின்ன சின்ன10 இட்டலிக்கு மேல். தேனீர் அம்பது காசு என்று நினைக்கிறேன்.

எனக்கும் அவர்கள் எழுத்து வேலைகள், மற்றும் அவர்கள் செய்த வேலைகளில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். அங்கு முகாம்களில் இருந்து வந்து போகும் தோழர்களின் காரசாரமான பேச்சுசத்தங்கள் தான் பயங்கரமாக கேட்டது. செயலதிபர்உமா மகேஸ்வரன் உட்பட முன்னணி தோழர்கள் கூடிக்கூடி பேசுவதும் போவதும் வருவதுமாக பிஸியாக இருந்தார்கள். முன்னணி தோழர்களையும் லெபனான் பயிற்சிக்கு போய் வந்த தோழர்களையும் மட்டும் தான் எனக்கு தெரியும். முகாமில் இருந்து வந்த தோழர்களுக்கு என்னை தெரியாது எனக்கும் அவர்களை தெரியாது. அவர்கள் முன்னணி தோழர்களை பார்த்து முறைத்த மாதிரியே என்னையும் கோபமாகப் பார்த்தார்கள். மாதவன் அண்ணா என்னை தனியாக வெளியில் போக வேண்டாம் என்று எச்சரித்தார்.

தளத்தில் இருந்து வந்த தோழர்கள் யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அதில் விவசாய அணி தலைவராக செயலாளராக வந்திருந்த சுதுமலை சேர்ந்த பரிபூரண ஆனந்தன் என்னோடு ஒன்றாக படித்தவர். சுதுமலையில் வீடுகளும் அருகருகில். அவர் மட்டும் என் அருகில் வந்து என்னை பற்றி விசாரித்து எல்லாம் கேட்டுவிட்டு,நீங்கள் எல்லாம் சேர்ந்து பயிற்சிக்கு வந்த நூற்றுக்கணக்கான தோழர்களே கொலை செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா,மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். நான் முதல் முறையாக இப்போதுதான் முகாம் பக்கம் வருகிறேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியதை அவர் ஏற்கவில்லை. ஆனாலும் நட்புடன் பேசி விடைபெற்றார். அவரின் இயக்க பெயர் தெரியவில்லை, மறந்துவிட்டேன்.

நான் எமக்கு பல உதவிகள் செய்த உரத்த நாட்டைச்சேர்ந்த இளவழகன், ராமசாமி போன்றவர்களை சந்திக்க விரும்பினேன். மாதவன் அண்ணா தடுத்துவிட்டார். இப்போ அவர்கள் ராஜன் தோழருக்கு முழு உதவியும் செய்கிறார்கள். அங்கு போனால் இங்கு பிரச்சனை வரும் என்று கூறி தடுத்துவிட்டார். ஒரு மூன்று ஆண்டுகளில் எவ்வளவு மாற்றம். தளத்தில் இருந்து வந்தவர்கள் இங்கு மாநாடு நடப்பதை விரும்பவில்லை. அதேநேரம் தளஅரசியல் செயலாளர் ராஜனோடு நின்றார். அங்கு நான் கேள்விப்பட்டது தளத்தின் அரசியல் பொறுப்பாளர் என்ற பெரிய பதவியை வைத்திருந்த ஈஸ்வரன் இங்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் , ராஜனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சி செய்யாமல் சண்டையை பெரிதாக்கி, தமிழ்நாட்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சிதறச் போகச் செய்து, தளத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவராக முயற்சி செய்வதாக எல்லோரும் பேசிக் கொள்ளப்பட்டது. முகாமில் இருந்த தோழர்களுக்கும் ஈஸ்வரன் மேல் கடும் கோபம் இருந்தது.

செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மிக மிக நெருக்கமாக இருந்த பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான செந்தில் பாபுஜி போன்றவர்கள் தள மாநாட்டுக்கு போய் வந்தபின், குற்றச்சாட்டுகளை செயலதிபர் உமா மகேஸ்வரன் கந்தசாமி மேல் சுமத்திவிட்டு மத்தியகுழு உறுப்பினர் என்ற கோதாவில் ராஜனுக்கு ஆதரவளித்தார்கள்.. அன்றும் முகாம்களில் இருந்த பல தோழர்கள் செந்தில் பாபுஜி எதிராக இருந்த தோழர்கள் ராஜனே ஆதரிக்க தயங்கினார்கள். செந்தில் பாபு ஜி இல்லாவிட்டால் பெருமளவு தோழர்கள் ராஜனை ஆதரித்து இருந்திருப்பார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் முகாம்தோழர்கள் எல்லாம் கிட்டத்தட்ட 100 பேர் வரை இருக்கும் ஒரு முகாமில் இருந்தார்கள். ஓரத நாட்டில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இரவில் பரபரப்பாக இருக்கும் மாணிக்கம் தாசன் ஆயுதங்களுடன் சில தோழர்களுடன் பரபரப்பாக வாகனத்தில் திரிவர். கந்தசாமி, PLO பவன் போன்றவர்கள் ஒரு பக்கம் பாதுகாப்பு கொடுப்பார்கள். காரணம் ராஜன் எங்களை ஆயுதங்களுடன் தாக்க வருவதாகவும், பல முகாம்களை தாக்க ராஜன் ஆதரவாளர்கள் போய் வருவதாகவும் பலவித வதந்திகள் அப்போது உலாவின. எதையும் நம்ப முடியாது நம்பாமலும் இருக்க முடியாது.

PLO பவன் தனது தொடர்பில் இருந்த TELO இயக்க முக்கிய தோழர்களிடம் இருந்து சில புதிய ஆயுதங்களை தற்காலிகமாக வாங்கிக்கொண்டு வந்திருந்தார். புதிய ஆயுதங்களை பார்த்த தோழர்களுக்கு பெருந்தொகையான ஆயுதங்கள் செயலதிபர் உமா மகேஸ்வரன் ஏற்பாடு செய்து விட்டதாகவும் முதல் பகுதி வந்துவிட்டதாகவும் கதைகள் பரவத் தொடங்கின. இப்படியான கதைகள் எமது பக்கத்தில் இருந்து பரப்பப்பட்டன.

இதேநேரம் கண்ணன், வாசுதேவா, செயலதிபர் உமா மகேஸ்வரன் என்னை அழைத்து நாளை காலை மாநாட்டுக்கு தெரிவுசெய்யப்பட்ட தோழர்கள் உள்ள முகாம் போய் என்னை தங்க சொன்னார்கள். அங்கு தோழர்களிடம் எமக்கு சாதகமான சில செய்திகளை கூறச் சொன்னார்கள். அதேநேரம் முகாமில் இருந்த தோழர்களுக்கு எமது பக்க நம்பிக்கையான சில தோழர்களுக்கு என்னைப் பற்றியும் சில செய்திகளை சொல்லி அனுப்பியிருந்தார்கள், அதாவது எமது இயக்கத்துக்கு இந்திய அரசாங்கத்தோடு பயிற்சி மற்றும் ஆயுதம் வாங்குவதற்கு இவர்தான் தொடர்பில் உள்ளவர் என்றும் வதந்தி பரப்பப்பட்டது.

அடுத்தநாள் நான் மாநாட்டில் பங்கு கொள்ளும் தோழர்கள் இருந்த முகாம் புறப்பட்டேன். மாதவன் அண்ணா ஆனந்தி அண்ணா போன்றவர்கள் பல எச்சரிக்கைகள் செய்து அனுப்பினார்கள்.

தொடரும்.

Keine Fotobeschreibung verfügbar.

பகுதி 43

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

18/10/1980 ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தனது முதல் தள மாநாட்டை1986 பெப்ரவரி மாதம் 19 திகதி முதல் 24 வரை இலங்கையில் நடைபெற்றது. இதனடிப்படையில் பின் தளத்தில் ஒரு மாநாடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாடு சம்பந்தப்பட்ட விபரங்கள் டெல்லி கிளைக்கும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எமது தளம் மாநாட்டுக்கு முன்பு தமிழகத்தின் குரல் கலையகத்தில் இருந்து வெளியேறிய தோழர்கள் எழுதிக் கொள்வது என்ற ஒரு கடிதம் டெல்லிக்கு எனக்கு வந்தது. அதில் அவர்கள் எமது வெளியேற்றம் அராஜகத்துக்கு எதிரானதே தவிர விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதில் எமது கழகத்தில் நடக்கும் அடக்கு முறைகளை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். ஸ்ரீதரன், வினோத் சிவா,அன்டன், எரிக், ரமணி, ஜோசப்,, கோபிநாத் ஆகிய எட்டுபேர் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். இயக்க பிரச்சினைகள் வெளியில் வரத் தொடங்கிவிட்டன., இயக்கத்தின் உண்மையான நிலை இப்பொழுது எனக்கும் அறியக்கூடியதாக இருந்தது.

பின்தள மாநாட்டு குழுவாக மார்ச் மாதம் 25,26,27 கழக மத்தியகுழு பின் வருபவர்களை தெரிவு செய்தது. தோழர் வாசுதேவா மாநாட்டு பொறுப்பாளர், தோழர் முகுந்தன், தோழர் சீசர் தோழர் மாதவன் தோழர் திவாகரன் தோழர் சுபாஷ் தோழர் ஆனந்தி தோழர் ராதா தொடர் காலித் தோழர் பொன்னுத்துரை

மாநாட்டில் கலந்துகொள்ள தகுதியுள்ளவர்கள்

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும்

1983 ஆண்டு இனக் கலவரத்திற்கு முன்பு இயக்கத்தில் இணைந்தவர்கள்

தமிழக சமூக விஞ்ஞான கல்லூரி 15

தமிழீழ மாணவர் பேரவை அஞ்சு பேர்

கலையகம் vote3

கலையகம் vote ஒலிபரப்பு3

தொலைத்தொடர்பு 3

பிரச்சார பிரிவு 6

கரை பொறுப்பு 6

அலுவலகம் 1,2,3,4, 5 பேர்

முகாம் பொறுப்பாளர்கள் 20 பேர்

முகாம் நிர்வாகம் 18 பேர்

பயிற்சி தோழர்கள் 75 பேர் வரை

டெல்லி கிளை இரண்டு பேர்

தேனி கண்டி பயிற்சி பெற்ற அனைவரும். 10% நியமனங்கள்

உதவி முகாம் புதுக்கோட்டை 3, ஒரத்தநாடு ஆறு, பாதுகாப்பு 3

15/4/1986 நடைபெறவிருந்த மாநாடு தளத்திலிருந்து வரவிருந்த தோழர்கள் வரத் தாமதமானதால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. அதோடு ஆதவன் செந்தில் பாவு சி இயக்க மத்திய குழுவில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்கள். அழியாத கோலம் ,கோம்ஸ் பின் தளத்தில் உளவுப் படையால் கொலை செய்யப்பட்டனர் என்ற வதந்தி தளத்தில் பரப்பப்பட்டு தளத்திலிருந்து ஈஸ்வரன் பின்தள மாநாட்டை ஒத்தி வைக்கும்படி தகவல் அனுப்பினார்.

தள உறுப்பினர்களுக்கு உண்மையை கூற பின்தள ஏற்பாட்டு குழு உறுப்பினர் பொன்னுத்துரை, பின்தள பாதுகாப்பு பொறுப்பாளர் பாபுவும் தளம் இலங்கை சென்று வந்தார்கள். தளத்தில் இருந்து வந்த செய்திகளை எடுத்து பின்தள மாநாடு சம்பந்தமான ஏற்பாடுகள் திரும்பத் தொடங்கின.30/03/1986இல் சுபாஷ் எடுத்த கணக்கின்படி முகாம்களில் மொத்தம் 1675 தோழர்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட தோழர்கள் விபரம்.

மருத முகாம் தோழர்கள் எண்ணிக்கை 76

பதுளை தோழர்கள் எண்ணிக்கை 64

கல்லாறு தோழர்கள் எண்ணிக்கை 136

புளியங்குளம் தோழர்கள் எண்ணிக்கை 151

மாங்குளம் தோழர்கள் எண்ணிக்கை 141

கல்முனை தோழர்கள் எண்ணிக்கை 151

குஞ்சுக்குளம் தோழர்கள் எண்ணிக்கை 64

முல்லை தோழர்கள் எண்ணிக்கை 115

ஜமாலியா தோழர்கள் எண்ணிக்கை 134

பண்டிவிரிச்சான் தோழர்கள் எண்ணிக்கை 44

பாலமோட்டை தோழர்கள் எண்ணிக்கை 125

கல்வி தோழர்கள் எண்ணிக்கை 72

குருவி மேடு தோழர்கள் எண்ணிக்கை 236

துலாவில் தோழர்கள் எண்ணிக்கை 106

கற்றன் தோழர்கள் எண்ணிக்கை 24

வடமுனை தோழர்கள் எண்ணிக்கை 13

மூதூர் (சுனில்)R D தோழர்கள் எண்ணிக்கை 23

மொத்தம் 1675

தள செயக்குழு, மகாநாட்டு ஒத்துழைப்பு குழு தோழர்கள் பின் தளம் வந்தார்கள். பின்னர் தள, பின் தள மத்திய குழு உறுப்பினர்கள் சென்னையில் 6/6/86 மூன்று நாட்கள் கூடி பின்தள மாநாடு சம்பந்தமான பல முடிவுகளை எடுத்தார்கள். தளத்தில் இருந்து வந்த முக்கியமானவர்கள் சுந்தரலிங்கம் ,ஈஸ்வரன் ,ரகு ,விசாகன் ,குமரன், கண்ணன் போன்றவர்கள்

7/6/1986 முதல் புதிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழு வாசுதேவன் ,முகுந்தன், சீசர், திவாகரன், ஆதவன், ராதா, சுபாஷ் பொன்னுத்துரை, காலித், ஆனந்தி, ஆனந்தன், செல்வராசா எல்லாளன்.13/06/1986 முதல் ஏற்பாட்டு குழு கூட்டம் நடைபெற்றது. அதற்கு முதல்காலித்11/06/1986 வெளியேறிவிட்டார்.

தள குழுவில் இருந்து வந்த தோழர்கள்7/06/86 to13/06/86 இடைப்பட்ட காலத்தில் முகாம்களில் போய் குழப்பம் செய்துவருவதாக T3S தோழர்களால் குற்றம்சாட்டப்பட்டனர்.

புதிதாக பின் தள மாநாடு 19/07/1986எல்லோரும் சேர்ந்து முடிவு செய்திருந்தார்கள்.

தளத்தில் இருந்து வந்திருந்த அனைத்து தோழர்களும் ஒத்துழைப்பு கொடுத்த மாதிரி நடித்து, 06/07/1986 நடந்த மாநாடு சம்பந்தமான கூட்டத்தில் ஈஸ்வரனும் தளத்தில் இருந்த தோழர்களும் வெளியேறிவிட்டார்கள்.

பின் தள மாநாடு சம்பந்தமான முழு விபரங்களும் இப்போது வவுனியாவில்இருக்கும் அன்புமணி தோழருக்கு மிக நன்றாக தெரியும் அவர் இது பற்றிய பதிவு போட்டால் மிக நல்லது. அவர்தான் தளத்தில் இருந்து வந்த தோழர்களை வரவேற்று பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார் என நினைக்கிறேன்.

பின்தள மாநாடு சம்பந்தமான அனைத்து அறிக்கைகள் குறிப்புகள் போன்ற அனைத்து விதமான எழுத்து வேலைகள் போன்றவற்றை மற்ற தோழர்களின் உதவியுடன் சிறப்பாக செய்து வந்தவர் நிர்வாக பொறுப்பாளர் தோழர் மாதவன் அண்ணா.

தொடரும்.


பகுதி 42

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

கடந்த பதிவில் நான் சில தவறான செய்திகளை அதுவும் கேள்விப்பட்ட செய்திகளை போட்டுள்ளதாக நண்பர்கள் அன்புடன் சுட்டிக்காட்டினார்கள். இனிமேல் அப்படி கேள்விப்பட்ட செய்திகளை எழுத வேண்டாம் என்றும் கூறினார்கள். சரியா பிழையா என்று செய்திகளை பார்ப்பதைவிட அன்று எனக்கு டெல்லியில் பிரச்சாரத்துக்காக சொல்லப்பட்ட செய்திகள் தான் அவை. எனக்கு நினைவில் இருக்கும் அன்று சொல்லப்பட்ட செய்திகள் இன்று தவறாக இருந்தாலும் அன்று அவைதான் உண்மை என்று சொல்லப்பட்டது என்பது உண்மை. இன்றுவரை எமது தள ராணுவ தளபதி சின்ன மென்டிஸ் என்ற விஜியபாலன் பிடிக்கப்பட்ட செய்திகள் கொல்லப்பட்ட செய்திகள் உண்மையான முழுமையான செய்திகள் யாரும் அறியவில்லை.பலரும் தங்களுக்கு கேள்விப்பட்டசெய்திகளை தான் உண்மையான செய்திகள் என்ன பதிவு போடுகிறார்கள். அதேபோல் எமது இயக்க மிக மூத்த போராளி நிரஞ்சன என்கிற சிவனேஸ்வரன் , எமது கழக அரசியல் துறைச் செயலாளர் சந்ததியார் போன்றவர்களை எமது செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு ம் ஏற்பட்ட எனக்கு தெரிந்த மட்டிலும் தனிப்பட்ட கோபதாபங்கள் ஆல் எமது தோழர்களே கடத்திக் கொலை செய்தார்கள். அந்தக் கொலைகளை கூட இன்றுவரை எங்களால் உண்மையை அறிய முடியாமல் இருக்கிறது. இதைப் பற்றி போன பதிவில் கூட வந்த கருத்துக்கள் பல மாறுபட்ட கருத்துக்கள்தான்தான் இருக்கின்றன. இதில் ஈடுபட்ட எமது தோழர்களை அறிந்த பலர் இந்த முகநூலிலும் இருக்கிறார்கள் யாரும் உண்மையை பதிவிட ஏன் முயற்சி செய்யவில்லை என்று தெரியவில்லை. இந்தப் பதிவுக்கு கூட சில தோழர்கள் எழுதுவார்கள் நிரஞ்சன் சந்ததியார் இயக்கத்துக்கு துரோகம் செய்தபடியால் கொலை செய்யப்பட்டார்கள் என, எழுதுவார்கள்.போன பதிவுக்கு ஒரு தோழர் தமிழர்களை அழிக்கும் பொறுப்பிலிருந்த இலங்கை மந்திரி அத்துலத்முதலி யுடன்1985 செயலதிபர் உமாமகேஸ்வரன் இயக்க மத்திய குழுவுக்கு தெரியாமல் ரகசியமாக ஏற்பட்ட தொடர்பு ஒரு ராஜதந்திர தொடர்பு என்று, கருத்து பதிவிட்டிருந்தார்.தயவுசெய்து அந்த ராஜதந்திர தொடர்பை பற்றி அறிந்தவர்கள் விபரம் கூறினால் மிக நன்றாக இருக்கும்

1986 ஆண்டு நமது இயக்கத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும்.எமது இயக்கம் இரண்டாம் தடவையாக மிகப்பெரிய அளவில் உடைவு உடைந்தது. சென்னையிலிருந்து வரும் செய்திகள் மிகக் கவலையளிப்பதாக இருந்தது. நமது இயக்கத்தின் மிக முக்கிய மூத்த போராளி தலைவர்களில் ஒருவரான பரந்தன் ராஜன் செயலதிபர் உமாமகேஸ்வரன் இருவருக்கும் பலத்த கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இயக்க முக்கிய தோழர்களும் இரு பிரிவாக பிரிந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.நிலைமைகள் கவலை அளிப்பதாக இருந்தாலும் இயக்க அலுவலக பொறுப்புகளில் இருந்த நாங்கள் எங்கள் கடமைகளை செவ்வனே செய்து வந்தோம். இதன் பின்பு நடந்த பின் தள மகாநாடு அதில் எனது பங்களிப்பு பற்றியும் விரிவாக எழுத வேண்டியுள்ளதால், எனக்கு நினைவில் உள்ள சில டெல்லி நிகழ்வுகளை மாதங்கள் முன்பின் இருந்தாலும் பதிவு செய்கிறேன். சரியான கால நேரங்களை தெரிந்த தோழர்கள் பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

சென்னையிலிருந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் தொலைபேசி மூலம் தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் டெல்லியில் இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், அதற்குத் தேவையான உதவிகள் செய்யும்படியும் கூறினார். எனக்கு மிக ஆச்சரியம். முன்பு சந்திரகாசன் சி ஏ ஏஜென்ட் என்று எமது வெளியீடுகள் பிரச்சாரங்களில் கூறி வந்தோம். சுப்ரமணியன் சுவாமி சந்திரகாசன் நீ என் நெருங்கிய நண்பர்கள் அதை வைத்தும் இருவரும் சிஐஏ ஏஜென்ட் எனக் கூறினோம். சுப்பிரமணியம் சுவாமி மூலம் டெல்லி ஐஐடி டெல்லி பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் சந்திரகாசன் கருத்தரங்கங்கள் நடத்தியபோது நாங்கள் எமக்கு ஆதரவான நண்பர்களை கொண்டு சந்திரகாசன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று துண்டுப்பிரசுரங்கள் அடித்து வெளியிட்டோம். அது அவருக்கு பலத்த பின்னடைவை கொடுத்தது என்பது உண்மை.

சந்திரஹாசன் டெல்லி வந்து என்னை தொடர்பு கொண்டார். சென்னையிலிருந்து அவருடன் சில பேர் வந்திருந்தார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மகேஸ்வரி வேலாயுதம், மற்றும் சுழி புரத்தைச் சேர்ந்த இலங்கை கடற்படையில்

வேலை செய்த ஒருவர் அவர் என்னோடு தான் தங்கினார். அவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். டெல்லி போட் கிளப் ஏரியாவில் டென்ட் அடித்து சந்திரஹாசன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். நானும் எனது பங்குக்கு எனது டெல்லி தமிழ் நண்பர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை அழைத்து போய் உண்ணாவிரதத்தை களைகட்ட செய்தோம். என்னோடு இருந்த டெல்லி தமிழ் நண்பர்களுக்கு ஒரே சந்தேகம்.,சந்திரகாசன் னை சிஐஏ ஏஜென்ட் என்று பிரச்சரம் செய்துவிட்டு எப்படி அவருடன் கூட சேர்ந்து உதவி செய்கிறீர்கள்என்று. நான் எனது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்க வேண்டிய கேள்வியை, அவர்கள் என்னிடம் கேட்டார்கள். சந்திரகாசன் இருக்கும் உண்ணாவிரதம் இலங்கை தமிழர் பிரச்சினையை டெல்லியில் பத்திரிகையில் வாயிலாக பெரிதாக வந்தால் எமக்கு அது நல்லதுதானே.இதை ராஜதந்திர ரீதியில் அணுக வேண்டிய விஷயம் என்று நானும் கூறி சமாளித்தேன்.

சில தினங்கள் கழித்து செயலதிபர் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தார். இருவரும் உண்ணாவிரதம் இருந்த இடத்தை நோக்கி போய் உண்ணாவிரதம் இருந்த சந்திரா ஹாசனைசந்தித்தோம்.பல நிருபர்கள் வந்திருந்தார்கள் அவர்களிடம் செயலதிபர் உமாமகேஸ்வரணை சந்திரகாசன் அறிமுகப்படுத்தினார். பின்பு என்னை கூடாரத்திலிருந்து வெளியில் அனுப்பி விட்டு, இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். சந்திரகாசன் திரும்ப இரவு எட்டு மணி போல் வரச்சொன்னார். இரவு போனபோது ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் சுப்பிரமணிய சுவாமி வந்தார். எங்கள் இருவரையும் சந்திரகாசன் சுப்பிரமணியசாமிக்கு அறிமுகப்படுத்தினார். பின்பு நான் வெளியில் வந்து இருந்தேன். சுப்ரமணிய சுவாமி சந்திரகாசன் செயலதிபர் உமாமகேஸ்வரன் மிக நீண்ட நேரம் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியில் வந்த சுப்ரமணியசாமி தனது விசிட்டிங் கார்டை கொடுத்து விலாசம் தெரியுமா என்று கேட்டார் ஸ்கூட்டரில் விலாசம் பிடித்து வந்து விடுவேன் என்று கூறினேன்.

அந்த நாள் மாலை சுப்பிரமணியசாமி வீட்டுக்கு போனோம். செயலதிபர்உமாமகேஸ்வரன் இடம் நீண்ட நேரம் பேசிய சுப்ரமணிய சுவாமி, நானும் கூடவே தான் இருந்தேன். சுப்பிரமணிய சுவாமி ரஷ்ய ஆதரவு கம்யூனிஸ்ட் பேசுபவர்களை எக்காரணம் கொண்டும் பிடிக்காது என்றும், சீனா ஆதரவு கம்யூனிஸ்ட் பேசுபவர்களை தனக்கு பிடிக்கும் என்றும் அவர்களுக்குத்தான் வேண்டிய அளவு தான் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். அதோடு சந்திரகாசன் உமா மகேஸ்வரன் ரஷ்ய ஆதரவு பேசுவதிலிருந்து திருந்தி விட்டதாக தன்னிடம் கூறியதாகவும் கூறினார். என்ன உதவி வேண்டும் என்று கேட்டார். எமது செயல் அதிபரும் ஆயுதங்கள் பயிற்சிகள் கூடுதலாக இந்தியாவிடம் கேட்க இருப்பதாக கூறினார். அவரும் தானும் தனது தொடர்புகள் மூலம் எங்களுக்கு உதவி செய்வதாக கூறினார். ஆனால் கடைசி வரை அவர் மூலம் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

சுப்ரமணிய சுவாமியை நாங்கள் மூன்றுதரம் சந்தித்திருப்போம். ஒரு முறை சந்திக்கும் போகும்போது சைமன் என்று தோழர் இல்லாவிட்டால்திருஞானம் என்ற தோழர் இவர்களில் யார் என்று மறந்து விட்டேன். சுப்ரமணிய சுவாமி பிரபாகரன்படிப்பு சம்பந்தமான கேள்விகளை கேட்டார். பிரபாகரன் ஒரு பேட்டியில்கூறியிருந்தார், தான் சுபாஷ் சந்திர போஸ் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை விரும்பி படிப்பதாகவும், அதோடு கல்கியில் வெளிவந்த ராசு நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் என்னும் சுதந்திர போராட்ட நாவல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியிருந்தார் இதைப்பற்றி சுப்ரமணிய சுவாமி எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கேட்கும்போது, அதெல்லாம் பொய் பிரபாகரன் தங்களுடன் இருக்கும்போது அம்புலிமாமா புத்தகம் மற்றும் படங்கள் போட்ட சித்திர கதைகள் போன்றவற்றை தான் படிப்பார் என்றும், அதேநேரம் மூர்மர்கெட் போய் ஆயுதம் சம்பந்தப்பட்ட ஆங்கில புத்தகங்களை வாங்கி வந்து பாலசிங்கத்தின் துணையுடன் ஆயுதங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வார் எனக் கூறினார்.

செயலதிபர் உமாமகேஸ்வரன் இப்படிக் கூறியது எங்களுடன் வந்த தோழருக்கு பிடிக்கவில்லை. விடுதலை இயக்கத் தலைவரை பற்றி இப்படி குறிப்பிடக் கூடாது, அவர்களும் எங்களை பற்றி இப்படி பல பேரிடம் கூறி தெரிந்தால் எங்களுக்கு அவமானம் தானே என்று கூற, செயலதிபர் ஏற்றுக்கொண்டார். அதோடு செயலதிபர் உமா மகேஸ்வரன் விடுதலைப்புலிகளுக்கும் இஸ்ரேல் மொசாட் பயிற்சிபெற சுப்ரமணிய சுவாமி அவர்கள் தான் உதவியிருக்கிறார் என எங்களிடம் கூறினார்.சுப்ரமணிய சுவாமி அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்தான்1975 ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் கொண்டுவந்த எமர்ஜென்சியின் போது எப்படி தான் பிடிபடாமல் தப்பினார் என்றும் பல சுவாரஸ்யமானகதைகளை எங்களிடம் கூறினார்.

அண்ணா திமுக எம்பி தாய் பத்திரிகையின் ஆசிரியர் வலம்புரி ஜான் அவர்கள் எங்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். அவர் தான் எழுதிய நான் கழுதை ஆனால் என்ற புத்தகத்தை டெல்லியில் செயலதிபர் உமா மகேஸ்வரனை கொண்டு வெளியிட்டவர். டெல்லியில் அடிக்கடி தமிழ் அமைப்புகள் இலங்கை தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள். வலம்புரி ஜான் எம்பியும் கலந்து கொள்வர் அதோடு அவருக்கு வேண்டிய பம்பாய் வருதா பாய் எனப்படும் வரதராஜ முதலியார் அவர்களும் அடிக்கடி வந்து கலந்து கொள்வார். அவர் இலங்கைத் தமிழருக்கு பல விதங்களில் உதவி புரிந்தவர். என்னோடு டெல்லியில் இருந்தபோது பரதன் என்ற சாரங்கனும் வருதா பாய் கலந்துகொண்ட கூட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் வலம்புரி ஜான் தொலைபேசி மூலம் தன்னை வந்து நேரில் சந்திக்கச் சொன்னார். அவரை நேரில் போய் பார்த்தபோது, நீங்களெல்லாம் செய்வது சரி இல்லை என்று கூறினார். நான் பதட்டத்துடன் என்ன அண்ணாசொல்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் என்னிடம் கேப்டன் குமார் யார் என்று கேட்டார். எனக்கு உண்மையில் தெரியாது. தெரியாது என்று கூறிவிட்டேன். அவர் உங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் தான். முகுந்தன் அவரை பம்பாய்அனுப்பியுள்ளார். அங்கு அவர் வருதா பாய் அவர்களிடம் போய்ஹீரோயின் போதைமருந்து கடனுக்கு வாங்கி தரும்படி அவரிடம் கேட்டதாகவும் ,அவர் தான் தங்கக்கட்டி கடத்து வேன் ,,ஆயுதங்கள் கடத்து வேன், ஆட்களைக் கூட கடத்துவென் ஆனால் போதைப்பொருள் சமாச்சாரங்கள் கிட்ட போக மாட்டேன் அது பாவம் என்று கூறியுள்ளார்.வருதா பாய் செயலதிபர் உமா மகேஸ்வர விரதம் கூறும்படி வலம்புரி ஜான் எம் பீடம் கூறியுள்ளார். நானும் முகுந்தன் இடம் கூறுவதாக கூறி வந்தேன்.

உடனடியாக நான் இந்த விடயத்தை செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கூறியபோது, அவர் உடனடியாக அவன் பேயன் கிடக்கிறான்,. அவன் வாங்கி தராவிட்டால் எங்களால் வாங்க முடியாதா என்று கூறி, வாமதேவன் ஐ வர்தா பாயிடம் போக வேண்டாம் என்று தான் கூறுவதாகக் கூறினார். அப்போதுதான் கேப்டன் குமாரும் வாமதேவ னும் ஒருவர் என எனக்கு தெரிந்தது. வாமதேவன் பம்பாயில் இருப்பதை யாருக்கும் கூற வேண்டாம் எனக் கூறினார். பின்புதான் வாமதேவன் ஐப் பற்றி பல விடயங்கள் கேள்விப்பட்டேன். நிக்கிற வெட்டியா வங்கிக் கொள்ளையின் பின்பு வாமதேவன் குழுவினர் இந்தியா வந்தபோது வாமதேவனும், சுடி புரத்தைச் சேர்ந்த தற்போது லண்டனில் இருக்கும் சபாநாதன் குமார் கொள்ளை அடித்த தங்க நகைகளில் கொஞ்சத்தை இவர்கள் அதிலிருந்து கொள்ளையடித்த விடயத்தை, கந்தசாமியின் உளவுப் படையைச் சேர்ந்த ஒருவர் மோப்பம் பிடித்து கந்தசாமி களிடம் கூறியுள்ளார். கந்தசாமி, வாமதேவன் ஐயும் சபாநாதன் குமாரையும் கைது செய்து துப்பாக்கிமுனையில் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்றி விட்டு, அவர்களை சுட்டுக் கொல்ல முயற்சித்த போது, செயலதிபர் உமாமகேஸ்வரன் நேரடியாக தலையிட்டு வாம தேவனே காப்பாற்றியுள்ளார். கந்தசாமி செயலதிபர் இடம் எங்கள் தோழர்கள் உயிரை பணையம் வைத்து கொள்ளையடித்த தங்க நகைகளை இவர்கள் அதில்கொஞ்சம் கொள்ளையடித்ததை தன்னால் மன்னிக்க முடியாது நீங்கள் சொல்வதற்காக விடுகிறேன் என்று கூறியுள்ளார் அதோடு சபாநாதன் ஐ பார்த்து சுழிபுர மானத்தை கெடுத்து விட்டாய் எனது முகத்திலேயே முழிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பின்பு செயலதிபர் உமாமகேஸ்வரன் வாமதேவனை ரகசியமாக பம்பாய் அனுப்பி தனது போதை மருந்து விற்பனைக்கு பொறுப்பாக நியமித்து உள்ளார். சில விபரங்களை அரசல் புரசலாக கேள்விப்பட்டு இருந்தாலும், 1989 ஆண்டு எங்களுடன் இருந்த சபாநாதன் குமார் எனக்கும் ஆட்சி ராஜனுக்கும் முழு விபரங்களையும் கூறினார். அதனால் தான் அவர் கந்தசாமிக்கு பயந்து 1987 இலங்கைக்கு போகாமல்1988 என்னோடு சென்னை அலுவலகத்தில் தங்கியிருந்துஆஸ்பத்திரியில் இருந்த தோழர்களை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி எங்களுடன் இருந்தார்.

1986 மார்ச் மாத கடைசியில் இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஷ் பண்டாரி ஓய்வுபெற்றார். பின்பு ரொமேஷ் பண்டாரி டெல்லியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். லண்டனுக்கு திரும்ப போக வந்த சித்தார்த்தன் லண்டன் போகும் முன்பு ரொமேஷ் பண்டாரி யை சந்திக்க விரும்பி, கவர்னர் மாளிகைக்கு போனோம். எங்களை உள்ளே விடவில்லை. கவர்னர் அப்போது வெளியில் போகப் போவதாகவும் பின்பு அப்பாயின்மென்ட் பெற்று வரும் படியும் கூறினார்கள். நாங்கள் இருந்த இடத்துக்கும் கவர்னர்மாளிகைக்கும் வெகுதூரம். நாங்கள் தயங்கி தயங்கி வெளியில் நின்றோம். கவர்னரின் கார் பாதுகாப்பு கார்கள் வெளியில் வந்தன. கவர்னரின் காரை பார்த்து கை அசைதோம், சித்தார்த் தன்னையும் என்னையும் பார்த்த கவர்னர் உடனடியாக காரை நிப்பாட்டி, அந்த அவசரத்திலும் எங்களை திரும்ப உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒரு பத்து நிமிடம் கதைத்தார். காரணம் திம்பு பேச்சுவார்த்தையில் சித்தார்த்தன் உண்மையைக் கூறி, உண்மை நிலைமை கூறியதே தான் மறக்க முடியாது என்றார். சித்தார்த்தன் லண்டன் போய் திரும்ப வரும் போது தன்னை கட்டாயம் சந்திக்கும்படி கூறினார்.

புதிய வெளியுறவுச் செயலர் ஏபி வெங்கடேஸ்வரன் என்ற தமிழர் வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தொடரும்.· 

Bild könnte enthalten: 1 Person, im Freien


பகுதி 41 B

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகதெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்

பதிவு 41 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தளராணுவ பொறுப்பாளர் விஜிய பாலன் என்ற மென்டிஸ் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டது பற்றியும் அவர் கைது செய்யப்பட முன் என்ன நடந்தது என்பது பற்றியும் பல விடை தெரியா கேள்விகள் மர்மமாகவே இருந்து வந்தன. இப்போது பல மர்ம முடிச்சுகள் அவிழ தொடங்கியுள்ளன. மெண்டிஸ்சோடு கடைசி நேரத்தில்தொடர்பில் இருந்த எங்கள் இயக்க லெபனானில்பயிற்சி பெற்று வந்தPLO ராஜீவ் கடைசிநேர நிகழ்வுகளை பதிவாக தந்துள் ளார். உண்மைகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு இன்னொரு முக்கிய தோழர் இதை எனக்கு அனுப்பியுள்ளார் இருவருக்கும் நன்றிகள் பல.

தோழர் வெற்றிச் செல்வனுக்கு

நீங்கள் எழுதுகின்ற தொடரை நான் பார்த்தேன் குறிப்பாக 41வது பகுதியிலே மெண்டிஸ் பற்றி எழுதியிருந்தீர்கள் .அவர் பற்றிய கதைகளை பலர் பலவாறு கூறி கொண்டு இருக்கின்றார்கள் அல்லது எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் கடைசி நிமிடம் வரை நான் அவர் பக்கத்திலேயே நின்றவன் என்ற காரணத்தினால் இதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன் நேரடியாக முகநூலில் எழுத விரும்பாத காரணத்தினால் உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்கள் முடிந்தால் பதிவு செய்யுங்கள். நான் உங்களை PLO போகின்ற போது பார்த்திருப்பேன் என்று நம்புகின்றேன், ஆனால் நினைவில் இல்லை. உங்கள் செயட்பாடுகள் பற்றி நிறையவே கேள்ள்விப்பட்டுள்ளேன் .

அன்புடன்

ரஜீவ்

1986 கடைசி என்றுதான் நினைக்கின்றேன் இப்போது திகதிகள் மாதங்களெல்லாம் மறந்துவிட்ட விடயமாக இருக்கின்றது. PLOT யில் பல பிரச்சினைகள் தலை தூக்கி இருந்த காலம். அந்த நிலையில் தான் நான் தளத்திற்கு சென்று இருந்தேன். நான் சென்று சிறிது நாட்களிலேயே தள மகாநாடு நடைபெற்றது. களகத்தை எப்படியாவது திருத்த வேண்டும் என்ற நோக்கோடு அந்த மகாநாடு நடத்தப் பட்டது . அப்போது தளத்தின் இராணுவப் பொறுப்பாளராக தோழர் மெண்டிஸ் இருந்தார். மகாநாட்டில் தளத்தின் இராணுவப் பொறுப்பாளராக என்னை நியமித்தார்கள் ரஜீவை தள இராணுவப் பொறுப்பாளராகபோடுவதட்கு தானும் சம்மதிக்கிறேன் என்று மெண்டிஸ்சும் கூறினார்.அதேபோல் செல்வராஜா, சுனில், சுந்தரலிங்கம் போன்றவர்களும் பல பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு ஆரோக்கியமாக செயல்படலாம் என்ற எண்ணத்தோடு நாங்கள் ஆரம்பித்தோம். ஆனால் தள மகாநாடு எடுத்த முடிவின்படி பின்தள மகாநாடு நடக்க வேண்டும், அதற்காக சில காலத்தின் பின் பலர் பின்தளம் வந்ததும் பின்பு அங்கே பல குழப்பங்கள் ஏற்பட்டதும் எல்லோருமே அறிந்த விடயம். அதனால் கழகத்தில் இருந்து நாங்கள் விலகுவதாக விலகிக் கொண்டோம்.

என்னோடு அரசியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் நட்பு ரீதியாக நன்றாக பழகுகின்ற ஒருவர் மெண்டிஸ்.நான் அவரிடம் நான் விலகுவதாக அறிவித்து விட்டு வந்தவுடன் அவர் மீண்டும் தளராணுவ பொறுப்பை பார்க்க தொடங்கினார். இடையிடையே அவர் என்னை வந்து சந்திப்பார் சில விடயங்களைப் பற்றி என்னோடு பேசுவார் ஒருநாள் அதிகாலை என்னுடைய வீட்டிற்கு வந்தார் ஒரு சிறிய பிரச்சினை ஒன்று ஒருமுறை வர முடியுமா என்று கேட்டார், நீங்கள் போங்கள் நான் வருகிறேன் என்று கூறிவிட்டு சில நிமிட நேரங்களில் உடுவிலுக்கு சென்றேன், ஆறு கழகத் தோழர்கள் அவரோடு எந்த நேரமும் இருப்பார்கள் அவர்களும் அங்கு இருந்தார்கள். சிவராம் (தராக்கி ) அவரும் நின்றார்.

மெண்டிஸ் என்னிடம் கூறினார் புளட்டை புலிகள் தடை செய்துவிட்டார்கள் என்று கூறுகின்றார்கள் உண்மை பொய் சரியாக தெரியவில்லை. இரண்டு முகாம்களுக்கு சென்று முகாமை மூடும்படி கூறியிருக்கின்றார்கள் இதை உறுதி செய்ய வேண்டும் அதுதான் உங்களை அழைத்தேன் என்று கூறினார். நான் தளத்திற்கு சென்று தள ராணுவ பொறுப்பாளராக இருந்தபோது அனைத்துப் போராளிக் குழுக்களுடனும் நன்றாக பழகிக் கொண்டு இருந்தேன். அதேபோல் புலிகளின் யாழ் பொறுப்பாளர் கிட்டு, அரசியல் பொறுப்பாளர் திலீபன் போன்றவர்கள் நன்றாக என்னோடு பழகுவார்கள், மற்ற இயக்க இரண்டாவது மூன்றாவது தலைமை பதவியிலே உள்ள சிலரும் பழகுவார்கள். நான்மெண்டிஸ்சிடம் சொன்னேன் சரி நான் போய் கதைத்து கொண்டு வருகின்றேன் ஆனால் நான் தனிய போக மாட்டேன் என்னோடு யாராவது ஒருவர் வரவேண்டும் என்று கூறினேன் அப்போது சிவராம் நான் வருகின்றேன் என்று கூற மெண்டிஸ்சும் சரி என்றார். மோட்டார் சைக்கிளில் போகின்ற போது சிவராம் பின்னால் இருந்து "தோழர் நாம திரும்பி வருவம் எண்டு நினைக்கிறீரா" என்று கேடடார். நான் சிரித்துக்கொண்டு சரி திரும்பி வராவிட்டால் என்ன ரெண்டு பேருக்கும் பிள்ளையா குட்டியா என்று கேட்டு விட்டு நாங்கள் போனோம்.

அங்கே கிட்டுவின் முகாமுக்கு போனபோது கிட்டு முன்புபோலவே மரியாதையாக எங்களை அழைத்தார் அழைத்து எங்களை உட்கார வைத்து பேசினார். அப்போது நான் இந்த விஷயத்தை கூறினேன் , இரண்டு புளட் முகாம்களுக்கு உங்கள் போராளிகள் சென்று முகாமை மூடும்படி சொல்லியிருக்கிறார்களாம், இது உண்மையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றுமெண்டிஸ்என்னிடம் கேட்டுக் கொண்டார் அதனால்தான் நான் வந்திருக்கின்றேன் என்று கூறினேன். அவர் சாடையாக இழுத்து இழுத்து சொன்னார் மேலிடத்து உத்தரவு தோழர் என்று கூறினார். அவர் அப்படிக் கூறிய உடன் எங்களுக்கு வடிவாக விளங்கி விட்டது, அவர்கள் புளட்டையும் தடை செய்யும் அலுவலில் இறங்கிவிடடார்கள் என்று. அதாவது அவர்கள் நேரடியாக தாங்கள்தான் செய்கிறோம் என்று ஒருநாளும் கூறமாட்டார்கள். சின்னவர்களிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் அவர்களுடைய பாசை அது. அந்த பாஷை தான் மேலிடத்து உத்தரவு தோழர் என்று குறிப்பிட்டார். அப்போ நான் அவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தேன் , எங்களுடைய புளட் அமைப்பிலே கிழக்கு மாகாண இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள் . அவர்கள் பாதிக்கப்படக்கூடாது அவர்களை நாங்கள் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். ( கிட்டுவின் படையினர் டெலோவின் கிழக்கு மாகாண இளைஞர்களை உயிரோடு ரயர் நெருப்பிலே தின்னவேலி சந்தியில் போட்டு எரித்த போது நான் கிட்டுவிடம் கேட்டேன் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அதட்கு அவர் சொன்ன மறுமொழி, பெடியங்கள் பயப்படுத்த அப்படி செய்துபோட்டாங்கள் இனி அப்படி செய்யமாட்ட்ங்கள் என்று.) அதற்கு அவர் தாராளமாக செய்யுங்கள் அனுப்பி வையுங்கள் என்று கூறி எவ்வளவு நாட்கள் தேவை என்று கேட்டார். நான் ஒருவாரம் எங்களுக்கு தாருங்கள் என்று கேட்க, ஒரு வாரம் எடுத்துக்கொள்ளுங்கள் கிழக்கு மாகாண இளைஞர்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அனுப்புங்கள் ஆனால் இன்னும் ஒரு முக்கியமான கோரிக்கை நான் வைக்கின்றேன் அவர்களோடு சேர்ந்துமெண்டிஸ்சோடு நிற்கின்ற இளைஞர்களும் எங்காவது போக வேண்டும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் தங்களிடம் கொடுக்கப்ப பட வேண்டும் என்றும் கூறினார்.இளைஞர்களும் எங்காவது போக வேண்டும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் தங்களிடம் கொடுக்கப்பட வேண்டும் அவர்களை நாங்கள் எதுவுமே செய்ய மாட்டோம் என்று கூறினார். இந்த காலக்கெடு முடிகின்ற போது இவைகள் எல்லாம் நடக்க வேண்டும் என்று கூறினார். நானும் அதை மெண்டிஸ்சிடம் கூறுகின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் .

நான் இதைமெண்டிஸ்சிடம் கூறினேன் . மெண்டிஸ்ஆயுதங்கள் ஒப்படைப்பது பற்றியும் அவர்கள் இங்கிருந்து செல்வது பற்றியும் அவர்களிடம் நான் பேசி உங்களுக்கு குறிப்பிடுகின்றேன் ஆனால் கிழக்கு மாகாண தோழர்களை அனுப்பும் வேலையை செய்வதட்கு உதவுங்கள் என்றார். இப்போது நான் சிலரின் பெயரை மறந்து விட்டேன், நான் நினைக்கின்றேன் PLO ஞானி அவர்கள் மற்றது யாழ் அரசியல் பொறுப்பாளர் ஜ பி இன்னும் சிலர் சில இடங்களில் பணங்களை சேகரித்து அனுப்பினோம். அவர்களில் சிலர் தாங்கள் இங்கேயே இருக்கப் போவதாக கூறி விட்டார்கள். கிழக்கு மாகாணம் போக விரும்பியவர்களை கிழக்கு மாகாணம் அனுப்பிவிட்டு சிலர் இந்தியாவுக்கு செல்ல விரும்பினார்கள் அவர்களையும் இந்தியாவுக்கு செல்வதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு அதையும் செய்து விட்டோம் . அந்த இளைஞர்களை அந்தந்த காலகட்டத்தில் அனுப்பி எங்களுடைய வேலைகளை நாம் நிறைவேற்றி கொண்டோம். எல்லோரையும் அனுப்பினோமா என்பது தெரியாது ஆனால் அவர்களில் எவரும் அப்போது கொல்லப் படவில்லை. பின்பு மெண்டிஸ்சிடம் கேட்டேன் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று, நான் எல்லாரையும் பின்னுக்கு அனுப்ப போகின்றேன் என்றார் மெண்டிஸ் சரி என்று நானும் சென்று விடடேன்.

பின்பு ஒரு நாள் ஒரு தோழர் வந்து சொன்னார் , தோழர்கள் எல்லோரும் போய்விட்டார்கள் மெண்டிஸ் நிற்கின்றார் என்று, நான் போய் பார்த்தபோது அங்கே மற்றவர்கள் அனைவரும் ஏழுபேர் என்று நினைக்கின்றேன் அவர்கள் அனைவரும் அனுப்பப்பட்டு விட்டார்கள். மெண்டிஸ் தனியாக நிற்க்கிறார், ஆயுதங்கள் எங்கே என்று கேட்டேன் ஆயுதங்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று அவர் கூறினார். எனக்கு இது ஒரு தவறான முடிவாக இருந்தது நான் கேட்டேன் சரி நீங்கள் அவர்களை அனுப்பினீர்கள் ஏன் நீங்கள் போகவில்லை ஒன்றில் ஆயுதங்களை கொடுத்து இருக்க வேண்டும் அல்லது நீங்களும் சேர்ந்து போயிருக்க வேண்டும் என்று கேட்டேன் மென்டிஸ் கூறிய மறுமொழி நான் அங்க போனாலும் எனக்கு மண்டையில போடுவினம் இங்க இருந்தாலும் எனக்கு மண்டையில் விழும், நான் நிற்கிறன் தோழர் என்று குறிப்பிட்டார். என்னோடு நன்றாக பழகியவர் மெண்டிஸ்.நான் சொன்னேன் நீங்கள் தவறான முடிவெடுத்து விட்டீர்கள் இதற்கு நான் இனி ஒன்றும் செய்ய ஏலாது இப்பொழுது நானும் தலைமறைவாக வேண்டிய நேரம் வந்துவிட்டது நீங்களும் கவனமாக இருங்கள் என்று கூறி விட்டு நான் அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன். சில நாட்களின் பின்பு செய்தி வந்தது மென்டிஸ் கைது செய்யப்பட்டு விட்டார் என்று அப்போது மிக கவலையாக இருந்தது. சிலர் மட்டும் பேசினோம் , என்ன நடக்கின்றது என்று தெரியாது, கிட்டுவிடமும் போக முடியாது. அது அப்படியே இருந்தபோது பின்பு ஒருநாள் மெண்டிஸ்சின் தமக்கையார் இடம் சேட்டும் மோதிரமும் கொடுத்தார்கள், மெண்டிஸ்இறந்துவிட்டார் என்பது மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்த இடைவெளியில் நான் எதுவித தொடர்பும் யாரோடும் வைக்க முடியவில்லை . நானே தலைமறைவாக இருக்க வேண்டி ஏற்பட்ட ஒரு நிலைமை. 13 தோழர்கள் என்று நினைக்கின்றேன்மெண்டிஸ் இறந்துவிட்டார் என்பதை என்பதை அறிந்துகொண்டு ஒன்றுகூடி அங்கு சென்றோம். அந்த செய்தி கேள்விப்பட்டவுடன் காண்டீபன் யாழ் ராணுவப் பொறுப்பாளராக இருந்தவர் கிட்டுவினுடைய முகாமுக்கு சென்று அவர்களை எல்லாம் ஏசி அப்படி எல்லாம் செய்தார் என்று கேள்விப்படடேன்.

இது தான் உண்மையிலேயே மெண்டிசு க்கு நடந்த விடயம் ஆனால் சித்திரவதைபற்றி எதுவுமே தெரியாது. ஆனால் கடைசியாக இறுதியாக நடந்த விடயம் இதுதான்.மென்டிஸ் உடன் நின்றவர்களில் ஒருவர் பிரிட்டிஷ், ஒருவர் மணி, ஒருவர் ஜார்ஜ் இன்னும் சில பேருடைய பெயர்கள் மறந்துவிட்டேன். ஆகவே அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் மேலதிகமாக இறுதியில் என்ன நடந்தது என்பதை சொன்னால் நல்லது.

ராஜீவ்

மீண்டும் தோழர்களுக்கு நன்றி



41A

எனது 41 ஆவது பதிவுக்கு, குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தள ராணுவ தளபதி விஜயபாலன் என்கிற மென்டிஸ் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பந்தமான பலவித கருத்துக்கள் இடம்பெற்றன.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் எனக்கு இளையோர் ஆக படித்த என்னை தெரிந்த என்னோடு நெருங்கிப் பழகிய விஜிய பாலன் என்ற மென்டிஸ், ஈபிஆர்எல்எப் சேர்ந்த டேவிட்சன், அவரது தம்பி ரோபின், எமது இயக்கத்தைச் சேர்ந்த சிவா ரஞ்சன் போன்ற பலர் வேறுவேறுஇயக்கங்களில் இருந்தாலும், எல்லோரும் மிக நட்புடன் பழகி வந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுடன் படித்து நெருங்கிப் பழகிய விடுதலைப் புலிகள்அமைப்பில் இயங்கிய சிவபரன் என்ற நண்பர் ,நட்பை விட துரோகம் தான் சிறந்தது என்று, நம்பிக்கை துரோகம் செய்து விஜயபாலன் என்ற மெண்டிசை பிடித்துப் போன செய்தியை, அக்காலகட்டங்களில் மென்டிஸ் ஓடு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஈபிஆர்எல்எஃப் டேவிட்சன் என் தம்பி ராபின் முழு விபரங்களையும் எனக்கு அனுப்பி வைத்துள்ளார் அதைக் கீழே தருகிறேன். நன்றி தம்பி.

மானிப்பாய் பிரதேசத்தில் EPRLF இயக்கத்தில் அரசியல் வேலை செய்துகொண்டிருந்த றொபின் என்ற பெயர் கொண்ட நான் (அதே இயக்கத்தில் செயற் பட்டுக்கொண்டிருந்த டேவிட்சனின் தம்பி) PLOTE போராளி மெண்டிஸ் அவர்களின் இறுதிக் காலத்தை பற்றி எனக்கு தெரிந்த சில செய்திகளை இங்கு ஆவணப்படுத்த வேண்டியது அவசியமானது எனக் கருதுகின்றேன் .1986 ம் ஆண்டு இறுதி பகுதியில். PLOTE இயக்கத்தின் மேல் மக்களும், PLOTE போராளிகளும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர். உள்ளியக்க மோதல்களால் பல போராளிகள் விரக்தியின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டனர். அனால் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற, உடுவிலை சேர்ந்த PLOTE போராளி மெண்டிஸ் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையும், மரியாதையும் இருந்தது. இதுவும் புலிகள், குறிப்பாக கிட்டு, அவர் மீது பொறாமைப்பட ஒரு காரணமாகவும் இருந்தது. ஒரு இயக்கத்துக்குள் உள்ளியக்க மோதல்கள் ஆரம்பமானவுடன் அந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக்கி, சக விடுதலை அமைப்புகளை அழித்தொழித்து வந்தார்கள், புலிகள். போராளி மெண்டிசையும் முடித்துவிட வேண்டும் என புலிகள் கங்கணம் கட்டினார்கள். குறிப்பாக கிட்டு முனைப்புக் காட்டினார்.

1986 மார்கழி 13ம் திகதி EPRLF மீதான தாக்குதலை ஆரம்பித்தார்கள் புலிகள். நானும் மற்றும் பல EPRLFபோராளிகளும் அன்று புலிகளால் கைது செய்யப்பட்டு அவர்களின் மோட்டார் ஷெல் உற்பத்தி செய்யும்,ஆனைக்கோட்டையில் அமைந்திருந்த அப்பையா முகாமில் தடுத்து தடுத்து வைக்கப்பட்டோம் .மறுநாள் எம்மை அவர்களின் சித்திரவதை, கொலை கூடமான, கந்தன் கருணை முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு நான் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டேன். அரசியல் பிரச்சாரத்தில் எம்மை வாய்க்கு வந்தபடி விமரிசிப்பீர்களோ எனக் கேட்டு, கிட்டு,வாசு,போன்ற பல புலிகள் எம்மை தாக்கினார்கள். Iron box ஐ சூடு படுத்தி எனது பின்புறத்தில் சூடு வைத்தார்கள்.நான் சித்திரவதைகளை அனுபவித்த அதே முகாமில் தான் போராளி மெண்டிசும் மற்றும் EPRLF போராளிகளான கபூர்,திலக் ,ஈஸ்வரன்,பெஞ்சமின் போன்ற பல நூற்றுக்கணக்கான தோழர்களும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவாதிகளை அனுபவித்துக்கொண்டிருந்தோம். போராளி மெண்டிஸ் பக்கத்து அறையில் கிட்டுவினால் மோசமாக தாக்கப்பட்ட காட்சிகளையும், அவரின் அழுகுரலையும் இப்போது நினைத்துப் பார்கின்ற போதும் கொதிப்படைகின்றேன். தோழர் பெஞ்சமின் EPRLF இயக்கத்தின் டாக்டர். அவரையும் சித்திரவதை செய்தார்கள். அவர் தனது சித்திரவதைக் காயங்களினால் அவஸ்தைபட்டுக்கொண்டிருந்த போதும்,எனக்கு வைக்கப்பட்ட Iron box சூட்டுக் காயம் அழுகிக்கொண்டு செல்கின்றது ,மருத்துவ உதவி கொடுக்கும்படி எனக்காக மனிதாபிமானக் குரல் கொடுத்தார். தோழர்கள் கபூர், பெஞ்சமின், ஈஸ்வரன்,மெண்டிஸ் போன்றோரை இந்த அரக்கர்கள் கொன்றுவிட்டார்கள்.அதிஷ்டவசமாக நான் விடுதலை செய்யப்பட்டேன் போராளி மெண்டிஸ் 1987 தைப் பொங்கல் தினத்துக்கு முன்னரே கொல்லப்பட்டுவிட்டார் என அறிகின்றேன் . விடுதலையான என்னை போராளி மெண்டிசின் சகோதரி சந்தித்தார்.

நடந்தவற்றை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார். மானிப்பாய் இந்துவில் கல்வி கற்ற சக பாடசாலை மாணவர்களான புலிகள் அமைப்பை சேர்ந்த சிவபரனும், PLOTE அமைப்பைச் சேர்ந்த மெண்டிசும் கல்லூரி காலங்களில் இருந்தே நண்பர்கள். மாறுபட்ட இயக்கங்களில் வேலைகள் செய்யும் போதும் நண்பர்களாக பழகியிருக்கின்றார்கள். மென்டிசின் வீடு நோக்கி புலிகளின் வாகனம் ஒன்று சென்றிருக்கின்றது. தப்பி ஓடுகின்றார் மெண்டிஸ் , அப்போது சிவபரனை கண்ட சகோதரி, உனது நண்பன் தான் வருகின்றன் ஓடாதே என்று சொல்ல , மெண்டிசும் , சிவபரனும் பேசியிருக்கின்றார்கள். தன்னை நம்பி வரும்படியும், விசாரித்துவிட்டு விட்டு விடுவதாகவும் கூறியிருக்கின்றான் சிவபரன் .அவனை நம்பி சென்ற மெண்டிஸ் பிணமாக கூட வீடு திரும்பவில்லை தைப் பொங்கலுக்குப் பின்னர் தமது வீட்டுக்கு வந்த புலிப்படையினர் மெண்டிஸின் மோதிரத்தை ஒப்படைத்து, மெண்டிஸின் படுகொலையையை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள், என்பதை அவர் சகோதரி மூலம் அறிந்தேன். அவர் கிட்டுவிடம் சென்று விசாரித்தபோது,மாத்தையா பொறுப்பெடுத்துவிட்டார், எல்லாம் அவரின் முடிவு தான் என்று ,மாத்தையாவின் தலையில் பழியை போட்டிருக்கின்றார் கிட்டு ..அக்கால கட்டத்தில் மாத்தையாவின் கை, யாழ்ப்பாணத்தில் ஓங்கியிருக்கவில்லை. சாகசங்களினாலும், உள்ளூர் வெளியூர், ஊடகங்களின் பரபரப்பு செய்திகளாலும்,யாழ்ப்பாணத்தில் கிட்டு பரபரப்பாக பேசப்பட்டார். எப்போதும் தாழ்வுச் சிக்கலில் தடுமாறும் பிரபாகரன் அவசரமாக யாழ்ப்பாணம் வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பாரிய தாக்குதல்களை நடாத்தி கிட்டுவின் பிரபல்யத்தை மட்டுப்படுத்த முயற்சியும் செய்தார். எதிர்பார்த்த .பலனை பெற முடியவில்லை. மாத்தையாவுடன் இணைந்து மேற் கொள்ளப்படவிருந்த நவற்குழி பௌஸர் தாக்குதல் தோல்வி கண்டது. விரக்த்தியடைந்த பிரபா - மாத்தையா பிரிவினரால் கிட்டு மீது கிரானைட் தாக்குதல் நடத்தப்பட்டது, கிட்டு காலை இழந்தார். ஒரு முறை லண்டனில் தட்டுக்குப் பெயர் போன கிட்டு, உரையாற்றும் போது, தனது கால் இழப்பிற்கு உள்வீட்டுச் சதியே காரணம் என்பதை, கிட்டு,பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் .

-நன்றி : வெற்றிச்செல்வனுக்கு


No comments:

Post a Comment